பாதுகாப்பு அமைச்சகம்

ரபேல் போர் விமானங்கள் விமானப்படையில் முறைப்படி இணைப்பு

Posted On: 10 SEP 2020 4:55PM by PIB Chennai

ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. அம்பாலா விமானப்படை தளத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர்  திரு.ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமிகு பிளாரன்ஸ் பார்லி ஆகியோர் கலந்து கொண்டனர். 
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், ‘‘ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படுவது, விமானப்படையில்  வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும், விமானப்படை வரலாற்றில் முக்கிய மைல் கல்’’ என்றும் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பில், ரபேல் ஒப்பந்தம் மிக முக்கியமான மாற்றம் என்றும், இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் நாடுகளுக்கு எச்சரிக்கை செய்தி என்றும் அவர் கூறினார். 
எந்த சூழ்நிலையிலும் நாட்டின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ளப்படாது என்றும் எதையும் சந்திக்க நாடு உறுதியுடன் இருப்பதாகவும் திரு.ராஜ்நாத் சிங் கூறினார். ‘‘சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுத்த, நமது ராணுவம் வலுப்படுத்தப்படுவதாகவும், சர்வதேச அமைதியை சீர்குலைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க இந்தியா விரும்பவில்லை’’ எனவும் திரு.ராஜ்நாத் சிங் கூறினார்.  இதே நிலைப்பாட்டை அண்டை நாடுகளிடமும், மற்றும் உலகின் மற்ற நாடுகளிடமும் எதிர்பார்ப்பதாக திரு. ராஜ்நாத் சிங் கூறினார். 
நாட்டின் பாதுகாப்புக்கு பிரதமர் முன்னுரிமை அளிப்பதாகவும், அவரது தொலைநோக்கு காரணமாகத்தான், பல தடைகளை தாண்டி நாம் இன்று ரபேல் போர் விமானங்களை பார்க்கிறோம் என திரு. ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். 
ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டது இந்தியா -பிரான்ஸ் நெருங்கிய உறவை பிரதிபலிப்பதாகவும், ராணுவ ஒத்துழைப்பில் பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாகவும் திரு.ராஜ்நாத் சிங் கூறினார். தொழில்நுட்ப பரிமாற்றம் ஒப்பந்தம் மூலம், 6 ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள், மசகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், முதல் ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல், ஐஎன்எஸ் கல்வாரி கடந்த 2017ம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டதாகவும் திரு.ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் 


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653024 



(Release ID: 1653105) Visitor Counter : 230