பிரதமர் அலுவலகம்

தேசியக் கல்விக் கொள்கை பற்றிய ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 07 SEP 2020 2:16PM by PIB Chennai

வணக்கம்!

மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர், எனது சக அமைச்சர்கள் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், சங்சய் தோத்ரே, மதிப்பிற்குரிய அனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள்,  தேசிய கல்வி கொள்கையை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றிய டாக்டர்.கஸ்தூரி ரங்கன் மற்றும் அவரது குழுவினர், பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் மற்றும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் வணக்கம்.

முதலில் மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய கல்வி கொள்கையைப் பொருத்தவரை, இந்த மாநாடு மிகவும் தொடர்புடையது மற்றும் முக்கியமானது. இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஒட்டு மொத்த கல்வி அனுபவம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உடையது. உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

நாட்டின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், கல்வி கொள்கை மற்றும் கல்வி முறை மிக முக்கியமானது. கல்வி முறைக்கான பொறுப்பில் மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்புடையவை. ஆனால், கல்வி கொள்கையில் அரசின் தலையீடு குறைவாக இருக்க வேண்டும் என்பதும் உண்மை. கல்வி கொள்கையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபடும்போதுதான், அதன் தரம் அதிகரிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கைக்கான பணி 4-5 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள், கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் அளித்தனர். கல்வி கொள்கை வரைவுக்காக, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
அனைத்து தரப்பினரின் தீவிர மற்றும் விரிவான ஆலோசனைக்குப்பின், வெளிவந்த கல்வி கொள்கைக்கு அனைத்து இடங்களிலும் வரவேற்பு இருக்கிறது.

கிராமத்தில் உள்ள ஆசிரியராகட்டும், பிரபல கல்வியாளர்களாக இருக்கட்டும், அனைவருமே, இந்த கல்விக் கொள்கையை தங்கள் சொந்த கல்விக் கொள்கையாக கருதுகின்றனர். இந்த சீர்திருத்தங்கள், முந்தைய கல்வி கொள்கையிலேயே இடம் பெற்றிருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். இதனால்தான் அனைவரும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தேசியக் கல்விக் கொள்கை பற்றியும், அதை அமல்படுத்துவது பற்றியும் நாடு முழுவதும் விரிவான விவாதம் நடக்கிறது. இது அவசியமானது. 21ம் நூற்றாண்டு இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதாரத்துக்கு இந்த கல்விக் கொள்கை புதிய வழிகாட்டுதலை அளிக்கவுள்ளது. தற்சார்பு இந்தியாவுக்கும் இந்த கல்விக் கொள்கை உருவம் கொடுக்கும். தேசிய கல்விக் கொள்கையில் உள்ள வேறுபாடுகளை, உங்களில் பெரும்பாலானோர் படித்திருப்பீர்கள். அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் தீர்வு காணப்பட்டவுடன் இந்த தேசிய கல்விக் கொள்கையை நாடு வெற்றிகரமாக அமல்படுத்தும்.

உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்கால தேவைக்கேற்ப அறிவிலும், திறமையிலும், நமது இளைஞர்களை  இந்த கல்விக் கொள்கை தயார்படுத்தும். படிப்பதைவிட கற்றலிலும், பாடத்திட்டத்தை தாண்டி விவேகமாக சிந்திக்க வைப்பதிலும் இந்த புதிய கல்விக் கொள்கை கவனம் செலுத்துகிறது. அடிப்படை கற்றல் மற்றும் மொழிகளிலும் இது கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு மாணவரையும் இந்த கல்விக் கொள்கை மேம்படுத்தும்.

பல ஆண்டுகாலம் பழமையான நமது கல்விக் கொள்கையில் இருந்த குறைபாடுகள் எல்லாம் விரிவான ஆலோசனைக்குப்பின் புதிய கல்விக் கொள்கையில் நீக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் புத்தகச் சுமை, வாரிய தேர்வுகளுக்கு பெற்றோர்கள் மற்றும் சமூகம் கொடுக்கும் அழுத்தம் ஆகியவை குறித்து நீண்ட காலமாக விவாதங்கள் நடந்து வந்தன. இந்தப் பிரச்னைகளுக்கு புதிய கல்விக் கொள்கை தீர்வு கண்டுள்ளது.

குழந்தைகள், தங்கள் கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்துடன் அடிப்படை நிலையில் தொடர்புடன் இருக்கும்போது, அவர்களின் கல்வி எளிதாகவும், தீவிரமாகவும் இருக்கும். மாணவர்கள் மீதான அழுத்தம் எல்லாம் புதிய கல்விக் கொள்கையில் அகற்றப்பட்டுள்ளன.

தற்போது நமது இளைஞர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப படிக்க முடியும். முன்பு மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட  ஆண்டு கால படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.  சூழ்நிலை காரணமாக சிலரால் இந்தப் படிப்பை முழுவதும் முடிக்க முடியால் பாதியிலேயே கைவிடும் நிலை இருந்தது. இந்தப் பிரச்னைகளுக்கும் புதிய கல்வி முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு நமது இளைஞர்கள் திறமைசாலியாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை பருவத்திலிருந்தே தொழில்கல்வி கற்றுகொடுத்தால், எதிர்காலத்துக்கு நமது இளைஞர்களை தயார்படுத்த முடியும். செய்முறை கல்வி, இந்தியாவில் நமது இளைஞர்களின் வேலை பார்க்கும் திறனை மட்டும் அதிகரிக்காமல், சர்வதேச வேலை வாய்ப்புகளில் பங்கு பெறுவதையும் அதிகரிக்கும்.

சர்வதேச கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் மையங்களை அமைக்க, புதிய கல்வி கொள்கை வழி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன் பெறுவர். அறிவு திறன் மிக்கவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பிரச்னைக்கும் தீர்வு காணப்படும்.

புதிய முறையைக் கொண்டு வரும்போது, அதில்  பல சந்தேகங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தால், அவர்களின் படிப்பு, வேலை எப்படியிருக்கும் என பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்படலாம்? புதிய மாற்றத்துக்கு மாணவர்கள் எப்படி தயாராவார்கள்? என பேராசிரியர்கள் மனதில் சந்தேகம் எழலாம். புதிய கொள்கையை அமல்படுத்துவது பாடத்திட்டத்தை உள்ளூர் மொழிகளில் தயாரிப்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. அனைத்து கேள்விகளும் முக்கியமானவை.

ஒவ்வொரு கேள்விக்கும் விடை காண, நாங்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக கல்வி அமைச்சகத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்கள் திறந்த மனதுடன் கேட்கப்படுகின்றன. இறுதியில் அனைத்து சந்தேகங்களையும் நாம் தீர்க்க வேண்டும். இதை அமல்படுத்துவதற்காக, நாம் முடிந்த அளவு இணக்கமாக செயல்பட வேண்டும்.

 

இந்த கல்விக் கொள்கை அரசின் கல்வி கொள்கை அல்ல. இது நாட்டின் கல்விக் கொள்கை. 30 ஆண்டுகளுக்குப்பின் வந்துள்ள இந்த கல்விக் கொள்கை, நாட்டின் விருப்பங்களைத் தெரிவிக்கிறது.

தொழில்நுட்பம் கிராமங்களுக்கும் விரிவடைந்துள்ளதால்,  நாட்டின் ஏழை மக்களும், தற்போது தகவல்களையும், அறிவையும் பெறுவது அதிகரித்துள்ளது. பல இளைஞர்கள்  சேனல்கள் மற்றும் வீடியோ தளங்களை இயக்குகின்றனர். ஒவ்வொரு பாடத்துக்கும் சிறப்பான பயிற்சி கிடைக்கிறது. தொழில்நுட்பம் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடைந்துள்ளதால், மண்டல மற்றும் சமூக குறைந்துள்ளது. ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பத் தீர்வுகளை முடிந்த அளவு மேம்படுத்த வேண்டியது நமது பொறுப்பு.

உயர்கல்வியில் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் குறைபாடுகள் இன்றி கொண்டு வருவதற்கு, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உயர் கல்விக்கான ஒழுங்குமுறைகள், இந்த கல்விக் கொள்கை மூலம் மேலும் எளிதாக்கப்படும்.

தேசிய கல்விக் கொள்கையை முழுவதுமாக புரிந்து அமல்படுத்த வேண்டியது நமது அனைவரின் ஒட்டு மொத்த பொறுப்பு. இது தொடர்பாக உங்கள் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் செப்டம்பர் 25ம் தேதிக்கு முன்பாக இணையவழி கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். தேசிய கல்விக் கொள்கை பற்றி நல்ல புரிதல் ஏற்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இந்த மாநாட்டில் உங்கள் நேரத்தை செலவிட்டதற்காக நான் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி!!!

************



(Release ID: 1652243) Visitor Counter : 222