உள்துறை அமைச்சகம்

மூன்றாவது தேசிய ஊட்டச்சத்து மாதத்தில், ஊட்டச்சத்து குறைபாடில்லாத இந்தியாவுக்கு பங்களிக்க அனைத்து மக்களும் சபதமெடுக்க வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வேண்டுகோள்

Posted On: 07 SEP 2020 2:23PM by PIB Chennai

மூன்றாவது தேசிய ஊட்டச்சத்து மாதத்தில், ஊட்டச்சத்து குறைபாடில்லாத இந்தியாவுக்கு பங்களிக்க அனைத்து மக்களும் சபதமெடுக்க வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தனது சுட்டுரை பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ள அவர், "குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை உறுதி செய்வது பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்னுரிமையாக என்றுமே இருந்து வருகிறது", என்றார்.

 

"பிரதமரால் 2018-இல் தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து திட்டம், நாட்டிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டை விரட்டுவதில் வரலாறு காணாத பணியை செய்கிறது", என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

 

"இந்த ஊட்டச்சத்து மாதம் 2020-இல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்குவதற்கான தீவிர பிரச்சாரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு கவனம் செலுத்தும்," என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.

 

"இந்தத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் சபதமெடுத்து, ஊட்டச்சத்து குறைபாடில்லா இந்தியா உருவாக நமது பங்கினை அளிப்போம்," என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

 

செப்டம்பர் 2020-இல் கொண்டாடப்படும் தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் நோக்கம், குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் களைவதும், பெண்கள் மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதுமாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651945

***********(Release ID: 1651986) Visitor Counter : 136