பிரதமர் அலுவலகம்

ஜான்சி பகுதியில் உள்ள ராணி லட்சுமிபாய் மத்திய வேளாண் பல்கலைக் கழகத்தின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள் திறப்பு விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 29 AUG 2020 3:38PM by PIB Chennai

நமது நாட்டின் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் அவர்களே, மத்திய அமைச்சரவை சகாக்களே, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மற்ற விருந்தினர்களே, அனைத்து மாணவ நண்பர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணொலி நிகழ்ச்சியில் இணைந்துள்ள எனது அருமை சகோதர, சகோதரிகளே.

ராணி லட்சுமிபாய் மத்திய வேளாண்மை பல்கலைக் கழகத்தின் புதிய கல்லூரி மற்றும் நிர்வாக கட்டிடங்களுக்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு பட்டங்களைப் பெறும் இளைஞர்கள், வேளாண்மைத் துறையின் மேம்பாட்டுக்காக பணியாற்ற உள்ளனர். மாணவர்களுடன் நான் கலந்துரையாடியபோது, அவர்கள் மத்தியில் ஆர்வம், கொண்டாட்டம் மற்றும் நம்பிக்கை இருப்பதை என்னால் கண்டு உணர முடிந்தது. புதிய கட்டிடம் கட்டப்பட்ட பிறகு, அதிக வசதிகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வசதிகள் மூலம், அதிக அளவில் செயல்பாடுகளை மேற்கொள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

நண்பர்களே, “எனது ஜான்சியை என்னால் விட்டுத்தர முடியாது” என்று பண்டில்காண்ட் நிலத்திலிருந்து ஒரு முறை ராணி லட்சுமிபாய் முழக்கமிட்டார். “எனது ஜான்சியை நான் விட்டுத்தர மாட்டேன்,” என்ற இந்த வாக்கியத்தை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஜான்சியிலிருந்து, பண்டில்காண்ட் நிலத்திலிருந்து இன்று புதிய முழக்கம் தேவைப்படுகிறது. அதாவது, “எனது ஜான்சி – எனது பண்டில்காண்ட்”. இதனை கூறும்போதே அனைத்து சக்திகளையும் வழங்கும். தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்ய புதிய அத்தியாயத்தை எழுதும்.

இதில், வேளாண்மை மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. வேளாண்மையில் சுயசார்பு குறித்து நாம் பேசும்போது, உணவுதானியங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இது கிராமங்களின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கான சுயசார்பு குறித்தது. நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு மதிப்புகூட்டி, உலக அளவிலான சந்தைகளுக்கு கொண்டுசெல்வதே திட்டம். வேளாண்மைத் துறையில் சுயசார்பை ஏற்படுத்துவதில், விவசாயிகளை உற்பத்தியாளர்களாக மட்டுமன்றி, தொழில்முனைவோராக மாற்றுவதே நோக்கம். தொழில் நிறுவனங்களைப் போன்று, விவசாயிகள் மற்றும் வேளாண்மை வளரும்போது, கிராமங்கள் மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதிகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புகள் பெருமளவில் ஏற்படும்.

நண்பர்களே, இந்த உறுதியை மனதில்கொண்டு, வேளாண்மைத் துறையில் பல்வேறு வரலாற்றுப்பூர்வமான சீர்திருத்தங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் மண்டி (சந்தை) சட்டங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் சட்டம் இயற்றியது போன்ற மிகப்பெரும் நடவடிக்கைகள், விவசாயிகளை துளிர்விடச் செய்துள்ளன. மற்ற எந்த துறைகளையும் போன்று, தனது பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும் நாட்டின் எந்தப் பகுதியிலும் விளைபொருளை விவசாயிகளால் விற்பனை செய்ய முடியும்.

அதோடு, கிராமங்களுக்கு அருகே தொழில் நிறுவனங்களின் தொகுப்பை உருவாக்கும் விரிவான திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சிறந்த கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாயில் சிறப்பு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. சேமிப்பதற்கான நவீன கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், பதப்படுத்துதல் தொடர்பான தொழில் நிறுவனங்களை உருவாக்கவும் நமது விவசாய உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இந்த நிதியம் உதவும். வேளாண்மைத் துறையில் படித்துவரும் இளைஞர்கள் மற்றும் அவர்களது மற்ற நண்பர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். புதிய நிறுவனங்களை தொடங்குவதற்கான புதிய வாய்ப்புகளும் ஏற்படும்.

நண்பர்களே, விதைகள் முதல் சந்தைகள் வரை அனைத்தையும் தொழில்நுட்பம் மற்றும் நவீன ஆராய்ச்சியுடன் இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஆராய்ச்சி நிறுவனங்களும், வேளாண்மை பல்கலைக் கழகங்களும் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. 6 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் ஒரே ஒரு மத்திய வேளாண்மை பல்கலைக் கழகம் இருந்தது. இன்று, நாட்டில் மூன்று மத்திய வேளாண்மை பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, மூன்று தேசிய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதாவது, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் – ஜார்க்கண்ட், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் – அசாம் மற்றும் பீகாரின் மோட்டிஹரி பகுதியில் ஒருங்கிணைந்த வேளாண்மைக்கான மகாத்மா காந்தி நிறுவனம் ஆகியவை செயல்படுகின்றன. இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பதோடு மட்டுமன்றி, உள்ளூர் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வசதிகளையும் அளிக்கின்றன. மேலும், விவசாயிகளின் திறனை மேம்படுத்த உதவுகின்றன.

அதோடு, சூரிய மின்சார பம்ப்கள், சூரிய மரம், உள்ளூர் தேவைக்கு ஏற்ப விதைகளை உருவாக்குவது, நுண்ணீர் பாசனம், சொட்டுநீர்ப் பாசனம் போன்ற பல்வேறு வகையான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வசதிகளை மிகப்பெரும் அளவில் விவசாயிகளுக்கு, குறிப்பாக பண்டல்காண்ட் பகுதி விவசாயிகளுக்கு கொண்டுசேர்ப்பதில் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். வேளாண்மை மற்றும் அதுதொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் மற்றொரு உதாரணத்தையும் அண்மையில் கண்டுள்ளோம்.

பண்டில்காண்ட் பகுதியில் மே மாதத்தில் பெருமளவில் வெட்டுக்கிளிகள் தாக்கம் இருந்ததை நீங்கள் நினைவுகூர்ந்து பாருங்கள். வெட்டுக்கிளிகள் பறந்துவந்து, பல மாத உழைப்பை அளிப்பதை கேள்விப்பட்டு, விவசாயிகளால் தூங்க முடியாமல் இருந்தது. விவசாயிகளின் பயிர்கள் மற்றும் காய்கறிகள் சேதப்படுத்தப்படுவது உறுதியாக இருந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பண்டில்காண்ட் பகுதியை வெட்டுக்கிளிகள் தாக்கியதாக என்னிடம் தெரிவித்தனர். இல்லாவிட்டால், வெட்டுக்கிளிகள் இங்கு வராது என்றும் தெரிவித்தனர். 

நண்பர்களே, உத்தரப்பிரதேசம் மட்டுமன்றி, நாட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டன. வழக்கமான மற்றும் பாரம்பரிய முறைகளின்படி, வெட்டுக்கிளிகளின் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. மிகவும் அறிவியல்பூர்வ நடவடிக்கைகள் மூலம், இந்தத் தாக்குதல்களிலிருந்து இந்தியா தன்னை காத்துக் கொண்டது. கொரோனாவால் இந்தியா பாதிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்திய ஊடகங்களில் ஒரு வார காலத்துக்கு நேர்மறை விவாதங்கள் நடைபெற்றிருக்கும். அந்த அளவுக்கு மிகப்பெரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களிலிருந்து விவசாயிகளின் பயிர்களைப் பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பத்துக்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. விவசாயிகளுக்கு விரைவில் தகவல் சென்றுசேரும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெட்டுக்கிளிகளைக் கொல்லவும், அழிக்கவும் பெருமளவில் சிறப்பு தெளிப்பு இயந்திரங்கள் கூட நம்மிடம் இல்லை. ஏனெனில், இதுபோன்ற தாக்குதல்கள் பொதுவாக நடைபெறுவதில்லை. பல டஜன் நவீன இயந்திரங்களை அரசு உடனடியாக வாங்கி, மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்தது. டேங்கர்கள், வாகனங்கள், ரசாயனங்கள் அல்லது மருந்துகள் என எதுவாக இருந்தாலும் அனைத்தையும் நாங்கள் ஈடுபடுத்தினோம். இதன்மூலம், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படக் கூடாது என நடவடிக்கை எடுத்தோம். 

மிகப்பெரும் மரங்களைப் பாதுகாப்பதற்காக ரசாயனங்களை பெருமளவிலான பகுதிகளில் தெளிப்பதற்காக டஜன் கணக்கில் டுரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன. ரசாயன மருந்துகளை தெளிப்பதற்காக ஹெலிகாப்டர்களும் கூட ஈடுபடுத்தப்பட்டன. இந்த அனைத்து முயற்சிகள் மூலம், பெருமளவில் சேதம் ஏற்படாத வகையில் விவசாயிகளை இந்தியாவால் பாதுகாக்க முடிந்தது.

நண்பர்களே, ஒரு வாழ்க்கை ஒரு இலக்கு என்ற அடிப்படையில் இளம் ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இதன்மூலமே, நாட்டின் வேளாண்மையில் டுரோன் தொழில்நுட்பங்கள், செயற்கை புலனறிவு தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன விவசாயக் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த முடியும்.

கடந்த 6 ஆண்டுகளில், விவசாயப் பணிகளுக்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கிராம அளவில் சிறு விவசாயிகளுக்கு அறிவியல் ஆலோசனை கிடைக்கச் செய்யவும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளாக அளவில் செயல்படும் வல்லுநர்களை களத்தில் மேலும் தீவிரமாக செயல்படச் செய்யும் வகையிலான சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதில், உங்களது பல்கலைக் கழகத்துக்கும் மிகப்பெரும் பங்களிப்பு உண்டு.

நண்பர்களே, வேளாண்மை தொடர்பான கல்வி மற்றும் அதன் செயல்முறைகளை பள்ளிகளுக்கு கொண்டுசெல்ல வேண்டியதும் அவசியம். கிராமங்களில் உள்ள நடுத்தரப் பள்ளிகளில் வேளாண்மையை ஒரு பாடமாக அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம், இரண்டு பலன்கள் உண்டு. ஒன்று, கிராம அளவில் குழந்தைகளுக்கு விவசாயம் தொடர்பான இயற்கையான புரிந்துணர்வு விரிவுபடுத்தப்படும். இரண்டாவதாக, விவசாயம் மற்றும் அதுதொடர்பான தொழில்நுட்பம், வியாபாரம், வர்த்தகம் குறித்து தங்களது குடும்பத்தினருக்கு மேலும் பல்வேறு தகவல்களை குழந்தைகளால் அளிக்க முடியும். இது நாட்டில் வேளாண் தொழில் துறையையும் ஊக்குவிக்கும். புதிய தேசிய கல்விக் கொள்கையில் தேவையான சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

லட்சுமிபாய் காலத்திலிருந்து மட்டுமன்றி, பண்டல்காண்ட் எப்போதுமே சவால்களை எதிர்கொள்வதில் முன்னணியில் இருந்து வருகிறது. இதுவே எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்வதற்கான அடையாளமாக பண்டல்காண்டை திகழச் செய்கிறது.

கொரோனாவுக்கு எதிராகவும் பண்டல்காண்ட் பகுதி மக்கள் உறுதிபூண்டுள்ளனர். மக்களுக்கு குறைந்தபட்ச பாதிப்புகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக அரசும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை மக்களின் அடுப்பு தொடர்ந்து எரிவதை உறுதிப்படுத்துவதற்காக, நாட்டின் மற்ற பகுதிகளில் வழங்கப்பட்டதைப் போன்றே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோடிக்கணக்கான கிராமப்புற மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பண்டல்காண்ட் பகுதியைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான சகோதரிகளின் மக்கள் நிதி கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் ரூ.700 கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. பண்டல்காண்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான குளங்கள் சீர்செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய குளங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தனர்.

நண்பர்களே, தேர்தலுக்கு முன்னதாக, ஜான்சி பகுதிக்கு நான் வந்தபோது, முந்தைய 5 ஆண்டுகள் கழிவறைக்கானது, அடுத்த 5 ஆண்டுகள் நீருக்கானது என்று பண்டல்காண்ட் பகுதி சகோதரிகளிடம்  தெரிவித்தேன். சகோதரிகளின் ஆசியால், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கச் செய்யும் பிரச்சாரம் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. நீர் ஆதாரங்களைக் கட்டமைப்பது மற்றும் குழாய்களை அமைப்பதற்கான பணிகள் பண்டல்காண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்தப் பிராந்தியத்துக்கு ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் 500 குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தபிறகு, பண்டல்காண்ட் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாக பயனடைய உள்ளன. பண்டல்காண்ட் பகுதியில் நீரின் இருப்பை அதிகரிக்கச் செய்ய, அடல் நிலத்தடி நீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜான்சி, மகோபா, பண்டா, ஹமிர்பூர், சித்ரகூட், லலித்பூர் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் நீர் இருப்பை மேம்படுத்த ரூ.700 கோடிக்கும் மேலான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நண்பர்களே, பண்டல்காண்டின் ஒரு பகுதியில் பெட்வா ஆறும், மற்றொரு பகுதியில் கென் ஆறும் ஓடுகின்றன. யமுனை அன்னை வடக்கு நோக்கி செல்கிறது. ஆனால், இந்த ஆறுகளால் ஏற்படும் பலன்கள் ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்ற அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. கென்-பெட்வா ஆறுகள் இணைப்புத் திட்டத்தின் மூலம், இந்தப் பிராந்தியத்தின் நிலை மாற்றியமைக்கப்படும். இந்த கோணத்தில் இரு மாநிலங்களின் அரசுகளுடன் தொடர்ந்து இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். போதுமான அளவில் நீர் கிடைத்துவிட்டால், இதுவரை இல்லாத அளவுக்கு பண்டல்காண்ட் பகுதி வாழ்க்கை மாறிவிடும் என்று நான் முழுவதுமாக நம்பிக்கை கொண்டுள்ளேன்.

பண்டல்காண்ட் அதிவிரைவு சாலை அல்லது பாதுகாப்பு வழித்தடம் என எதுவாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மூலம், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பாதுகாப்புத் துறையில் நாட்டை தன்னிறைவு பெறச் செய்வதற்காக வீரம் நிறைந்த ஜான்சி பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள் மிகப்பெரும் அளவில் மேம்படுவதற்கான நாள் தொலைவில் இல்லை. இந்த வழியில், “வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க மற்றும் விஞ்ஞானம் வாழ்க” என்ற மந்திரம் நான்கு திசைகளிலும் எதிரொலிக்கும். பண்டல்காண்ட் பகுதியின் பழமையான அடையாளத்தையும், இந்த நிலத்தின் பெருமையையும் வலுப்படுத்த மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் உறுதிபூண்டுள்ளன.

எதிர்காலத்துக்கான வாழ்த்துக்களுடன், பல்கலைக் கழகத்தின் இந்த புதிய கட்டிடத்துக்காக உங்கள் அனைவருக்கும் பல முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

6 அடி இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம் என்ற மந்திரத்தை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால், நாடு பாதுகாப்பாக இருக்கும்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

நன்றி!

 

****

 



(Release ID: 1650275) Visitor Counter : 190