நிதி அமைச்சகம்

இந்தியாவில் கோவிட்-19 நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக சுகாதாரத் துறைக்கான அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியாக ஜப்பான் ரூ .3,500 கோடி (தோராயமாக) வழங்க உள்ளது

Posted On: 31 AUG 2020 6:23PM by PIB Chennai

ஜப்பானிய அரசு கோவிட்-19 நெருக்கடி அவசரகால மறுமொழி ஆதரவுக்காக ஜப்பானின் JPY50 பில்லியனை (தோராயமாக ரூ. 3,500 கோடி) அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவிக் கடனாக வழங்கியுள்ளது. இந்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர்.சி.எஸ்.மோகபத்ரா, மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு.சுசுகி சடோஷி இடையே கோவிட்-19 நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக சுகாதாரத்துறை திட்டக்கடனுக்கான குறிப்புகள் இன்று பரிமாறப்பட்டன.

குறிப்புகள் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, இந்தத் திட்டக்கடனுக்கான கடன் ஒப்பந்தம் பொருளாதார விவகாரத்துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர்.சி.எஸ்.மோகபத்ரா, இந்திய அரசு நிதி அமைச்சகம் மற்றும் புதுதில்லி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பிரதிநிதி திரு.கட்சுவோ மாட்சுமோட்டோ ஆகியோர் இடையே கையெழுத்தானது.

கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் முயற்சிகளை ஆதரிப்பதும், எதிர்காலத் தொற்றுநோய்களை நிர்வகிக்க சுகாதார அமைப்பைத் தயாரிப்பதும், தொற்றுநோய்களுக்கு எதிராக இந்தியாவின் சுகாதார அமைப்புகளின் பின்னடைவை சரிப்படுத்துவதும் இந்தத் திட்டக்கடன் நோக்கமாகும்.

கூடுதலாக, பொருளாதார விவகாரத் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர்.சி.எஸ்.மோகபத்ராவுக்கும், மற்றும் ஜப்பானின் தூதர் திரு. சுசுகி சடோஷிக்கும் இடையே, ஜப்பான் அரசிடமிருந்து 1 பில்லியன் JPY (தோராயமாக ரூ .70 கோடி) இந்தியாவின் மானிய உதவிக்கான குறிப்புகளும் இன்று பரிமாறப்பட்டன.

ஜப்பான் அரசாங்கத்தின் இந்த மானிய உதவி இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ முறையை வலுப்படுத்த மருத்துவ உபகரணங்களை வழங்க வழிசெய்யும். தன் மூலம் முக்கியமாக, கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தீவிரமான நோயாளிகளை நிர்வகிப்பதற்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்தும்.

இந்தியாவும் ஜப்பானும் 1958 முதல் பயனுள்ள நீண்ட இருதரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பின் வரலாற்றைக் கொண்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு பலமடைந்து ஒருங்கிணைந்து கூட்டாக வளர்ந்துள்ளது. இது இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டுறவை மேலும் பலப்படுத்துகிறது.

***********



(Release ID: 1650221) Visitor Counter : 259