தேர்தல் ஆணையம்
திரு. பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தேர்தல் ஆணையம் இரங்கல்
Posted On:
31 AUG 2020 6:41PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி மறைவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துயரத்தை வெளியிட்டுள்ள ,தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா, ‘’ அவரது மறைவின் மூலம், நாடு அனைவராலும் மதிக்கப்பட்ட கற்றறிந்த அறிஞர் மற்றும் பொருளாதார, அரசியல் சாசன, வரலாற்று விவகாரத்தில் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்த ராஜரிஷியை இழந்துவிட்டது’’என்று கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்துடன் திரு. பிரணாப் முகர்ஜிக்கு இருந்த குறிப்பிடத்தக்க தொடர்பு பற்றி குறிப்பிட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.அரோரா, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று, திரு. பிரணாப் முகர்ஜி, தேர்தல் ஆணையம் 2020 ஜனவரி 23-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த சுகுமார் சென் முதலாவது நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியதை நினைவு கூர்ந்துள்ளார். அதேபோல, குடியரசுத் தலைவராக அவர் இருந்தபோது, 2016,2017-ஆம் ஆண்டுகளில் தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உரை நிகழ்த்தியதையும் திரு.அரோரா குறிப்பிட்டுள்ளார்.
‘’ ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்குக் கடவுள் வழங்கட்டும் ‘’ என திரு.அரோரா கூறியுள்ளார்.
****
(Release ID: 1650172)
Visitor Counter : 230