குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காதி முகக்கவச உறைகளுக்கு நல்ல வரவேற்பு; செஞ்சிலுவை சங்கத்திடம் இருந்து மீண்டும் 10.5 லட்சம் முகக்கவச உறைகளுக்கு கொள்முதல் ஆணை
Posted On:
31 AUG 2020 5:38PM by PIB Chennai
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (கே.வி.ஐ.சி.) 10.5 லட்சம் முகக்கவச உறைகளுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் இருந்து மீண்டும் கொள்முதல் ஆணையைப் பெற்றுள்ளது. காதி மூலம் தயாரிக்கப்படும் உயர் தரத்திலான முகக்கவச உறைகளுக்கு வரவேற்பு அதிகரிப்பதை இது காட்டுகிறது. ஏற்கெனவே 1.80 லட்சம் முகக் கவச உறைகளுக்கு ஆர்டர் கிடைத்து அதில் 1.60 லட்சம் உறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் குறைவான இடைவெளியில் புதிய ஆர்டர் கிடைத்துள்ளது.
சமீபத்தில் கிடைத்த இந்தப் புதிய ஆர்டரின் மதிப்பு ரூ.3.30 கோடி. இதற்கான முகக்கவச உறைகள் இந்த வாரத்தில் இருந்தே வழங்கப்படும். முந்தைய ஆர்டரின்படி முகக் கவச உறைகள் வழங்குவது ஓரிரு தினங்களில் நிறைவு செய்யப்படும். முதலாவது ஆர்டரின் போது அளிக்கப்பட்டதைப் போன்றதாகவே இப்போது வழங்கப்படும் முகக்கவச உறைகளும் இருக்கும். காதி மூலம் தயாரித்த முகக்கவச உறைகளின் அருமையான தரம் மற்றும் உரிய காலத்தில் வழங்கியது ஆகிய காரணங்களால், புதிய ஆர்டர் கிடைத்துள்ளது.
முகக்கவச உறை தயாரிப்பு நடவடிக்கைகள் மூலம், நீடித்தத் தொழில் வாய்ப்பை உருவாக்கித் தருவதில் கே.வி.ஐ.சி. மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார். கொரோனா நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, முகக் கவச உறை சிறப்பாக இருப்பதால், அவற்றை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் முயற்சியால் நாடு முழுக்க கைத்தொழில் செய்வோருக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
காதி மூலம் பணியாற்றும் சுமார் 50 ஆயிரம் கைத்தொழில் கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதால் உள்ளூர் உற்பத்தியில் இது பெரிய பலனைத் தருவதாக இருக்கும். இந்த ஆர்டரை நிறைவு செய்வதற்கு கையால் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் மீட்டர் அளவுக்கான காதித் துணி தேவைப்படும். பல்வேறு மாநிலங்களில் உள்ள காதி நிறுவனங்களிடம் இருந்து இவை பெறப்படும். நூற்பு மற்றும் நெய்தல் பணிகளுக்கு இது உத்வேகம் தருவதாக இருக்கும். அதன்மூலம் கைத்தொழில் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.
செஞ்சிலுவைச் சங்கம் அளித்துள்ள புதிய ஆர்டர் குறித்து கே.வி.ஐ.சி. தலைவர் திரு. வினய்குமார் சக்சேனா வரவேற்பு தெரிவித்தார். ``பொருளாதார சுதந்திரத்தின் கருவியாக இருப்பது ராட்டை. நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்திருப்பது நூற்பு மற்றும் நெய்தல் செயல்பாடுகள் அதிகரிக்கும். காதி கைத்தொழில் கலைஞர்களுக்கு நீடித்த பொருளாதார வசதியை அளிக்க இது உதவிகரமாக இருக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.
இதுவரையில் கே.வி.ஐ.சி.க்கு கிடைத்த அதிக அளவிலான முகக்கவச உறைக்கான கொள்முதல் ஆணையாக இது உள்ளது. இதற்கு முன்பு, முடக்கநிலை காலத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு 7 லட்சம் முகக்கவச உறைகளை கொள்முதல் செய்தது. குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சகங்களிடம் இருந்து கே.வி.ஐ.சி.க்கு மீண்டும் கொள்முதல் ஆணைகள் கிடைத்துள்ளன. கே.வி.ஐ.சி. இணையதளம் மூலமாக பொது மக்களிடம் இருந்தும் கொள்முதல் ஆணைகள் கிடைத்துள்ளன.
செஞ்சிலுவைச் சங்கத்துக்கான முகக்கவச உறைகள், இரட்டைப் பின்னல் கொண்ட கையால் நெய்த 100 சதவீதப் பருத்தித் துணியால் ஆனவை. சிவப்பு விளிம்புடன் உள்ள பழுப்பு நிறத்தில் இருக்கும். அவர்களுக்கு அளித்த சாம்பிள்களின் அடிப்படையில், செஞ்சிலுவை சங்கத்துக்கென விசேஷமாக இந்த இரட்டை அடுக்குப் பருத்தி முகக்கவச உறைகளை கே.வி.ஐ.சி. வடிவமைத்துள்ளது. இடதுபுறம் செஞ்சிலுவை சங்கத்தின் அடையாள இலட்சினையும், வலது புறம் காதி இந்தியா பெயரும் அச்சிடப்பட்டுள்ளது. மற்ற காதி முகக்கவச உறைகளைப் போலவே, செஞ்சிலுவைச் சங்கத்துக்குத் தயாரிக்கப்படும் முகக்கவச உறைகளும் கழுவக் கூடியதாக, மீண்டும் பயன்படுத்தக் கூடியதாக, தோலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததாக, மக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
******
(Release ID: 1650165)
Visitor Counter : 239