பிரதமர் அலுவலகம்
பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு பாரதம் குறித்த கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
27 AUG 2020 7:06PM by PIB Chennai
எனது அமைச்சரவை சகா, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்களே, முப்படைகளின் தலைவர்களே, இந்திய அரசின் மூத்த அதிகாரிகளே மற்றும் தொழில் துறை நண்பர்களே, வணக்கம்.
இந்திய ராணுவத் தளவாட உற்பத்தியில் தொடர்புடைய அனைத்து முக்கிய பங்குதாரர்களும் இங்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்ததற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களையும், அவரது ஒட்டுமொத்த குழுவினரையும் நான் பாராட்டுகிறேன். இந்த அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியின் வெளிப்பாடு பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதற்கான நமது முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கும். இந்த அறிவுப்பூர்வமான கூட்டு நிகழ்ச்சியில் நீங்கள் வழங்கியுள்ள ஆலோசனைகள் வரும் நாட்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் லட்சியத்தை அடைவதில் உறுதியாக உள்ளார். அவரது தொய்வில்லாத முயற்சிகள் நல்ல பலன்களை அளிக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன்.
நண்பர்களே, கடந்த பல வருடங்களாக உலகின் பாதுகாப்புத் தளவாடங்கள் இறக்குமதியாளர்களில் முக்கியமான ஒரு நாடாக இந்தியா இருந்திருக்கிறது என்பதில் எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான சிறந்த திறன்கள் இருந்தன. நன்கு நிறுவப்பட்ட, 100 ஆண்டு பழமையான சூழல் இந்தியாவில் இருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் பல தசாப்தங்களாக மும்முரமான கவனம் செலுத்தப்படாதது துரதிர்ஷ்டவசமானது. தீவிரமான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நமக்குப் பின்னால் தொடங்கிய பல நாடுகள் கடந்த 50 வருடங்களில் நமக்கு முன்னால் முன்னேறிச் சென்று விட்டன. ஆனால் நிலைமை தற்போது மாறிவருகிறது.
இந்தத் துறையில் இருக்கும் தடைகளைத் தகர்க்க உறுதியான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருவதை கடந்த சில வருடங்களில் நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பீர்கள். பாதுகாப்புத் தளவாடங்களின் உற்பத்தியைப் பெருக்குவது, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது மற்றும் தனியார்களுக்கு இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதே நமது லட்சியம். எனவே, உரிமம் வழங்கும் செயல்முறையில் மேம்பாடு, சமமான களத்தை உருவாக்குதல், ஏற்றுமதி செயல்முறையை எளிமையாக்குதல், ஈடுசெய்யும் வசதிகளில் சீர்திருத்தம் போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் முக்கியமானதாக நான் நம்புவது எதுவென்றால் பாதுகாப்புத் துறையைப் பற்றிய நாட்டின் புதிய மனநிலையே ஆகும். புதிய மனநிலை பிறந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது. நவீன மற்றும் தற்சார்பான இந்தியாவை உருவாக்குவதற்கு பாதுகாப்புத் துறையின் தன்னம்பிக்கை உணர்வு மிகவும் முக்கியம் ஆகும். நீண்ட காலமாக, முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி குறித்து நாடு விவாதித்துக் கொண்டிருந்தது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. புதிய இந்தியாவின் தன்னம்பிக்கையின் அடையாளம் இந்த முடிவாகும்.
பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் அயல்நாட்டு நேரடி முதலீட்டுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. நமது அரசு பதவியேற்றதற்கு பிறகு அதிக அளவிலான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முதல் முறையாக, இந்தத் துறையில் 74 சதவீதம் தானியங்கி நேரடி அந்நிய முதலீடுகளுக்கு கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. புதிய இந்தியாவின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு இதுவாகும்.
ஆயுதத் தொழிற்சாலைகள் பல தசாப்தங்களாக அரசுத் துறைகளைப் போன்று நடத்தப்பட்டுக் கொண்டிருந்தன. இந்தக் குறுகிய பார்வையால் நாடு மட்டும் பாதிக்கப்படவில்லை, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த திறன்மிக்க, அர்ப்பணிப்பு மிக்க, கடுமையாக உழைக்கக்கூடிய, அனுபவமிக்க பணியாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
கோடிக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய இந்தத் துறையின் சூழல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள் இருந்தது. ஆயுதத் தொழிற்சாலைகளின் பெருநிறுவனமயமாக்கலை நோக்கி நாம் தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பணியாளர்கள் மற்றும் இராணுவம் ஆகிய இரு தரப்பினருக்கும் இது நன்மை பயக்கும். புதிய இந்தியாவின் தன்னம்பிக்கைக்கு இது சான்றாகும்.
நண்பர்களே, பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதற்கான நமது லட்சியம், விவாதம் அல்லது காகித அளவில் மட்டுமே இல்லை. அதைச் செயல்படுத்துவதற்காக பல உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தலைமைத் தளபதி நியமனம் முப்படைகளுக்கிடையே சிறப்பான
ஒருங்கிணைப்பையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்தியுள்ளதோடு, பாதுகாப்புத் தளவாடங்களின் கொள்முதலை மேம்படுத்துவதிலும் உதவியுள்ளது. வரும் நாட்களில், உள்நாட்டுத் தொழில்களுக்கு வழங்கப்படவுள்ள பணி உத்தரவுகளின் அளவு அதிகரிக்கும். இதை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலதன வரவு செலவுத் திட்டத்தில் ஒரு பகுதி உள்நாட்டுக் கொள்முதலுக்கு ஒதுக்கப்படுகிறது.
101 தளவாடங்கள் முழுக்க உள்நாட்டுக் கொள்முதலுக்காக மட்டுமே என சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் பட்டியல் வரும் நாட்களில் விரிவுபடுத்தப்பட்டு, புதிய பொருள்கள் அதில் சேர்க்கப்படும். இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமே இந்தப் பட்டியலின் நோக்கமல்ல, இந்தியாவில் உள்ள தொழில்களை ஊக்கப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நண்பர்களே, தனியார் துறையாக இருக்கட்டும், பொதுத்துறையாக இருக்கட்டும், சிறு, குறு, நடுத்தரத் தொழிலாக இருக்கட்டும் அல்லது புது நிறுவனங்களாக இருக்கட்டும், அரசின் உணர்வும், வருங்கால சாத்தியக்கூறுகளும் உங்களின் முன் கருப்பு, வெள்ளையில் வைக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் செயல்முறையை விரைவுபடுத்துததல், பரிசோதனை அமைப்பை முறைப்படுத்துதல் மற்றும் தரத் தேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றின் மீதும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இராணுவத்தின் மூன்று பிரிவுகளில் இருந்தும் மிகவும் ஒருங்கிணைந்த முறையில் இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு வகையில், இது ஒரு மிகவும் சுறுசுறுப்பான நடவடிக்கை.
நண்பர்களே, நவீன உபகரணங்களின் தற்சார்புக்கு தொழில்நுட்ப மேம்பாடு மிகவும் அவசியமாகும். அடுத்த தலைமுறை பொருள்களை உருவாக்குவதற்கான தேவை இருக்கிறது. இதை அடைவதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை (DRDO) தவிர, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தொழில்நுட்பம் பெறுதல் முறைக்கு மாறாக, வெளிநாட்டுப் பங்குதாரர்களுடன் இணைந்து கூட்டு நிறுவனங்கள் மூலம் கூட்டுத்தயாரிப்பு செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நமது சந்தை அளவை மனதில் கொண்டு உற்பத்தியை இந்தியாவிலேயே மேற்கொள்வதற்கு நமது அயல்நாட்டுப் பங்குதாரகளுக்கு தற்போது சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது.
நண்பர்களே, சீர்திருத்து, செயல்படு மற்றும் மாற்று என்னும் தாரக மந்திரத்தை மனதில் வைத்து தொடக்கத்தில் இருந்தே அரசு செயல்பட்டு வருகிறது. சிகப்பு நாடா முறையைக் குறைத்து, சிகப்புக் கம்பளம் விரிப்பதே எங்கள் முயற்சியாகும். தொழில் செய்வதை எளிதாக்குவதற்காக 2014-இல் இருந்து செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்களை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வருகிறது. அறிவுசார் சொத்து, வரிவிதிப்பு, நொடித்துப்போதல் மற்றும் திவாலாதல், வானியல் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் சீர்திருத்தங்கள் நாங்கள் செய்து வருகிறோம். தொழிலாளர் சட்டங்களில் செய்யப்பட்டு வரும் வரிசையான சீர்திருத்தங்கள் பற்றியும், அவற்றின் செயல்பாட்டை பற்றையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
கடந்த சில வருடங்கள் வரை, இந்த விஷயங்களைப் பற்றி சிந்திக்கப்படவில்லை. ஆனால் இன்று, சீர்திருத்தங்கள் நடைமுறையில் உள்ளன.சீர்திருத்தச் செயல்பாடுகள் இதோடு நின்றுவிடப்போவதில்லை, நாம் முன்னேறி செல்லப் போகிறோம். எனவே, நிற்கப் போவதில்லை, ஓய்வெடுக்கவும் போவதில்லை. நானும் நீங்களும் களைப்படையப் போவதில்லை. நாம் முன்னேறி செல்ல வேண்டும். இது தான் எங்களுடைய உறுதி என்று எங்கள் தரப்பிலிருந்து நான் உங்களுக்குக் கூறுகிறேன்.
நண்பர்களே, உள்கட்டமைப்பைப் பொருத்தவரை, பாதுகாப்புப் பாதைகளின் மீதான பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசுகளோடு இணைந்து அதி நவீன உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ 20,000 கோடி முதலீட்டு இலக்கு அடுத்த ஆண்டுகளில் இதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர், குறிப்பாக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் புது நிறுவனங்களுடன் (ஸ்டார்ட் அப்) தொடர்புடையோரை ஊக்கப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட
ஐடெக்ஸ் (iDEX) முயற்சியும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. 50-க்கும் அதிகமான புது நிறுவனங்கள் இந்த தளத்தின் மூலம் இராணுவப்
பயன்பாட்டுக்கான தொழில்நுட்பத்தையும், பொருள்களையும் உருவாக்கியுள்ளன.
நண்பர்களே, உங்களின் முன் மற்றொரு விஷயத்தை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன். தற்சார்பு இந்தியாவுக்கான எங்களது உறுதி உள்நோக்கியது மட்டுமே அல்ல. உலகப் பொருளாதாரத்தை இன்னும் வலிமையானதாக்கவும், இன்னும் நிலையானதாக்கவும், உலகத்தில் அமைதியைக் கொண்டு வரவும் பங்காற்றும் திறன்மிக்க வலிமையான இந்தியாவைக் கட்டமைப்பதே லட்சியம். ராணுவத் தளவாடங்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதன் பின்னணியிலும் இதே லட்சியம் தான் உள்ளது. நட்பு நாடுகள் பலவற்றுக்கு பாதுகாப்புத் தளவாடங்களை வழங்கும் நம்பிக்கையான விநியோகிப்பாளராக
உருவெடுப்பதற்கான வலிமை இந்தியாவுக்கு இருக்கிறது. இந்தியாவின்
மூலோபாய உறவுகளை இது வலிமைப்படுத்தி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு வழங்குபவராக இந்தியாவின் பங்களிப்பை வலுவாக்கும்.
நண்பர்களே, அரசின் முயற்சிகளும், உறுதியும் உங்கள் முன்னால் உள்ளன. தற்சார்பு இந்தியாவுக்கான லட்சியத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டும். தனியார் துறையாக இருந்தாலும், பொதுத் துறையாக இருந்தாலும், அல்லது நமது அயல்நாட்டுப் பங்குதாரர்களாக இருந்தாலும், தற்சார்பு இந்தியா என்பது அனைவருக்கும் வெற்றியை அளிப்பதாகும். சிறந்த சூழலை உங்களுக்கு வழங்க எங்களது அரசு உறுதிபூண்டுள்ளது.
நீங்கள் வழங்கியுள்ள ஆலோசனைகள் வரும் நாட்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கப் போகின்றன. பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிப்பு, ஏற்றுமதி ஊக்குவிப்பு வரைவுக் கொள்கை அனைத்துப் பங்குதாரர்களிடமும் பகிரப்பட்டுள்ளதாக எனக்கு சொல்லப்பட்டுள்ளது. உங்களின் பின்னூட்டம் அக்கொள்கையை விரைவில் செயல்படுத்த உதவும். இன்றைய கருத்தரங்கு ஒரு முறை நிகழ்வாக முடிந்து விடக்கூடாது, வருங்காலத்தில் இது போன்ற கருத்தரங்குகள் அதிக அளவில் நடத்தப்படுவது அவசியமாகும். தொழில்துறை மற்றும் அரசுக்கு இடையே தொடர் ஆலோசனை மற்றும் பின்னூட்டத்துக்கான உள்ளார்ந்த கலாச்சாரம் இருக்க வேண்டும்.
நமது லட்சியத்தை அடைய ஒன்றுபட்ட முயற்சிகள் உதவும் என்று நான் நம்புகிறேன். தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்காக தன்னம்பிக்கையுடன் இங்கு குழுமியுள்ள உங்களுக்கு, உங்களின் நேரத்தை செலவழித்ததற்காக நான் மீண்டுமொருமுறை நன்றி கூறுகிறேன். இந்த லட்சியத்தை அடைய நமது கடமைகளை இன்னும் சிறந்த முறையில் நாம் அனைவரும் செய்வோம் என நான் நம்புகிறேன்.
மீண்டுமொருமுறை, எனது பலப்பல நல்வாழ்த்துகளை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்.
மிக்க நன்றி
***
(Release ID: 1649238)
Visitor Counter : 197
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam