பிரதமர் அலுவலகம்
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு இந்தியா குறித்த கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதைப் பற்றி பிரதமர் வலியுறுத்தல்; இந்த திசையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு எட்டுவது என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பாளராக இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் என்று பிரதமர் கூறினார்
Posted On:
27 AUG 2020 7:57PM by PIB Chennai
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு இந்தி குறித்த கருத்தரங்கில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதைப் பற்றி வலியுறுத்திய பிரதமர், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியை பெருக்குவது, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது மற்றும் தனியாருக்கு பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதே நமது லட்சியம் என்றார்.
லட்சியத்துடன் பணியாற்றுவதற்காகவும், தொய்வில்லாமல் முயற்சிகளை எடுப்பதற்காகவும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவினரைப் பாராட்டிய பிரதமர், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதற்கான நோக்கம் இன்றைய கருத்தரங்கின் மூலம் இன்னும் வலுவடையும் என்றார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது பாதுகாப்பு தளவாடங்களை நாட்டில் உற்பத்தி செய்வதற்கான சிறந்த சாத்தியக்கூறுகளும், சூழலமைப்பும் இருந்ததாகவும், ஆனால் முனைப்பான முயற்சிகள் தசாப்தங்களாக எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார். நிலைமை தற்போது மாறிவருவதாகக் குறிப்பிட்ட அவர், பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களுக்காக தொடர் மற்றும் உறுதியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். உரிமம் வழங்கும் செயல்முறையில் மேம்பாடு, சமமான களத்தை உருவாக்குதல், ஏற்றுமதி செயல்முறையை எளிமையாக்குதல் போன்ற பல உறுதியான நடவடிக்கைகள் இந்த திசையில் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நவீன மற்றும் தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதற்கு பாதுகாப்புத் துறையில் நம்பிக்கை உணர்வு முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். தசாப்தங்களாக நிலுவையில் இருந்த, முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்பட்டதைப் போன்ற, முடிவுகள் தற்போது எடுக்கப்பட்டு, புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையை அவை பிரதிபலிக்கின்றன. தலைமை தளபதி நியமனம் முப்படைகளுக்கிடையே சிறப்பான ஒருங்கிணைப்பையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்தியுள்ளதோடு, பாதுகாப்புத் தளவாடங்களின் கொள்முதலை மேம்படுத்துவதிலும் உதவியுள்ளது. அதே போன்று, 74 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டை தானியங்கி முறை மூலம் அனுமதிக்கும் பாதுகாப்புப் பாதையின் தொடக்கமும் புதிய இந்தியாவின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றார்.
மூலதன வரவு செலவுத் திட்டத்தில் ஒரு பகுதியை உள்நாட்டு கொள்முதலுக்கு ஒதுக்குதல், உள்நாட்டு கொள்முதலுக்கான 101 தளவாடங்கள் போன்ற நடவடிக்கைகள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாடத் தொழில்களுக்கு ஊக்கமளித்து, அவற்றின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் கூறினார். கொள்முதல் செயல்முறையை விரைவுபடுத்துததல், பரிசோதனை அமைப்பை முறைப்படுத்துதல் உள்ளிட்டவற்றின் மீதும் அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆயுத தொழிற்சாலைகளை பெருநிறுவனமயமாக்குதல் குறித்து பேசிய பிரதமர், அப்பணி முடிவடைந்தவுடன் பணியாளர்களையும், பாதுகாப்புத் துறையையும் அது வலுப்படுத்தும் என்று கூறினார்
நவீன தளவாடங்களில் தன்னிறைவு அடைவதற்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை தவிர, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அரசு ஊக்கப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். வெளிநாட்டு பங்குதாரர்களுடன் இணைந்து கூட்டு நிறுவனங்கள் மூலம் கூட்டுத்தயாரிப்பு செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார்.
சீர்திருத்து, செயல்படு மற்றும் மாற்று என்னும் மந்திரத்தை மனதில் வைத்து அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அறிவுசார் சொத்து, வரிவிதிப்பு, நொடித்துப்போதல் மற்றும் திவாலாதல், வானியல் மற்றும் அணு சக்தி ஆகிய துறைகளில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர், உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு பாதுகாப்புப் பாதைகள் குறித்து எடுத்துரைத்தார். உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசுகளோடு இணைந்து அதி நவீன உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். ரூ 20,000 கோடி முதலீட்டு இலக்கு அடுத்த ஆண்டுகளில் இதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர், குறிப்பாக சிறு, குறு, மத்திய தொழில்கள் மற்றும் புது நிறுவனங்களுடன் (ஸ்டார்ட் அப்) தொடர்புடையோரை ஊக்கப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட ஐடெக்ஸ் (iDEX) முயற்சியும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். 50-க்கும் அதிகமான புது நிறுவனங்கள் இந்த தளத்தின் மூலம் இராணுவ பயன்பாட்டுக்கான தொழில்நுட்பம் மற்றும் பொருள்களை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலகப் பொருளாதாரத்தை இன்னும் வலிமையானதாக்கவும், இன்னும் நிலையானதாக்கவும், உலகத்தில் அமைதியைக் கொண்டு வரவும் பங்காற்றும் திறன்மிக்க இந்தியாவைக் கட்டமைப்பதே லட்சியம் என்று பிரதமர் தெரிவித்தார். பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதன் பின்னால் இருக்கும் எண்ணம் இது தான் என்று அவர் கூறினார். அதன் நட்பு நாடுகள் பலவற்றுக்கு பாதுகாப்பு தளவாடங்களை வழங்கும் நம்பிக்கையான விநியோகிப்பாளராக உருவெடுப்பதற்கான வலிமை இந்தியாவுக்கு இருக்கிறது. இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை இது வலிமைப்படுத்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் 'வலை பாதுகாப்பு வழங்குபவராக' இந்தியாவின் பங்களிப்பை வலுவாக்கும் என்று பிரதமர் கூறினார்.
பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு வரைவு கொள்கையின் மீது வரவேற்கப்பட்டுள்ள பின்னூட்டமும், ஆலோசனைகளும் அக்கொள்கையை விரைவில் செயல்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.
தன்னிறைவான, தற்சார்பு இந்தியா உருவாகும் நமது லட்சியத்தை அடைய ஒன்றுபட்ட முயற்சிகள் உதவும் என்று கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
*****
(Release ID: 1649157)
Visitor Counter : 247
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam