வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில் துறை நடவடிக்கை மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க திரு. பியூஷ் கோயல் மாநிலத் தொழில்துறை அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளுடன் மெய்நிகர் கூட்டத்தில் ஆலோசனை

Posted On: 27 AUG 2020 2:57PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் இன்று மாநிலங்களின் தொழில்துறை அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளுடன் மெய்நிகர் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். நாட்டில் தொழில் உற்பத்தியை ஊக்குவித்தல், முதலீடுகளை ஈர்த்தல், ஒரு மாவட்டம் ஒரு உற்பத்திப் பொருள் அணுகுமுறையை மேற்கொள்ளுதல், தற்சார்பு இந்தியா திட்டத்தை நோக்கிய தேசிய இயக்கத்தை ஊக்குவித்தல் ஆகிய விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

திரு. பியூஷ் கோயல், தேசிய ஜிஐஎஸ் - உதவியுடனான நில வங்கி முறையை மின்னணு முறையில் துவக்கி வைத்தார் (https://iis.ncog.gov.in/parks). தொழிலியல் தகவல் முறை, மாநில ஜிஐஎஸ் முறைகளுடன் சேர்ந்து இந்த நடைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது. ஆறு மாநிலங்களில் இந்தத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்த திரு. பியூஷ் கோயல், இந்த ஆண்டு டிசம்பருக்குள் மற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இது ஒரு முன்மாதிரி என்று கூறிய அவர், மாநிலங்களில் இருந்து கிடைக்கும் பின்னூட்டங்களின் அடிப்படையில், மேலும் செயல் திறனுடன், நிலங்களை அடையாளம் கண்டு வாங்கும் போக்குவரத்து பொறிமுறையுடன் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஐஐஎஸ் தளம், மாநிலங்கள் முழுவதும் உள்ள தொழில் பகுதிகள்/தொகுப்புகள் குறித்த ஜிஐஎஸ் உதவியுடன் கூடிய தரவுகளைக் கொண்டதாகும். 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 3,300-க்கும் மேற்பட்ட தொழில் பூங்காக்கள் உள்ளன. அவை 475,000 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளதாக இந்த முறையின் மூலம் தெரியவந்துள்ளது. காடு, கழிவுநீர்க் கால்வாய், மூலப்பொருள்கள் வெப்ப வரைபடங்கள் (விவசாயம், தோட்டக்கலை, கனிமப்படங்கள்), இணைப்பின் பன்மடங்கு அடுக்குகள் உள்ளிட்ட தகவல்கள் இதில் கிடைக்கும். வள ஆதாரங்கள் பயன்பாடு, தொழில் மேம்பாடு, நிலைத்தன்மை ஆகியவற்றை நோக்கிய அணுகுமுறையை ஐஐஎஸ் கடைப்பிடித்து வருகிறது. இந்த முயற்சிக்கு, இன்வெஸ்ட் இந்தியா, நேசனல் சென்டர் ஆப் ஜியோ-இன்பர்மேடிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், பாஸ்கராச்சார்யா இன்ஸ்டிடியூட் பார் ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் அன்ட் ஜியோ-இன்பர்மேடிக்ஸ் ஆகியவை ஆதரவு அளித்து வருகின்றன.

திரு. நோயல் தமது உரையில், டீம் இந்தியா என்னும் எழுச்சியுடன் இணைந்து பணியாற்றி நாட்டில் தொழில்துறை நடவடிக்கைகளை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து, இந்தியாவின் 130 கோடி மக்களின் வாழ்க்கையில் மேம்பாட்டை  ஏற்படுத்தவும், வரும் தலைமுறைகளுக்கும் சிறந்த முன்னேற்றத்தை உருவாக்கவும் மாநிலங்கள் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள பொது கொள்முதல் கொள்கை-மேக் இன் இந்தியா ஆர்டரை மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று திரு. கோயல் கேட்டுக் கொண்டார். உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், தற்சார்பு இந்தியாவை அடையவும் இது செயல்திறன் மிக்க உபகரணமாக இருக்கும் என்று அவர் கூறினார். இதன் கீழ், ரூ.200 கோடிக்கும் குறைவான கொள்முதல்களுக்கு உலக டெண்டர் விசாரணை அனுமதிக்கப்படமாட்டாது.\

இந்தியாவில் தொழில் தொடங்கி இயங்குவதற்குத் தேவையான அனைத்து மத்திய, மாநில அனுமதிகள்/ஒப்புதல்களைப் பெறுவதற்கு ஒரு இட டிஜிட்டல் தளத்தைக் கொண்ட ஒற்றைச் சாளர முறையை உருவாக்குவது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

 

**********


(Release ID: 1649125) Visitor Counter : 229