சுற்றுலா அமைச்சகம்

'ஒரே பாரதம், ஒப்பற்ற பாரதம்' என்னும் உணர்வை மேலோங்கச் செய்ய 'தமிழ்நாடு, ஜம்மு & காஷ்மிர், லடாக்கின் வியப்பூட்டும் நாட்டுப்புற நடனங்கள்' என்னும் இணைய நிகழ்ச்சியை உணவக மேலாண்மை நிறுவனம் (IHM) ஸ்ரீ நகர், மற்றும் உணவக மேலாண்மை நிறுவனம் சென்னை ஆகியவை நடத்தின

Posted On: 26 AUG 2020 4:14PM by PIB Chennai

'ஒரே பாரதம், ஒப்பற்ற பாரதம்' என்னும் உணர்வை மேலோங்கச் செய்ய, 'தமிழ்நாடு, ஜம்மு & காஷ்மிர், லடாக்கின் வியப்பூட்டும் நாட்டுப்புற நடனங்கள்' என்னும் இணைய நிகழ்ச்சியை சுற்றுலா அமைச்சகத்தின் உணவக மேலாண்மை நிறுவனம் (IHM) ஸ்ரீ நகர், மற்றும் உணவக மேலாண்மை நிறுவனம் சென்னை ஆகியவை இந்த வாரம் நடத்தின. உணவக மேலாண்மை நிறுவனம் சென்னையின் மாணவர்கள் மற்றும் உணவக மேலாண்மை நிறுவனம் ஸ்ரீ நகரின் 3 மாணவர்கள் 'ஒரே பாரதம், ஒப்பற்ற பாரதம்' மூலம் இணைக்கப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் நாட்டுப்புற நடனங்களை ஆடினர்.

 

தொலைநிலையில் நடனமாடிய மாணவர்கள், அதைப் பதிவு செய்து அந்தக் காணொளியை இணையத்தில் பகிர்ந்தனர். ஆன்லைன் தளத்தின் மூலம் அவர்களின் நடனங்கள் ஒளிபரப்பப்பட்டதுடன், இந்த இரு மாநிலங்களின் நாட்டுப்புற நடனங்களின் முக்கியத்துவத்தைப் புகழ்ந்து தொடர்பு அதிகாரி உரை நிகழ்த்தினார். இரு நிறுவனங்களின் அனைத்து மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வெகுவாகப் புகழ்ந்தனர்.

 

காஷ்மிரின் திருமணங்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் இடம்பெறும் புகழ்பெற்ற நாட்டுப்புற நடனங்களான குத், தும்ஹல், ரவுப், ஹபிசா மற்றும் பந்த் ஜஷான் உள்ளிட்டவை குறித்த அறிமுகம் அந்தந்த இடங்களில் இருந்தே வழங்கப்பட்டன. அதே போல், எளிமையான பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், நடனமாடுபவர்கள் மயில் போல் உடையணிந்து கொண்டு ஆடும் மயிலாட்டம், குதிரை போல ஆடும் பொய்க்கால் குதிரை ஆட்டம், காளை போல் ஆடும் காளை ஆட்டம், பாம்பு போல் வேடமிட்டுக் கொண்டு ஆடும் பாம்பாட்டம் மற்றும் கரடி போல் ஆடும் கரடியாட்டம் போன்ற தமிழகத்தின் நாட்டுப்புற நடனங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.

 

கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் செறிவு குறித்து கலந்து கொண்டோர் புகழ, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. மொத்தம் 192 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், நடனமாடியவர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் மின்-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகள் இணையத்தில் தற்போது கிடைக்கின்றன. அவற்றை https://youtu.be/_nmxgeju68E also என்னும் யூ டியூப் சுட்டியிலும், ஒரே பாரதம், ஒப்பற்ற பாரதம் இணையதளத்திலும், இந்திய அரசின் சுற்றுலாத் துறையின் சமூக ஊடக பக்கங்களிலும் காணலாம்.

 

***********



(Release ID: 1648891) Visitor Counter : 246