மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசிய பால்பவனின் மறுஆய்வுக் கூட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் இன்று புதுதில்லியில் நடத்துகிறார்


குழந்தைகளிடையே ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக குழந்தைகளுக்கான தேசிய அளவிலான விருதை தேசிய பால்பவன் தொடங்க வேண்டும் - திரு ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்'

Posted On: 25 AUG 2020 4:58PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' இன்று புதுதில்லியில் தேசிய பால்பவனின் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் செயலாளர் திருமதி. அனிதா கார்வால் (SE&L), பள்ளிக் கல்வி இணைச் செயலாளர், திரு. ஆர். சி. மீனா மற்றும் தேசிய பால்பவனின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது, கல்வி அமைச்சர், தேசிய பால் பவனின் பல்வேறு செயல்பாடுகளை மறுஆய்வு செய்ததுடன் தற்போதைய சூழ்நிலையில் NBB (தேசிய பால் பவன்) இன் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் NBB (தேசிய பால்பவன்) மேற்கொண்ட முன்னேற்றம், அதன் தற்போதைய உறுப்பினர் விவரங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களையும் அவர் மதிப்பீடு செய்தார்.

இணையக் கருத்தரங்கம் மூலம் மாணவர்களுக்கான கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார், இதனால் அவர்கள் நம் நாட்டின் பல்வேறு கலாச்சார அம்சங்களைத் தொடர்ந்து கற்க முடியும். திரு.போக்ரியால் சர்வதேசத் தளங்களில் பால்பவனின் நடவடிக்கைகளை எவ்வாறு ஊக்குவிக்க முடியும் என்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

திரு நிஷாங்க் கூறுகையில், தேசிய பால்பவன் நமது குழந்தைகளுக்கு பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த தளமாகும், மேலும் பிராந்திய மையங்களிலும் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம் அதிகமான குழந்தைகள் இந்தத் தளத்தின் பயனைப் பெறுவார்கள் என்றார். குழந்தைகளிடையே ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக தேசிய பால்பவன் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான விருதைத் தொடங்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த விஷயம் குறித்து ஒரு திட்டத்தை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கல்வி அமைச்சர், தேசிய பால்பவனின் காலிப் பணியிடங்களை மதிப்பாய்வு செய்ததுடன் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

**************



(Release ID: 1648571) Visitor Counter : 210