நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன் கீழ் சேர்க்குமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உணவு, பொது வழங்கல் துறை அறிவுறுத்தல்

Posted On: 23 AUG 2020 4:11PM by PIB Chennai

தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் தேசிய உணவுப் பாதுகாப்புச்  சட்டம் 2013-இன் கீழ் சேர்க்குமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது வழங்கல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு, பொது வழங்கல் துறை கடிதங்கள் அனுப்பியுள்ளது. இந்தச் சட்டத்தின் விதிகளை சிறப்பாக அமல் செய்வது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவ்வப்போது அறிவுறுத்தல்களை அளிப்பதற்கு இதன் பிரிவு 38 வகை செய்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகள் என்ற வரையறைக்குத் தகுதி பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம்,.பிரதமரின் கரீப் கல்யாண் உணவுத் திட்டத்தின் கீழ் உரிய உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே இத் திட்டத்தில் பயன் பெறாதவர்களுக்கு, தகுதி அடிப்படையில் புதிதாக வழங்கப்படும் ரேஷன் அட்டைகள் கொடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அந்த்யோதயா அன்ன யோஜ்னா திட்டத்தில் பயன்பெறும்  குடும்பங்களின் கீழ் சேர்க்கத் தகுதி உடையவர்கள் ஆகிறார்கள் என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. சமூகத்தில் பாதிப்புக்கு ஆளாகும் பிரிவினராக மாற்றுத் திறனாளிகள் உள்ளனர் என்றும் அதில் உள்ளது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முன்னுரிமை தரப்பட வேண்டிய குடும்பத்தினராக, அவர்களால் வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு உள்பட்டு இவர்களைக் கருதிட வேண்டும் என்றும் கடிதம் அறிவுறுத்துகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன் பிரிவு 10-இன்படி, உரிய வழிகாட்டுதல்களின்படி அந்த்யோதயா அன்ன யோஜ்னா திட்டத்தில் சேர்க்கப்படக் கூடியவர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுகள் வரையறை செய்யும் வழிகாட்டுதல்களின்படி மற்ற குடும்பங்கள் முன்னுரிமை தரப்பட வேண்டிய குடும்பங்களாகக் கருதப்பட வேண்டும் என்றும் அந்தப் பிரிவு கூறுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அல்லது மாநில அரசின் எந்தவொரு குடும்ப அட்டைகள் திட்டத்திலும் பயன்பெறாதவர்களுக்கு மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் உதவிகள் அளிக்கப்படுகிறது. எனவே, குடும்ப அட்டைகள் இல்லாத மாற்றுத் திறனாளிகள் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள். இந்தத் திட்டம் 2020 ஆகஸ்ட் 31இல் நிறைவு பெறுவதால், இன்னும் ஒரு வார கால அவகாசம் உள்ளது. எனவே குடும்ப அட்டைகள் இல்லாத இவ்வாறனவர்களை அடையாளம் கண்டு, தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள் அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்தத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 2020 மே மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், குடும்ப அட்டைகள் இல்லாத, தகுதி உடைய அனைவருக்கும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் உதவிகள் கிடைத்திருக்கும் என அனுமானிக்கப் படுகிறது என்று கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாநிலங்கள் இதுவரை பெற்றுக் கொண்ட ரேஷன் பொருள்களை, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட, தகுதியுடைய அனைவருக்கும் வழங்குவதற்காகப் பயன்படுத்தி இருக்கும் என புரிந்து கொள்ளப் படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மாநிலங்கள் ஆக்கபூர்வ அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என கடிதம் வலியுறுத்துகிறது.

 

****



(Release ID: 1648077) Visitor Counter : 519