தேர்தல் ஆணையம்

கோவிட்-19 காலகட்டத்தில் பொதுத்தேர்தல் / இடைத்தேர்தல் நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்

Posted On: 21 AUG 2020 4:47PM by PIB Chennai

கோவிட்-19 காலகட்டத்தில் பொதுத்தேர்தல் / இடைத்தேர்தல் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.  இந்த வழிகாட்டி நெறிமுறைகளை https://eci.gov.in/files/file/12167-guidelines-for-conduct-of-general-electionbye-election-during-covid-19/  என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்.

வழிகாட்டி நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன:

வேட்பாளரோடு செல்லக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்புமனுவின் போது அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விதிமுறைகளை தேர்தல் ஆணையம் திருத்தியுள்ளது. வேட்புமனுவையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் ஆன்லைனிலேயே பூர்த்தி செய்த பிறகு பூர்த்தி செய்தவற்றைப் பிரிண்ட் எடுத்து சம்பந்தப்பட்ட ஆர்.ஓ-விடம் சமர்ப்பிக்கும் வாய்ப்பை ஆணையம் உருவாக்கியுள்ளது.  முதல் முறையாக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான டெப்பாசிட் காப்புத்தொகையை ஆன்லைனிலேயே செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு தேர்தல் ஆணையமானது வேட்பாளருடன் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்கு  அவருடன் ஐந்து பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று வரையறை செய்துள்ளது.  மத்திய உள்துறை அமைச்சகம் / மாநிலம் ஆகியவை வழங்கியுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தகுந்த வழிகாட்டுதலின் படி பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் அனுமதிக்கப்படும்.  தேர்தலின் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதோடு முகக்கவசம், கிருமிநாசினி, தெர்மல் வெப்பமானி, கையுறைகள், முகக்கவசம், முழு உடல் கவசம் ஆகியன பயன்படுத்தப்பட வேண்டும்.  வாக்காளர் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்கும் வாக்களிப்பதற்காக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவதற்கும் வாக்காளர்களுக்குக் கையுறைகள் வழங்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உள்ளூர் நிலைமையைக் கணக்கில் எடுத்துக் கொண்டும் இந்த வழிகாட்டி நெறிமுறைகளின் படியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாநிலம்  / மாவட்டம், ஏசி தேர்தல் செயல் திட்டங்களை விரிவாகத் தயாரிக்க வேண்டும்.  இந்தச் செயல்திட்டங்களை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கோவிட்-19க்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துத் தயாரிக்கவேண்டும்.


(Release ID: 1647697) Visitor Counter : 342