பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தேசிய ஆள்தேர்வு முகமை (என்.ஆர்.ஏ.) அமைக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு - பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என புகழாரம்
Posted On:
19 AUG 2020 5:38PM by PIB Chennai
பொதுவான தகுதித் தேர்வு நடத்துவதற்குத் தேசிய ஆள்தேர்வு முகமை அமைப்பது என மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதற்கு வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறைகேட்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வில், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, தொலைநோக்குப் பார்வை கொண்ட, புரட்சிகரமான சீர்திருத்தத் திட்டமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப் பணியாளர் தேர்வு நடைமுறையில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக இந்த முடிவு இருக்கும் என்று தெரிவித்தார். அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமநிலையிலான போட்டி வாய்ப்பை உருவாக்கும் வகையில், பி மற்றும் சி பிரிவில் வரும் (தொழில்நுணுக்கம் சாராத) பணிகளுக்கு மாணவர்கள் பட்டியலை முதல்நிலையில் தயாரித்தலுக்கு, பொதுவான தகுதித் தேர்வை (National Recruitment Agency - NRA) தேசிய ஆள்தேர்வு முகமை (Common Eligibility Test (CET) என்ற பன்முக முகமை நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
பணியாளர் தேர்வு நடைமுறைகளை இது எளிதாக்குவதுடன் மட்டுமின்றி, வாழும் நிலையை இது எளிதாக்கும் என்றும் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையம் அமையும் வகையில் சுமார் ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் எளிதில் தேர்வு மையத்தை அணுக முடியும் என்றும் அவர் கூறினார். தொலைதூரத்தில் உள்ள மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள விண்ணப்பதாரர்கள், குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்றும், அவர்களுடைய நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துவதாக இருக்கும் என்றும் அமைச்சர் விவரித்தார்.
அடுத்த ஆண்டில் இருந்து என்.ஆர்.ஏ. அமலுக்கு வரும் என்றும், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு அது செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். உண்மையான கூட்டாட்சி நிர்வாக உத்வேகத்துடன் மாநில அரசுகளும் இந்த நடைமுறையை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார். எதிர்காலத்தில் தனியார் துறையினரும் என்.ஆர்.ஏ. வசதியை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த முகமையில் ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, எஸ்.எஸ்.சி (SSC), ஆர்.ஆர்.பி (RRB), ஐ.பி.பி.எஸ். (IBPS) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை அமல் செய்தலுக்கான நிபுணத்துவம் வாய்ந்த அமைப்பாக என்.ஆர்.ஏ.வை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனை இருக்கிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை இதில் தேர்வுகள் நடைபெறும் என்றும், அந்த மதிப்பெண்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, 12 மொழிகளிலும் இத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அரசியல்சாசனத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் தேர்வுகளை நடத்த முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆள்தேர்வுக்கு பல தேர்வுகள் நடத்துவது, விண்ணப்பதாரர்களுக்கு சுமையாக இருக்கிறது. ஆள்தேர்வு முகமைகளுக்கும் தவிர்க்கப்படக் கூடிய / இரட்டிப்புச் செலவுகளைக் குறைத்தல், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள், தேர்வு மைய வசதிகள் தொடர்பான பிரச்சினைகளைக் குறைப்பதாக இந்த பன்முக ஆள்சேர்க்கை தேர்வுகள் இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.
இவற்றில் ஒவ்வொரு தேர்விலும் சராசரியாக 2.5 கோடி முதல் 3 கோடி வரையிலானவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் பொதுவான தகுதித் தேர்வு நடத்தப்படும் காரணத்தால், அவர்கள் ஒரு முறை தேர்வு எழுதிய பிறகு, இந்த அனைத்து ஆள்தேர்வு முகமைகளின் பணிகளுக்கும் உயர்நிலைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். உண்மையில் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
(Release ID: 1647198)
Visitor Counter : 139