குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கட்டுமானத் தளவாடங்களின் சர்வதேசத் தயாரிப்பு மையமாக உருவாவதே எமது லட்சியம்: திரு. நிதின் கட்கரி.

Posted On: 18 AUG 2020 4:03PM by PIB Chennai

கட்டுமானத் தளவாடங்களின் சர்வதேசத் தயாரிப்பு மையமாக நமது நாட்டை உருவாக்குவதே எங்களது லட்சியம் என்று மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் சாலை போக்குவரத்து,  நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கூறினார். 'கட்டுமானத் தளவாடங்கள், தொழில்நுட்பம், உதிரிபாகங்கள் மற்றும் கலவைகள் குறித்த இந்தியத் தொழில் கூட்டமைப்பின் மெய்நிகர் கண்காட்சி' என்னும் இணையக் கருத்தரங்கில் காணொளிக் காட்சி மூலம் அவர் இன்று உரையாற்றினார். தற்சார்ப்பு லட்சியத்தை அடைய வேண்டுமென்றால், வாகன உற்பத்தித் துறையில் தற்சமயம் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு உதிரிபாகங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவற்றின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார். தொழிற்சாலைக் குழுக்கள், தொழில்நுட்ப மையங்கள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றை உருவாக்கவும், தொழில்நுட்பம் மற்றும் திறன்களை மேம்படுத்தவும் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

இந்தியாவில் தொழில்நுட்ப மையங்களை ஏற்படுத்துவதற்கு முடிந்த அனைத்து ஆதரவையும் அளிப்பதாக பங்குதாரர்களிடம் திரு. கட்கரி உறுதியளித்தார். தரத்தில் சமரசமில்லாமல் ஆராய்ச்சி மற்றும் செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான தேவை குறித்து அவர் வலியுறுத்தினார்.

 

கோவிட்-19 பெருந்தொற்றால் விடப்பட்டிருக்கும் சவாலான பிரச்சினைகளை எதிர்கொள்ளுமாறு கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார். "கோவிட்-19 நெருக்கடியால் ஒட்டுமொத்தத் தொழில்துறையும் நிறைய சவால்களை இன்று எதிர்கொண்டாலும், நேர்மறைச் சிந்தனையோடு அனைத்து சவால்களையும் எதிர்த்து நாம் போராடி, கட்டுமானத் தளவாடங்களின் உற்பத்தி மையமாக வாகனத் தயாரிப்புத் துறையை உருவாக்க வேண்டும்," என்று திரு. கட்கரி கூறினார். இதை சாதிக்க, தரத்தில் சமரசமில்லாமல் செலவுகளைக் குறைத்தல் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

 

ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர், நிதி மற்றும் சரியான தொழில்நுட்பம் கிடைப்பதற்கு கூட்டுத் தொழில்களும், அயல்நாட்டு உறவுகளும் தேவை என்று வலியுறுத்தினார். திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு, அழுத்தமூட்டப்பட்ட இயற்கை வாயு மற்றும் உயிரி எரிபொருள்கள், செலவைக் கட்டாயமாகக் குறைக்கும். நீர்வழி, கடல், ரயில், சாலை  மற்றும் வான்வழி  என அனைத்து வகையான போக்குவரத்துகளையும் ஒன்றிணைத்து, மேம்படுத்த அரசு பணியாற்றி வருவதாகவும், இதன் மூலம் பொருள்களின் போக்குவரத்துச் செலவு கட்டாயம் குறைந்து, தொழில்களுக்கு பெரிய அளவில் உதவும் என்றும் அவர் கூறினார்.

 

 

 

***
 


(Release ID: 1646737) Visitor Counter : 191