உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகளின் கட்டுமானத்தில் 158 லட்சம் மெட்ரிக் டன் எஃகு பயன்படுத்தப்படும்.

Posted On: 18 AUG 2020 1:38PM by PIB Chennai

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகளின் கட்டுமானத்தில் சுமார் 158 லட்சம் மெட்ரிக் டன்கள் எஃகு மற்றும் 692 லட்சம் மெட்ரிக் டன்கள் சிமெண்ட் பயன்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர், திரு. ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். 'தற்சார்பு பாரதம்: வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் விமானத் துறையில் எஃகு பயன்பாட்டை அதிகரித்தல்' என்னும் இணையக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர், இதுவரை கட்டப்பட்டு/முடிக்கப்பட்டுள்ள வீடுகளில் 84 லட்சம் மெட்ரிக் டன்கள் எஃகு மற்றும் 370 லட்சம் மெட்ரிக் டன்கள் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார். இந்தியத் தொழில் கூட்டமைப்பால் (CII) நடத்தப்பட்ட இந்த இணையக் கருத்தரங்கில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர், திரு தர்மேந்திர பிரதான், எஃகு இணை அமைச்சர், திரு. எப் எஸ் குல்ஹஸ்தே, விமானப் போக்குவரத்து அமைச்சகச் செயலாளர், திரு. பி. கே.கரோலா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் செயலாளர், திரு. டி எஸ் மிஷ்ரா, எஃகுத்துறைச் செயலாளர், திரு. பி. கே. திரிபாதி, மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

 

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் இது வரை 4,550 நகரங்களில் 1.07 கோடி வீடுகளுக்கு (1.12 கோடி வீடுகளுக்கான தேவை இருந்தது) ஒப்புதல் அளிக்கப்பட்டு, 67 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, 35 லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த திரு. ஹர்தீப் சிங் புரி, ஒப்புதலளிக்கப்பட்ட வீடுகளின் கட்டுமானத்திற்காக 3.65 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் 1.65 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளின் மூலம் உருவாகி உள்ளதாகவும் கூறினார். 2024-க்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பதற்கான லட்சியத்தை 2019-இல் பிரதமர் வெளிப்படுத்தியதாகவும், புதுமையான, நிலைத்து நிற்கக்கூடிய, ஒருங்கிணைந்த மற்றும் சுய-சார்புடைய உள்கட்டமைப்பு வளர்ச்சியை நாடெங்கிலும் செயல்படுத்துவதன் மூலம் இந்த வளர்ச்சியை எட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். நகர்மயமாதல் குறித்துப் பேசிய அமைச்சர், நம்முடைய நகர மையங்கள்/மாநகரங்கள் பொருளாதார உற்பத்தித் திறன், உள்கட்டமைப்பு, கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் மையங்கள் என்றார். நமது மக்கள் தொகையின் 40 சதவீதம் அல்லது 600 மில்லியன் இந்தியர்கள் 2030-க்குள் நகர மையங்களில் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

 

நகர்ப்புறப் போக்குவரத்தில் எஃகின் பயன்பாட்டைக் குறித்து எடுத்துரைத்த திரு. புரி, சுமார் 700 கிலோமீட்டர் நீள மெட்ரோ ரயில் 19 மாநகரங்களில் தற்போது செயல்பாட்டில் உள்ளதாகவும், 27 மாநகரங்களில் 900 கிலோமீட்டர் வலைப்பின்னல் கட்டுமானத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு கிலோமீட்டர் நீள மெட்ரோ திட்டக் கட்டுமானத்துக்கு சுமார் 1,30,000 மெட்ரிக் டன் எஃகு (வகைகள்- வலூவூட்டல் எஃகு, கட்டமைப்பு எஃகு, துருவுறா எஃகு மற்றும் உயர் இழுவிசை எஃகு ) தேவைப்படுவதாக அவர் மேலும் கூறினார்.  



(Release ID: 1646717) Visitor Counter : 161