விண்வெளித்துறை
சந்திரயான்-2 நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோவின் அஞ்சலி
Posted On:
14 AUG 2020 7:08PM by PIB Chennai
“இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையான டாக்டர் விக்ரம் சாரபாய் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, சந்திரயான் 2 நிலாவின் சுற்றுப்பாதையில் எடுத்த படங்களில் காணப்படும் பள்ளத்தாக்குக்கு சாரபாய் பள்ளம் (“Sarabhai” Crater) எனப் பெயரிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மரியாதை செலுத்துகிறது” என்று மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டு இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
சந்திரனில் அமெரிக்காவின் அப்பல்லோ 17 விண்கலமும், சோவியத் யூனியனின் லூனா 21 விண்கலமும் இறங்கிய இடத்திற்கு 250 முதல் 300 கி.மீ. தொலைவில் இந்த எரிமலைப் பள்ளத்துக்கு டாக்டர் விக்ரம் சாரபாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டாக்டர் விக்ரம் சாரபாயின் நூற்றாண்டு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நிறைவடைந்தது. அதையொட்டி, அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் கூறிய அமைச்சர், “இந்தியாவை விண்வெளித் துறையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக்க வேண்டும் என்று சாரபாய் தொலைநோக்குடன் கண்ட கனவை நனவாக்கும் வகையில் இஸ்ரோவின் அண்மைக்கால சாதனைகள் அமைந்துள்ளன” என்றார்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடையூறுகளுக்கும் இடையில் டாக்டர் விக்ரம் சாரபாயும் அவரது குழுவினரும் பிள்ளையார் சுழி போட்ட தீரமான இந்தியாவின் விண்வெளிப் பயணத்தின் புகழ் மகுடத்தில் மாணிக்கத்தைப் போல் இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
“விண்வெளிப் பயணத்தை நமக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய பல நாடுகள் கூட இந்தியா கண்டறிந்த விண்வெளி ஆய்வுத் தகவல்களை இன்றைக்குப் பயன்படுத்துகின்றன என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமிதமும் நம்பிக்கையும் கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
சந்திரயான் முப்பரிமாணப் படமெடுத்த சாரபாய் பள்ளத்தாக்கு 1.7 கி.மீ. ஆழம் கொண்டது. அதன் உட்புறச் சுவர் பகுதி 25 முதல் 35 டிகிரி வரையில் சாய்ந்திருக்கிறது. இந்த ஆய்வக் குறிப்புகள் எரிமலைகள் நிரம்பிய சந்திரனின் நிலப் பகுதியை ஆராய்வதற்கு உதவும் என்று இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரயான் 2 விண்கலம் திட்டமிட்டபடி தொடர்ந்து இயங்கி, முக்கிய அறிவியல் தகவல்களை அளித்து உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சந்திரயான் 2 கண்டறிந்த அறிவியல் தகவல்கள் உலக அளவில் வரும் அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும்.
<><><><><>
(Release ID: 1645968)
Visitor Counter : 258