இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

உடல்தகுதி மிக்க இந்தியா சுதந்திர ஓட்டம் என்ற ஆன்லைன் நிகழ்வை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ இன்று மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் தொடங்கி வைத்தார்

Posted On: 14 AUG 2020 7:51PM by PIB Chennai

உடல்தகுதி மிக்க இந்தியா சுதந்திர ஓட்டம் என்ற ஆன்லைன் நிகழ்வை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ வெள்ளிக்கிழமை மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் தொடங்கி வைத்தார். நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும், உடல் தகுதியை வலியுறுத்தும் நிகழ்ச்சியாக இது உள்ளது. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக, உடல்தகுதி மிக்க இந்தியா சுதந்திர ஓட்டம் நிகழ்வுக்கு தனித்துவமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தாங்கள் உள்ள இடத்தில் இருந்தே, தங்களுடைய வேகத்துக்கு ஏற்ப, தங்களுக்கு சௌகரியமான நேரத்தில் இதில் பங்கேற்கலாம். நாட்டின் 73வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 முதல், மகாத்மா காந்தியின் 151வது பிறந்த ஆண்டு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வரையில் இதில் பங்கேற்க முடியும்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001U3VX.jpg

எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.), இந்திய - திபெத் எல்லை காவல் படை (ஐ.டி.பி.பி.) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை(சி.ஆர்.பி.எப்.) ஆகியவை உள்ளிட்ட ஒய்.ஏ.எஸ். ஆயுதப் படையினர் நாடு முழுக்க மிகப் பெரிய அளவில் இதில் பங்கேற்பார்கள். இந்திய ரயில்வே, சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளும் இதில் இணைந்து கொள்ளும். உடல் தகுதி கார்ப்பரேட்களான Procam மற்றும் Goqii ஆகியவையும் இதில் பங்கேற்கும். இளைஞர் விவகாரங்கள் துறையின் கீழ் 75 லட்சம் தொண்டர்களைக் கொண்ட  நேரு யுவ கேந்திரா சங்கத்தன் (என்.ஒய்.கே.எஸ்.) மற்றும் என்.எஸ்.எஸ். அமைப்பினரும், நாடு முழுக்க உள்ள இந்திய விளையாட்டு ஆணையங்களில் பயிற்சி பெறுபவர்களும் இதில் பங்கேற்பார்கள்.

நாடு முழுவதிலும் இருந்து இதில் பங்கேற்பவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்ட திரு. கிரண் ரிஜிஜூ, ``உடல் தகுதி மிக்க இந்தியா சுதந்திர ஓட்டத்தில் பங்கேற்க இதுபோன்ற உத்வேகம் காட்டுவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். அனைத்து அலுவலர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் பெருமளவு மக்களை இதில் நாம் பங்கேற்கச் செய்தால், நமது சுதந்திரத்தின் உணர்வுக்கு மரியாதை செலுத்தும் செயலாக இருக்கும். உடல் தகுதிமிக்க இந்தியா இயக்கம் மக்களின் இயக்கமாக மாற வேண்டும் என்பது பிரதமரின் லட்சிய நோக்குத் திட்டமாக உள்ளது. அவருடைய லட்சிய நோக்கு நனவாகிவிட்டதாக தெளிவாகத் தெரிகிறது'' என்று கூறினார்.

சி.பி.எஸ்.இ. மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களும் இதில் பங்கேற்பார்கள். நாட்டில் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிக்கூடங்களும் இதில் பங்கேற்கும் என்று சிபிஎஸ்இ தலைவர் மனோஜ் அகுஜா, ஐ.சி.எஸ்.இ. தலைவர் டாக்டர் ஜி. இம்மானுவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.



(Release ID: 1645966) Visitor Counter : 147