நிதி அமைச்சகம்

மூலதனச் செலவுகள் குறித்த 3-வது ஆய்வுக் கூட்டத்தை மேற்கொண்டார் நிதியமைச்சர்

Posted On: 14 AUG 2020 5:17PM by PIB Chennai

மத்திய நிதி, பெருவணிக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காணொளிக் காட்சி மூலம் கப்பல்துறை, சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகரப்புற விவகாரத்துறை, பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகிய அமைச்சகங்களின் செயலர்கள், இந்த அமைச்சகங்களின் கீழ் இயங்கும் 7 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோருடன் இந்த நிதியாண்டின் மூலதனச் செலவு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த வகையில் நடைபெறும் மூன்றாவது கூட்டமாகும் இது. கோவிட்-19 பின்னணியில், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது பற்றி சம்பந்தப்பட்ட அனைவருடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

2020-21-ஆம் நிதியாண்டில், இந்த 7 நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த மூலதனச் செலவு இலக்கு ரூ.1,24,825 கோடியாகும். 2019-20-ஆம் நிதியாண்டில், 7 நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.1,29,821 கோடியில், ரூ.1,14,730 கோடி என்ற இலக்கு எட்டப்பட்டது. இது, 88.37 சதவீதம் ஆகும். 2019-20 நிதியாண்டின் முதலாம் காலாண்டில், எட்டப்பட்டது 20,172 கோடி (!5.53%) , ஜூலை 2020 வரை ( 2020-21 நிதியாண்டு) ரூ.24,933 கோடி (20%) எட்டப்பட்டது.

இந்த நிதியாண்டின் (2020-21) இரண்டாவது காலாண்டு முடிவுக்குள் மூலதனச் செலவு இலக்கை 50 சதவீதம் அளவுக்கு எட்டுவதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட செயலர்கள்  மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார். இதற்கு உரிய திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்ட நிதியமைச்சர், பொதுத்துறை நிறுவனங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு, தங்களது இலக்குகளை எட்ட வேண்டும் என ஊக்குவித்தார். 2020-21 நிதியாண்டில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை உரிய முறையில், குறிப்பிட்ட காலத்துக்குள் செலவழிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பொதுத்துறை நிறுவனங்களின் சிறந்த செயல்திறன், கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீள்வதற்கு பெரிதும் உதவும் என்று அவர் கூறினார்.

கோவிட்-19 தொற்று உள்பட பல்வேறு காரணங்களால் உருவாகியுள்ள சவால்களால் ஏற்பட்டுள்ள  நெருக்கடி குறித்து பொதுத்துறை நிறுவனங்கள் விவாதித்தன. அசாதாரணமான நிலைமைக்கு அசாதாரணமான முயற்சிகள் தேவைப்படுவதாகவும், ஒன்றுபட்ட முயற்சிகள் மூலம், நாம் சிறப்பாக செயல்படுவதுடன் மட்டுமல்லாமல், இந்திய பொருளாதாரம் மிகச்சிறந்த பயன்களை அடைய உதவும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

*************



(Release ID: 1645958) Visitor Counter : 171