பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலை தயாரித்த 15 பொருள்களை வெளியிட்டார்
Posted On:
13 AUG 2020 6:46PM by PIB Chennai
ஆகஸ்ட் 14-ஆம் தேதியான நாளை வரை தொடரும் ‘தற்சார்பு இந்தியா’ வாரக் கொண்டாட்டங்களின் பகுதியாக, ஆயுதத் தொழிற்சாலை வாரியம் ஓ.எப்.பி மற்றும் பிஇஎம்எல் (DPSUs/ OFB) தயாரித்த தலா 4 பொருள்கள், பிஇஎல் தயாரித்த 2 பொருள்கள், எச்ஏஎல், பிடிஎல், எம்டிஎல், ஜிஆர்எஸ்இ , ஜிஎஸ்எல் (HAL, BDL, MDL, GRSE and GSL ஆகிய பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள்) தயாரித்த தலா ஒரு பொருள் ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்புத் துறைச் செயலர் டாக்டர். அஜய் குமார், பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலர் திரு. ராஜ்குமார், டிடிபி மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர். பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்கள், ஆயுதத் தொழிற்சாலை வாரியத் தலைவர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. ராஜ்நாத் சிங், பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது ‘தற்சார்பு இந்தியா இயக்கத்தின்’ முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனக் கூறினார். ‘’தற்சார்பு இந்தியா” இயக்கத்தை முன்னெடுப்பதன் மூலம், தன்னிறைவு இலக்கு இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்திக்கு தேவையான உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். “பாதுகாப்பு உற்பத்தித் துறை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், கொள்முதல் நடைமுறைகள் உற்பத்திக் கொள்கைகள் சீராக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு முன்முயற்சிகள், உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்கு இது நிச்சயம் வழிவகுக்கும். இதனால், பாதுகாப்புத் தளவாடங்கள் விஷயத்தில் இறக்குமதியை நம்பியுள்ள நிலைமை மாறி, அந்நியச் செலாவணி வெளியேற்றம் பெருமளவுக்குக் குறையும். இந்த முயற்சிகள், உள்நாட்டுத் தொழில்நிறுவனங்களுக்கு ஊக்கத்தை அளிப்பதுடன், இந்தியா மீதான வெளி அழுத்தம் குறைந்து, பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஆயுள்கால உதிரிபாகச் சேவை கிடைக்கும்’’, எனக்கூறினார்.
ஆயுதத் தொழில் வாரியத்தை வணிகமயமாக்குதல் குறித்து குறிப்பிட்ட திரு. ராஜ்நாத் சிங், “அரசுக்குச் சொந்தமான பாதுகாப்புத் தொழில்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், போட்டியிட வேண்டுமானால், தற்காலத்துக்குப் பொருந்தாத காலாவதியான நடைமுறைகள் அகற்றப்பட வேண்டும். அரசின் பாதுகாப்புத் தொழில் நிறுவனங்கள் நாட்டுக்கு செயல்திறனுடன் சேவை புரிய, நவீன மேலாண்மை உத்திகள், தொழில்நுட்பத்தைப் புகுத்துதல், ஒத்துழைப்பு முயற்சிகள் நமக்குத் தேவையாகும். இந்த நோக்கத்துடன் தான், ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை வணிகமயமாக்க அரசு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்ட விலை நிர்ணயத்தை அகற்றுவதுடன் மட்டுமல்லாமல், பெருவணிக நிறுவ மேலாண்மை நடைமுறைகளையும், செயல்திறன் மிக்க முறைகளையும் புகுத்தும் என நான் நிச்சயம் நம்புகிறேன். ஓஎப்பி தன்னைப் புதுப்பித்துக்கொள்ள இது ஒரு சவாலாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். ஆனால், இதில் வெற்றி கிட்டும் என நான் நம்புகிறேன்’’, என்று கூறினார்.
------
(Release ID: 1645682)