சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலா அமைச்சகம் நமது தேசத்தைப் பாருங்கள் என்ற தொடர் வெபினார் நிகழ்ச்சியின் கீழ் ”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” என்ற தலைப்பில் சுதந்திர தின மையக்கருத்தின் இரண்டாவது வெபினாரை நடத்தியது

Posted On: 12 AUG 2020 1:26PM by PIB Chennai

இந்தியா தனது 74வது சுதந்திரதின விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில் சுற்றுலா அமைச்சகத்தின் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற தொடர் வெபினார் நிகழ்ச்சியின் கீழ் ”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” என்ற தலைப்பிலான வெபினார் 10 ஆகஸ்ட் 2020இல் நடைபெற்றது.

”நமது தேசத்தைப் பாருங்கள்” வெபினார் தொடர் நிகழ்ச்சியின் 46வது நிகழ்ச்சியான ”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக்குறிப்புகள், நினைவுகள்” என்ற வெபினாரை இந்தியா சிட்டி வாக்ஸ், இந்தியா வித் லோக்கல்ஸ் என்ற அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி நிதின்சால், இந்தியா வித் லோக்கல்ஸ், இந்தியா ஹெரிடேஷ் வாக்ஸின் செயலாக்கத் தலைவர் டாக்டர். சௌமிராய் மற்றும் இந்தியா சிட்டி வாக்ஸின் நகர வழிகாட்டி சோம்ரிதா செங்குப்தா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.  “ஒரே பாரதம் உன்னத பாரதம்“ என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக “நமது தேசத்தைப் பாருங்கள்“ என்ற வெபினார் தொடர் நிகழ்ச்சியானது அமைந்துள்ளது.  இந்த நிகழ்ச்சி மெய்நிகர் தளம் வழியாக ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் உத்வேகத்தை தொடர்ச்சியாக மக்களிடம் பரவச் செய்து வருகிறது. 

செல்லுலார் ஜெயிலின் சிறு சிறு அறைகள் மற்றும் காட்சிக்கூடங்கள் வழியாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பயணத்தைக் காட்சிப்படுத்தியது.  வீர் சவர்க்கர், பி.கே.தத், ஃபசல்-இ-ஹக்கைராபடி, பரீந்திர குமார் கோஷ், சுசில் தாஸ் குப்தா போன்ற புகழ்பெற்ற அரசியல் கைதிகளின் வாழ்க்கையையும், அவர்கள் குறித்த கதைகளையும் இந்த வெபினார் எடுத்துக்காட்டியது.  இந்தியாவின் சுதந்திரத்திற்காக அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய முக்கியமான பங்களிப்பும் இதில் விளக்கக்காட்சியாகக் காட்டப்பட்டது.

அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் ஜெயிலானது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று போரிட்ட இந்தியர்களை நாடு கடத்தி மிகவும் மனிதாபிமானமற்ற கொடூரமான சூழலில் சிறைப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு சிறையாக இருந்தது. இன்று இது ஒரு தேசிய நினைவுச் சின்னமாக இருக்கிறது.  சிறைப்பட்டவர்களை தனித்தனியாக அடைத்து வைக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக தனித்தனி சிற்றறைகளாகக் கட்டப்பட்டதால் இது செல்லுலார் ஜெயில் என்று அழைக்கப்பட்டது.  தொடக்கத்தில் இந்த சிறைக் கட்டிடம் 7 சிறகு போன்ற பக்கவாட்டு அமைப்புகளைக் கொண்டிருந்தது.  இதன் மையத்தில் இருந்த மிகப் பெரிய மணியுடன் கூடிய கண்காணிப்புக் கோபுரத்தில் காவலர்கள் இருந்து கொண்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களைக் கண்காணித்தனர்.  ஒவ்வொரு பக்கவாட்டு சிறகு கட்டிடமும் 3 அடுக்குகளைக் கொண்டவையாகவும், ஒவ்வொரு தனி சிற்றறையும் 15க்கு 9 அடி என்ற அளவிலும் இருந்தன.  9 அடி உயரத்துடன் இருந்த இந்த அறையில் ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே இருந்தது.  இந்தப் பக்கவாட்டுக் கட்டிடங்கள் சைக்கிள் சக்கரத்தின் கம்பிகள் போன்று கட்டப்பட்டு இருந்தன.  ஒரு பக்கவாட்டுக் கட்டிடத்தின் முன் பகுதியானது, மற்றொரு கட்டிடத்தின் பின் பகுதியைப் பார்த்த வகையில் இருந்ததால் ஒரு சிறைவாசி எந்த வகையிலும் மற்றொரு சிறைவாசியுடன் தொடர்பு கொள்ள முடியாது.

நமது தேசத்தைப் பாருங்கள் என்ற தொடர் வெபினார் நிகழ்ச்சிகள் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுகைத் துறையின் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்டு வருகின்றன.  வெபினாரின் இந்த நிகழ்ச்சிகள் தற்போது https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்ற இணைய முகவரியில் பார்க்கக் கிடைக்கின்றன.  மேலும் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தினுடைய அனைத்து சமூக ஊடக ஹேண்டில்கள் மூலமாகவும் இவற்றைப் பார்க்கலாம்.

“ஜாலியன்வாலா பாக்: சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை“ என்ற தலைப்பிலான வெபினாரின் அடுத்த நிகழ்வு 14 ஆகஸ்ட் 2020 காலை 11:00 மணி அளவில் நடைபெறும். இந்த வெபினாரில் கலந்து கொள்வதற்கு https://bit.ly/JallianwalaBaghDAD என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

*****



(Release ID: 1645346) Visitor Counter : 119