பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத் துறை பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஓ.எப்.பி. புதிய கட்டமைப்பு உருவாக்கல் மற்றும் நவீனப்படுத்திய வசதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 10 AUG 2020 7:47PM by PIB Chennai

நவீனப்படுத்திய மற்றும் அந்தஸ்து உயர்த்தப்பட்ட மையங்களையும், பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் துப்பாக்கித் தொழிற்சாலை (Ordnance Factory Board – OFB) மூலம் உருவாக்கிய புதிய கட்டமைப்பு வசதியையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று இணையவழி மூலம் தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறையின் சார்பில் நடைபெற்ற தற்சார்பு இந்தியா வார நிகழ்ச்சியில் இவற்றை அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தற்சார்பு இந்தியா என்ற திட்டத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருப்பதைக் குறிப்பிட்டார். ``எண்ணம் கொள்வது, பங்கேற்பு நிலை, முதலீடு, கட்டமைப்பு வசதி மற்றும் புதுமை சிந்தனை'' என்று பிரதமர் முன்வைத்த ஐந்து அம்ச அணுகுமுறையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அதிக வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர முடியும் என்று அவர் கூறினார். கோவிட்-19 பாதிப்பு சூழ்நிலையில் நமது அரசு உரிய சமயத்தில், முன்யோசனையுடன் கூடிய முடிவுகளை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இறக்குமதிக்குத் தடை விதிக்கும் பட்டியலை வெளியிட்டது, வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்புகளை உயர்த்தியது, உள்நாட்டு மூலதனக் கொள்முதலுக்கு தனி பட்ஜெட் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப உற்பத்திக்கு முக்கியத்துவம் என்பவை போன்ற முயற்சிகளை அவர் பட்டியலிட்டார்.

உள்நாட்டுட் தொழில்நுட்பத்தில் உற்பத்தி, பாதுகாப்புத் துறை கட்டமைப்புகளில் முதலீடு, பாதுகாப்புத் துறை உற்பத்தித் திறனை விரிவாக்குதல் ஆகியவற்றுக்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த முயற்சிகள் காரணமாக இந்தியப் பாதுகாப்புத் தொழில் துறையில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று அவர் குறிப்பிட்டார். பிரதமரின் தொலைநோக்கு சிந்தனையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை, பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தளவாட உற்பத்தி வாரியம் (ஓ.எப்.பி.) ஆகியவை முழுமையான தற்சார்பு இந்தியாவை எட்டும் அணுகுமுறையில் அதிக ஆர்வத்தையும், உறுதியையும் காட்டுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ரிமோட் பொத்தானை அழுத்தி இவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை, பாதுகாப்புப் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஓ.எப்.பி.-க்கு அமைச்சர் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார். ``இந்த அந்தஸ்து உயர்த்துதல், நவீனமயமாக்கல் மற்றும் புதிய வசதி உருவாக்கம் ஆகியவை உற்பத்தி மற்றும் பராமரிப்பில் வெளிநாடுகளை சார்ந்திருக்கும் தன்மையைக் குறைப்பதற்கு உதவிகரமாக இருக்கும். எல்லாமே இனிமேல் பாதுகாப்பாக உள்நாட்டினர் கைகளில் பத்திரமாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார். ``பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஓ.எப்.பி. காட்டிய உத்வேகம் காரணமாக நீடித்து நிலைக்கக் கூடிய தற்சார்பு பொருளாதாரத்தில் பெரிய உந்துதலை ஏற்படுத்தும்'' என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

தற்சார்பு இந்தியா வாரத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஓ.எப்.பி. ஆகியவை தொடர்ச்சியாக பல்வேறு இணையவழிப் பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. தொழில் துறை நிபுணர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய துறையினரைக் கொண்டு, பொருத்தமான அனைத்து தலைப்புகளிலும் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.(Release ID: 1644924) Visitor Counter : 22