புவி அறிவியல் அமைச்சகம்

ஒடிசா சமுதாயத்தினருக்கு யுனெஸ்கோ-ஐஓசி சுனாமியை எதிர்கொள்ளும் தயார்நிலையை உறுதிப்படுத்தும் மெய்நிகர் நிகழ்ச்சி 7 ஆகஸ்ட் 2020ல் நடைபெறும்

Posted On: 06 AUG 2020 3:28PM by PIB Chennai

பொதுமக்கள், சமுதாயத் தலைவர்கள், தேசிய மற்றும் உள்ளூர் அவசரகால நிர்வாக முகமைகள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் சுனாமியை எதிர்கொள்ளும் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோவின் அரசுகளுக்கு இடையிலான கடல்சார் ஆணையம் (IOC) உருவாக்கியுள்ள சமுதாயம் சார்ந்த செயல்திறன் அடிப்படையிலான திட்டமாக ”சுனாமி ரெடி” என்பது இருக்கிறது.  இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் சுனாமி உருவாக்கும் அவசரகால நிலைமைகளை எதிர்கொள்வதற்கு கடலோர சமுதாயத்தினர் தயார்நிலையில் இருப்பதை மேம்படுத்துவதே ஆகும்.  மேலும் உயிரிழப்புகளைக் குறைத்தல், சொத்து சேதம் ஆவதைக் குறைத்தல் ஆகியனவும் இதன் முக்கியமான குறிக்கோள்கள் ஆகும்.  யுனெஸ்கோ – ஐஓசி-யின் இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் பாதிப்புத் தடுப்பு அமைப்புக்கான (ICG/IOTWMS) அரசாங்கங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயித்துள்ள சிறந்த நடைமுறைக்கான குறிக்காட்டிகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் சமுதாய மக்கள் தயார் நிலையில் இருப்பதை மேம்படுத்தும் முறையான மற்றும் அமைப்பாக்கப்பட்ட அணுகுமுறையை உறுதி செய்வதும் இதன் நோக்கம் ஆகும்.

ஒடிசா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (OSDMA), மூலம் இப்போது கஞ்சாம் மாவட்டத்தின் வெங்கட்ராய்ப்பூர் கிராமம் மற்றும் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் நொலியாசாகி கிராமம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் சுனாமியை எதிர்கொள்வதற்குத் தயாராக இருத்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த இரண்டு கிராமங்களிலும் குறிகாட்டிகள் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை தேசிய வாரியமானது உரிய வழிமுறைகளின் படி பரிசீலித்துப் பார்த்த பிறகு தேசிய அளவிலான அங்கீகாரத்துக்காக யுனெஸ்கோ-ஐஓசி அமைப்புக்குப் பரிந்துரை செய்வதற்கு முடிவு செய்துள்ளது.  தேசிய வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் யுனெஸ்கோ-ஐஓசி அமைப்பானது வெங்கட்ராய்ப்பூர் மற்றும் நொலியாசாகி ஆகிய இரண்டு கிராமத்தின் சமுதாயத்தினரை ”சுனாமி ரெடி சமுதாயத்தினர்” என அங்கீகரித்துள்ளது.  இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சுனாமி ரெடி திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் நாடாக இந்தியாவும், முதல் மாநிலமாக ஒடிசாவும் திகழ்கின்றன.

வெங்கட்ராய்ப்பூர் மற்றும் நொலியாசாகி கிராம சமுதாயத்தினருக்கு யுனெஸ்கோ-ஐஓசி அமைப்பின் அங்கீகாரச் சான்றிதழையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்குவதற்காக ஒடிசா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கடல்சார் தகவல் சேவைகளுக்கான தேசிய மையம் (INCOIS), ஐசிஜி / ஐஓடிடபிள்யூஎம்எஸ் (ICG/IOTWMS) செயலகம், யுனெஸ்கோ-ஐஓசி அமைப்பின் இந்தியப் பெருங்கடல் சுனாமி தகவல் மையம் (IOTIC)ஆகியவற்றுடன் இணைந்து 7 ஆகஸ்ட் 2020 அன்று மெய்நிகழ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம்.ராஜீவன் மற்றும் சிறப்பு அழைப்பாளர் இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் – செயலர் திரு ஜி.வி.வி.சர்மா ஆகியோர் இரண்டு கிராமங்களுக்கும், ஒடிசா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுக்கும் அங்கீகாரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குவார்கள். 

*****



(Release ID: 1643966) Visitor Counter : 240