மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட, தொடக்கக் கல்வியின் உயர்நிலை கல்வித் திட்டத்திற்கு எட்டு வார காலத்திற்கான NCERT திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெளியிட்டார்.

Posted On: 03 AUG 2020 7:09PM by PIB Chennai

தொடக்கக் கல்வியின் உயர் வகுப்புக்கான (இடைநிலை வகுப்புகள்) மாற்றுக் கல்வித் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்' இன்று இணையவழி மூலம் வெளியிட்டார். கோவிட் -19 பாதிப்புச் சூழ்நிலையில் மாணவர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் காலத்தை, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே பயனுள்ள வகையில் கழிப்பதற்கு, தொடக்கநிலை மற்றும் தொடக்க உயர்நிலைக் கல்வி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்வி அட்டவணை வெளியிடப்பட்டது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் NCERT மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர், ஆன்லைன் கற்றல்  ஆதாரவளங்களைப் பயன்படுத்தி, கோவிட்-19 பாதிப்புச் சூழலை நல்ல முறையில் கையாள்வதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக்கூட முதல்வர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழிமுறைகளை சொல்லித் தருவதாக இது இருக்கும் என்று கூறினார். வீட்டில் இருந்தபடியே பள்ளிக் கல்வி கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடக்கக் கல்வி உயர்நிலையில் (6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில்) உள்ள மாணவர்களுக்கு நான்கு வாரங்களுக்கான கல்வி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. இப்போது அவர்களுக்கு அடுத்த எட்டு வாரங்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப வசதிகளையும், சமூக ஊடக வசதிகளையும் ஆசிரியர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கற்பவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவுவதாக இது இருக்கும்.

செல்போன், வானொலி, தொலைக்காட்சி, குறுஞ்செய்தி மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களில் தகவல்களை அளிக்கும் பல்வேறு அம்சங்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பொக்ரியால் தெரிவித்தார். பலரிடம் இன்டர்நெட் வசதியுடன் கூடிய கைபேசி இல்லாதிருத்தல், வாட்ஸப், முகநூல், ட்விட்டர், கூகுள் போன்ற இதர சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, செல்போன்களில் குறுஞ்செய்தி மூலம் அல்லது குரல் பதிவு மூலம் ஆசிரியர்கள் கற்பித்தல் செய்வதற்கான வழிகாட்டுதல் இதில் உள்ளது. இந்த அட்டவணையைப் பயன்படுத்திக் கொள்ள தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு பெற்றோர் உதவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில், ஆடியோ புத்தகங்கள், வானொலிப் பயிற்சித் திட்டங்கள், வீடியோ பயிற்சித் திட்டங்களும் இதில் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

கலைப் பாடக் கல்வி, உடற்பயிற்சிகள், யோகா, தொழில் பயிற்சிக்கு முந்தைய திறன்கள் போன்றவற்றில் அனுபவ ரீதியில் கற்றல் செயல்பாடுகளும் இதில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

 

 

*******



(Release ID: 1643238) Visitor Counter : 277