சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மின்னணு புலனறிதல் நெட்வொர்க் தடுப்பூசி (eVIN) முறை காரணமாக கோவிட் நோய்த் தொற்று காலத்தில், அத்தியாவசியத் தடுப்பூசி சேவைகள் அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Posted On: 03 AUG 2020 4:38PM by PIB Chennai

நாடு முழுக்க தடுப்பூசி வழங்கலைப் பலப்படுத்தும் நோக்கில் புதுமையான தொழில்நுட்பத் தீர்வாக, மின்னணு புலனறிதல் நெட்வொர்க் தடுப்பூசி (eVIN) முறை உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார லட்சியத் திட்டத்தின் (என்.எச்.எம்.) மூலம் இந்தத் திட்டம் அமல்படுத்தப் படுகிறது. நாடு முழுக்கத் தடுப்பூசிக் கையிருப்பு, வழங்கல் நிலை, சேமிப்பு வெப்பநிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அளிப்பதாக eVIN உள்ளது. கோவிட் பாதிப்பு காலத்தில், அவசியமான தடுப்பூசி சேவைகளைத் தொடர்ந்து அளிப்பதன் மூலம், நமது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் அளிப்பதை உறுதி செய்வதற்காக,இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

eVIN திட்டம் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் பயிற்சி பெற்ற அலுவலர்கள் ஆகியோரை இணைப்பதாக உள்ளது. நாடு முழுக்க பல இடங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள், அவற்றின் பாதுகாப்பு வெப்ப நிலைகள் பற்றிய தகவல்கள் இதன் மூலம் உடனுக்குடன் கிடைக்கும்.

eVIN திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள அந்தமான், நிகோபர் தீவுகள், சண்டீகர், லடாக் மற்றும் சிக்கிம் பகுதிகளில் விரைவில் இத் திட்டம் தொடங்கப்படும். இப்போது 22 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 585 மாவட்டங்களில் 23,507 இடங்களில் eVIN மூலம் தடுப்பூசி மருந்துகள் வைத்து பராமரிக்கப்படுகின்றன. eVIN பயிற்சி அளித்ததன் மூலம் 41,420க்கும் மேற்பட்ட தடுப்பூசி சங்கிலித் தொடர்பு அலுவலர்கள், டிஜிட்டல் ஆவணக் காப்பு முறைகளைக் கற்றிருக்கிறார்கள். குளிர்பதன சேமிப்பில் உள்ள தடுப்பூசிகள் எந்த வெப்ப நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிவதற்கு சுமார் 23,900 மின்னணு வெப்பமானி சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

பெரிய அளவில் தகவல் தொகுப்பை  உருவாக்குவதற்கு eVIN உதவிகரமாக உள்ளது. செலவுகளை மிச்சப்படுத்தும் வகையில் தேவைக்கேற்ற அதிகபட்ச தடுப்பூசிகளைக் கையிருப்பு வைத்துக் கொள்வதற்கு திட்டமிடல் செய்வதற்கு இது உதவியாக இருக்கும். பெரும்பாலான சுகாதார மையங்களில், எந்த நேரத்திலும் 99 சதவீத தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது eVIN நடைமுறை அமல் செய்யப்படும் அனைத்து சுகாதார மையங்களிலும், இந்த உயர் தொழில்நுட்பம் நல்ல முறையில் செயல்படுகிறது என்பதைக் காட்டுவதாக இது உள்ளது. கையிருப்பு குறைபாடு நிலைமை 80 சதவீதம் அளவுக்குக் குறைந்துவிட்டது. புதிய இருப்பை கொண்டு போய் சேர்ப்பதற்கான அவகாசமும் பாதியாகக் குறைந்துவிட்டது. எந்தப் பகுதியிலும், தடுப்பூசி மருந்து தேவைப்படும் குழந்தைக்கு உடனடியாக தடுப்பூசி போடப்படுகிறது, தடுப்பூசி மருந்து இல்லை என்று சொல்லி யாரையும் திருப்பு அனுப்பும் நிலை இல்லை.

கோவிட்-19 நோய்த் தொற்று சூழலைக் கையாள்வதில் மத்திய அரசின் முயற்சிகளுக்கு உதவும் வகையில், கோவிட் - 19 சிகிச்சைக்குத் தேவையான பொருள்களின் வழங்கல் நிலையை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கண்காணிக்கவும் eVIN உதவிகரமாக உள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து எட்டு மாநிலங்கள் (திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா) eVIN வசதியை 100 சதவீத அளவுக்கு ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றன. மாநிலத்தில் கோவிட் -19 மேலாண்மைக்குத் தேவையான பொருள்கள் கிடைப்பதைக் கண்காணித்தல், 81 அத்தியாவசிய மருந்துகளில் ஏதும் பற்றாக்குறை இருந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிப்பதில் இது பயனுள்ளதாக இருக்கிறது.

கோவிட்-19 சிகிச்சை முறையில் புதிதாக ஏதும் தடுப்பூசி மருந்து சேர்க்கப்பட்டால், அந்த நிலையைக் கையாள்வதற்கு பலமான கட்டமைப்பு வசதியை அளிப்பதாக இது இருக்கும்.

 

*****


(Release ID: 1643210) Visitor Counter : 378