குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாநிலங்களவைக்கு 2003இல் ஒதுக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்திற்காக குடியரசுத் துணைத்தலைவர் தனது அதிருப்பதியைத் தெரிவித்தார்

Posted On: 30 JUL 2020 5:40PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள ஆர்.கே.புரம் பகுதியில் மாநிலங்களவை செயலகத்திற்காக ஒதுக்கப்பட்ட 8,700 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஏற்பட்டு வரும் தாமதத்திற்காக குடியரசுத் துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு எம்.வெங்கய்ய நாயுடு தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையின் தற்போதைய நிலைமை குறித்து மீளாய்வு செய்வதற்காக மாநிலங்களவை செயலகம், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், டெல்லி நகரப்பகுதி குடியிருப்பு மேம்பாட்டு வாரியம், நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் திரு நாயுடு வீட்டுவசதி, நகர்ப்புற அமைச்சகத்தின் செயலாளரிடம் நிலத்தைச் சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மாநிலங்களவைச் செயலகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பான 8,700 சதுர மீட்டரில் சுமார் 4384.25 சதுர மீட்டர் அளவிற்கான நிலத்தை 3 தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் ஆக்ரமித்துள்ளன.  அதனோடு சுமார் 1193.54 சதுர மீட்டர் பரப்பில் அனுமதிக்கப்படாத குடிசைப்பகுதிகள் உருவாகியுள்ளன. 

ஜுன் 2018ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து மாநிலங்களவைத் தலைவர் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து வருகிறார்.  நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குத் தடையாக உள்ள அனைத்து சட்டப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நிலம் கையகப்படுத்தப்பட்ட உடனேயே அந்த இடத்தில் மாநிலங்களவை தொலைக்காட்சி மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் மாநிலங்களவை செயலகத்தின் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றைக் கட்டும் பணிகளைத் தொடங்குவதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஆர்வமுடன் உள்ளார். இதன் மூலம் அரசின் செலவினத்தில் குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பை உருவாக்க முடியும். 

மாநிலங்களவைத் தொலைக்காட்சி முன்னர் வருடாந்திர வாடகையாக ரூ.30 கோடி செலுத்தி வந்தது.  இந்த பிரச்சினையை புதுதில்லி மாநகராட்சி கவுன்சிலின் பார்வைக்கு எடுத்துச் சென்று தற்போது வாடகை ரூ.15 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் இந்த ரூ.15 கோடி என்பதே கூட அதிகம், இது தவிர்க்கப்பட வேண்டிய நிதிச்சுமை என்றும் தெரிவித்தார். நிலத்தின் செலவுக்கும் குடிசைப் பகுதிகளை மாற்றுவதற்கும் மாநிலங்களவை ரூ.1.25 கோடி செலவிட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். 

நிலத்தின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு மாதமும் 1.25 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக கூறிய அவர் நில ஆக்கிரமிப்புகளை அகற்றி அதைக் கையகப்படுத்தாத வரை இந்தச் செலவு பயனற்ற செலவு தான் என்றும் தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து மிக விரைவில் கூட்டம் நடத்தி பிரச்சினையைத் தீர்க்குமாறு திரு.நாயுடு வீட்டுவசதி, நகரப்புற மேம்பாட்டு அமைச்சகச் செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

****



(Release ID: 1643147) Visitor Counter : 151