ஆயுஷ்

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் உள்ள கோவிட் மையத்தின் ஏற்பாடுகளை ஆயுஷ் அமைச்சர் மதிப்பாய்வு செய்கிறார்

Posted On: 28 JUL 2020 6:43PM by PIB Chennai

ஆயுஷ் மாநில அமைச்சர் திரு. ஸ்ரீபாத் யெசோ நாயக், புதுடெல்லியின் சரிதா விஹார் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) கோவிட்-19 சுகாதார மையத்தை (CHC) இன்று பார்வையிட்டார். அந்த சுகாதார மையத்தில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அவர் மருத்துவர்கள் குழுவுடன் உரையாடி, மையத்தில் உள்ள நோயாளிகளின் நல்வாழ்வு குறித்து விசாரித்தார். கோவிட்-19 சுகாதார மையத்தில் கிடைக்கும் வசதிகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையின் முடிவுகள் குறித்து அவர்களின் கருத்துக்களைk கேட்டறிந்தார்.

கோவிட் - 19 தொற்றுநோயை அடுத்து அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) வழங்கிய சேவைகளில் அமைச்சர் திருப்தி தெரிவித்தார். ஆயுர்வேதக் கொள்கைகளின் அடிப்படையில் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கவனிப்பை வழங்குவதில், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (AIIA) ஒட்டுமொத்த குழுவினரின் அர்பணிப்பு, உற்சாகம், தைரியம் மற்றும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்று கூறினார். இந்தியா முழுவதும் உள்ள கோவிட் - 19 நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் நிலைக்கு தகுந்த ஆயுர்வேத மருத்துவம், உணவு, யோகா மற்றும் தளர்வு நுட்பங்கள் மூலம் முழுமையான கவனிப்பை வழங்குவதில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) ஒரு முன்மாதிரியான வழி காட்டியாக திகழ்கிறது.

மேலும் , இந்த நிறுவனத்தில் கோவிட் – 19 நோயாளிகளின் நேர்மறையான கருத்துகள் மிகவும் ஊக்கமளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். கோவிட் -19 சுகாதார மையத்தில் (CHC) உள்ள அனைத்து நோயாளிகளும் வாழ்க்கையை நடத்த ஒரு நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக் கொண்டதுடன், அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தில் மிகவும் திருப்தி அடைந்தனர். இது நோயைக் கடப்பதற்கு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கையின் மற்ற கட்டங்களிலும் அவர்களுக்கு உதவும். கோவிட் - 19 நோயாளிகளுக்கு முழுமையான ஆயுர்வேத கவனிப்பு மூலம் சிகிச்சையளிப்பதற்கான அவர்களின் முயற்சிகளில் முன்மாதிரியான வழிகாட்டுதலுக்கு அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (AIIA) ஒட்டுமொத்த குழுவினருக்கும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் பாரம்பரிய முறை - ஆயுர்வேதம் இந்த தொற்றுநோயைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும் சுகாதாரப் பணிகளிலும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று கூறினார். கோவிட் -19 சுகாதார மையத்தில் (CHC) அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு உணவு மற்றும் யோகா உள்ளிட்ட முழுமையான ஆயுர்வேத சிகிச்சை நெறிமுறை வழங்கப்பட்டது. தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் செறிவு (SPO2) உடன் சிகிச்சை காலத்தில் சிக்கல்கள் இல்லாமல் நூறு சதவிகிதம் நோயில் இருந்து மீண்ட பின், நல்ல ஆரோக்கியத்துடன் நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அறிகுறிகளின் தீவிரம் காணப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் இப்போது வரை இறப்பு விகிதம் பூஜ்ஜியமாக இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் நோய் தொற்று இல்லாதது உறுதி செய்யப்பட்டது. ஆயுர்வேத மருத்துவ குழுவினரின் அறிவும் அனுபவமும் நிச்சயமாக இந்த தொற்றுநோயை எதிர்ப்பதில் ஆயுர்வேதத்தை ஒரு முன்னணி சுகாதார அமைப்பாக முன்னிறுத்தும்.

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) உள்ள இலவச கோவிட் - 19 சோதனை மையத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். மேலும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) டெல்லி அரசாங்கத்தால் கோவிட் -19  சோதனை மையமாக (RT-PCR மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனை) நியமிக்கப்பட்டுள்ளது.

*******


(Release ID: 1641900) Visitor Counter : 248