குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அதனை எதிர்கொள்வதற்கு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள் – குடியரசுத் துணைத்தலைவர்
Posted On:
27 JUL 2020 5:22PM by PIB Chennai
இந்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு எம். வெங்கய்ய நாயுடு ஊடகங்களில் அதிலும் இன்றைய நாட்களில் புதிய ஊடகச் சூழலில் பரவி வரும் தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.
”டைம்ஸ் ஸ்காலர்ஸ் ஈவண்ட்” என்ற நிகழ்ச்சியில் இன்று காணொளிக் காட்சி மூலம் 200 இளம் பங்கேற்பாளர்களிடம் உரையாற்றிய போது குடியரசுத் துணைத்தலைவர் உண்மையைப் பகுப்பாய்வு செய்து அதனை தைரியத்துடன் ஏற்றுக்கொள்ளவும் பொய்களைப் புறந்தள்ளவும் தேவையான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
குழந்தைகளிடையே படிக்கும் பழக்கம் குறைந்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்த குடியரசுத் துணைத்தலைவர் இன்று கட்டுப்பாடற்ற அளவில் தகவல்கள் கிடைக்கின்ற சூழலிலும் குழந்தைகள் புத்திசாலியான மற்றும் அறிவுக்கூர்மையுள்ள வாசகர்களாக மாறுவதற்கு கற்றுத்தர வேண்டிய தேவை உள்ளது என்று எடுத்துரைத்தார்.
”நன்கு வாசிக்கும் ஒரு மாணவர் நிச்சயமாக வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய கோவிட் பெருந்தொற்று கல்வியாண்டு அட்டவணையில் ஏற்படுத்தியுள்ள தடையானது பல மாணவர்களிடம் பதட்டத்தையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர் ஒருவரின் கட்டுப்பாட்டை மீறிய செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்றும் அந்த மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் உங்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறனையும், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப சமாளிக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் உடல் உரத்தை மேம்படுத்துதல், மனநலத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளுதல், மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தவிர்த்தல் ஆகியவற்றுக்காக மாணவர்கள் தொடர்ச்சியாக யோகாவைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
தற்காலத்தில் ஒவ்வொரு துறையிலும் நிலவுகின்ற கடுமையான போட்டி குறித்து சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், திறனை அடைவதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
வெற்றியை அடைய குறுக்குவழி ஏதும் இல்லை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள் என்று மாணவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
”கல்வி என்பது மாணவர்களுக்கு தேவையான அறிவை மட்டும் வழங்குவதாக இல்லாமல் அவர்களை சிறந்த மனிதர்களாகவும் வளர்த்தெடுக்கும் வகையில் இருக்கவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
நமது பழங்காலக் கல்வி முறையானது ஒழுக்க மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது என்பதைச் சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் கருணை, நேர்மை, நாணயம், பணிவு, நன்றி பாராட்டல், மன்னித்தல், பெரியவர்களை மதித்தல் போன்ற மனித விழுமியங்களை குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வறுமை, சமநிலையின்மை, வன்முறை மற்றும் பருவநிலை மாறுதல் என உலகம் இன்று சந்தித்து வரும் பிரச்சினைகளை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாகத் தெரிவித்த குடியரசுத் துணைத்தலைவர் இந்தப் பிரச்சினைகளுக்கு அவர்கள் புதிய தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தேசத்தந்தை வழங்கியுள்ள ஆற்றல் மிக்க கவசம் குறித்து மாணவர்களுக்கு நினைவூட்டிய திரு நாயுடு வாய்ப்பு குறைந்தவர்களுடைய நிலைமையை மாணவர்கள் எப்பொழுதும் நினைத்துப் பார்ப்பார்கள் என்ற தனது நம்பிக்கையை தெரிவித்தார்.
(Release ID: 1641635)
Visitor Counter : 291