பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியினர் நல அமைச்சகத்தின் இந்தியப் பழங்குடியின கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு , பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளது.
Posted On:
27 JUL 2020 6:04PM by PIB Chennai
கோவிட்-19 பெருந்தொற்று , நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய (இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும்) பேரழிவு கடந்த நான்கு மாத காலமாகத் தொடர்கிறது. மக்கள் தங்களது வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மீட்க முயற்சிக்கும் நிலையில், இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு TRIFED பணியாளர்கள் குழு, பழங்குடியின மக்களின் முக்கிய மேம்பாட்டை நோக்கி முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறது.
இந்த நெருக்கடியான சூழலில், ‘’உள்ளூருக்காக குரல் கொடு’’ என்னும் தாரக மந்திரத்தைப் பின்பற்றி , ‘’ பழங்குடியினருக்காக குரல் கொடு- எனது வனம், எனது சொத்து , எனது விடியல்’’ என்பதை நடைமுறைப்படுத்த, பழங்குடியின நல அமைச்சகத்தின் இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு TRIFED பல்வேறு சிறப்பு மிக்க முயற்சிகளை , ஏற்கனவே உள்ள திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துடன் மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற நேரத்தில், அல்லலுறும் பழங்குடியின மக்களுக்கு சமய சஞ்சீவியாக இது உருவெடுத்துள்ளது. இந்த கடினமான நேரத்தில், கடந்த சில மாதங்களாக, பழங்குடியின மக்களுக்கு உதவும் வகையில், வேலை வாய்ப்பு, வாழ்வாதார உருவாக்கம் என TRIFED மேற்கொண்ட சில முக்கிய முயற்சிகள் வருமாறு;
நமது வாழ்க்கையைத் திடீரென புரட்டிப்போட்ட பெருந்தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, பழங்குடியினக் கைவினைக் கலைஞர்களின் ரூ.100 கோடி மதிப்பிலான பொருள்கள் விற்கப்படாமல் இருப்பில் இருந்தன. இந்தப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், பாதிக்கப்பட்ட பழங்குடி குடும்பங்களுக்கு உதவும் வகையிலும், TRIFED ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள்களைக் கொள்முதல் செய்து, அவற்றை ஆன்லைன் விற்பனை மூலம் விற்கும் தீவிரத்திட்டத்தை தொடங்கியுள்ளது. டிரைப்ஸ் இந்தியா வலைதளம் மூலமாகவும் ( கணிசமான தள்ளுபடியுடன்), அமேசான், பிளிப்கார்ட், ஜெம் ஆகிய சில்லரை தளங்கள் வழியாகவும் அவை விற்பனை செய்யப்படும். 5000-க்கும் மேற்பட்ட பழங்குடியின கைவினைஞர்கள் குடும்பங்களுக்கு , வாழும் கலை அறக்கட்டளையுடன் சேர்ந்து, டிரைபெட் பணியாளர் குழு இலவச உணவு, ரேசன் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
சிறு வன உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ், 16 மாநிலங்களில் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1000 கோடி என்னும் சாதனை அளவை எட்டியுள்ளது. மேலும் ரூ.2000 கோடிக்கு வர்த்தகம் புரியப்பட்டுள்ளது.
இந்த வெற்றிகரமான முயற்சிகளின் பலனாகவும், மேலும் பல நடவடிக்கைகள் மூலமாகவும், நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றுவதுடன், பாதிக்கப்பட்ட கைவினைஞர்கள் மற்றும் சேகரிப்பாளர்களின் பொருளாதார நிலையைப் புதுப்பித்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் டிரைபெட் ஈடுபட்டுள்ளது.
(Release ID: 1641608)
Visitor Counter : 206