புவி அறிவியல் அமைச்சகம்

புவி அறிவியல் அமைச்சகம் தனது நிறுவன நாளை கொண்டாடியது

Posted On: 27 JUL 2020 3:25PM by PIB Chennai

மத்திய சுகாதார, குடும்ப நல்வாழ்வு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன், ”உலகிலேயே தனிச்சிறப்பு வாய்ந்த அமைப்பாக புவிஅறிவியல் அமைச்சகம் விளங்குகிறது.  வளிமண்டலம், நீர்க்கோள மண்டலம், உறைநீர்மண்டலம் மற்றும் புவியின் மேலடுக்கு ஆகிய புவி அறிவியலின் அனைத்துப் பிரிவுகளையும் முழுமையாக கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த அமைச்சகம் செயல்படுகிறது” என்று குறிப்பிட்டார். ”புவி அறிவியலின் அனைத்துக் கூறுகளையும் முழுமையாகக் கையாளுகின்ற வகையில் அர்ப்பணிக்கப்பட்ட தனி அமைச்சகம் உள்ள ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது.  காலதாமதம் இல்லாமல் முழுமையான அணுகுமுறையில் மிகப்பெரும் பிரச்சினைகளைத் திட்டமிடவும் தீர்வு காணவும் உதவுகின்ற ஒருங்கிணைந்த செயல்முறையை உருவாக்க இது உதவுகிறது.  மிக அண்மைக் காலத்தில் அமைச்சகம் பல குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. பிற நாடுகள் கடைபிடிக்க வேண்டிய சர்வதேசத் தரத்தில் இந்தச் சாதனைகள் அமைந்துள்ளன என்று பலராலும் கருதப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புதுதில்லியில் இன்று புவிஅறிவியல் அமைச்சகத்தின் நிறுவன நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் டாக்டர். ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார்.  இந்திய வானியல் ஆய்வுத்துறை, நடுத்தர அளவுப்பரப்பு பருவநிலை கணிப்புக்கான தேசிய மையம், வெப்பமண்டல வானியல் ஆய்வுக்கான இந்திய நிறுவனம், புவி ஆபத்துக்காரணி மதிப்பீட்டு மையம் மற்றும் கடல் அபிவிருத்தி அமைச்சகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 2006ஆம் ஆண்டில் புவி அறிவியல் அமைச்சகம் உருவாக்கப்பட்டது. 

புவியின் புதிர்களை விடுவிப்பதற்காக பிற அனைத்து அறிவியல் துறைகளில் இருந்தும் பெறப்படும் அறிவின் ஒட்டுமொத்த சேர்க்கை அறிவியலாக புவி அறிவியல் விளங்குகிறது.  இது தனிச்சிறப்பு மிக்கதாகவும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும் இருக்கிறது.  புவி அறிவியல் நம்மை சர்வதேச அளவில் சிந்திக்கவும் அதே சமயம் உள்ளூர் நிலையில் செயல்படவும் வைக்கிறது.  தனிநபர்களாகவும் குடிமக்களாகவும் நமது வாழ்க்கையின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து தெளிவான முடிவுகள் எடுக்க உதவுகிறது என்று குறிப்பிட்ட டாக்டர் ஹர்ஷ் வர்தன், ”புவி அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை புரிந்து கொண்டுள்ள மக்கள் தங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள் குறித்துத் தெரிந்து கொண்டு முடிவு எடுப்பவர்களாக இருக்கின்றனர். சுத்தமான நீர், நகரத்திட்டமிடல் மற்றும் மேம்பாடு, தேசியப் பாதுகாப்பு, சர்வதேசப் பருவநிலை மாற்றம், இயற்கை மூலவளங்களை பயன்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்து தீர்வுகாண முடியும்” என்றும் குறிப்பிட்டார். 21ஆம் நூற்றாண்டில் நமக்கு தகவல்களைத் தெரிந்து வைத்துள்ள குடிமக்கள்தான் தேவை.  புவிஅறிவியல் மிகச் சரியாக நம்மை அங்கு தான் அழைத்துச் செல்கிறது.  ”புவிஅறிவியல் திறன்கள்” தற்போது ”வாழ்க்கைத் திறன்களாக” மாறி வருகின்றன.  எனவே புவிஅறிவியல் அமைச்சகம் என்பது ”வாழ்க்கைத் திறன்கள் அமைச்சகமாக” எளிதில் பார்க்கப்படலாம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

”வானிலை மற்றும் பருவநிலை அறிவியல்களைப் பொறுத்து, உலகிலேயே பேரிடர் மேலாண்மைக்கான வெப்பமண்டலப் புயல்கள், வெப்ப அலைகள் மற்றும் வெள்ளங்கள் ஆகியன குறித்த துல்லியமான எச்சரிக்கைகளுடன் கூடிய மிகச்சிறந்த வானிலைச் சேவைகளை இந்தியா பெற்றுள்ளது. எஸ்கேப் பேனல் என்பதன் கீழ் 13 உறுப்பு நாடுகளுக்கு ஐ.எம்.டி பிரிவானது வெப்பமண்டலப் புயல்கள் மற்றும் சூறாவளிகள் குறித்த ஆலோசனைத் தொகுப்புகளை வழங்கி வருகிறது என்று அமைச்சர் எடுத்துக்காட்டினார். 

வெப்பமண்டலப் பகுதியில் பிரத்யேக ஆய்வு வசதியான வளிமண்டல ஆராய்ச்சி மையம் உருவாக்கும் பணி முதல்கட்ட கருவிகளுடன் 2021இல் ஆரம்பிக்கப்படும் என்று டாக்டர். ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். இந்தத் திறந்தவெளி கூர்நோக்கு ஆய்வு மையம் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். (போபாலில் இருந்து 50கி.மீட்டர் தொலைவில்) பருவகால மேகங்கள் மற்றும் நிலமேற்பரப்பு செயல் முறைகள் ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது.  ரேடார்கள், காற்றின் வேகம் மற்றும் திசையைக் கண்டறியும் கருவிகள், யு.ஏ.வி போன்ற அதிநவீன கூர்நோக்கு அமைப்புகள் இந்த மையத்தில் நிறுவப்படும். உலகின் மிகச் சில நாடுகளில் மட்டுமே இத்தகைய ஆராய்ச்சி வசதிகள் உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


(Release ID: 1641567) Visitor Counter : 269