மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

"இந்தியாவில் தங்குங்கள், இந்தியாவில் படியுங்கள்" தொடர்பான சிந்தனையைத் தூண்டும் நிகழ்ச்சியை மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர் நடத்தினார்.

Posted On: 24 JUL 2020 4:37PM by PIB Chennai

"இந்தியாவில் தங்குங்கள், இந்தியாவில் படியுங்கள்"  என்பது தொடர்பான சிந்தனையைத் தூண்டும் நிகழ்ச்சியை, மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம், தொடர்புடைய மூத்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி/தொழில்நுட்ப அமைப்புகளின் தலைவர்களோடு மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' புது தில்லியில் இன்று நடத்தினார். மனிதவள மேம்பாடு இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரேவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். உயர் கல்விச் செயலாளர் திரு அமித் காரே, பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் திரு. டி.பி. சிங், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழுத் தலைவர் திரு. அனில் சகஸ்ரபுத்தே, இணைச் செயலாளர் (ஐசிசி) திருமதி. நீதா பிரசாத் மற்றும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பங்கஜ் மிட்டல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

கோவிட்-19 நிலைமையின் காரணமாக, வெளிநாடுகளில் படிக்க விரும்பிய பல மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கி, இந்தியாவிலேயே தங்கள் படிப்புகளைத் தொடர முடிவெடுத்துள்ளதாக தனது தொடக்க உரையில் திரு. பொக்ரியால் கூறினார். தங்களது படிப்புகளை முடிப்பதைப் பற்றிய கவலையோடு இந்தியாவுக்குத் திரும்பும் மாணவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார். இந்த இரு பிரிவுகளில் உள்ள மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மனித வள மேம்பாடு அமைச்சகம் எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அக்கறை தேவைப்படும் இரு முக்கிய விஷயங்களை இந்த நிலைமை வழங்குவதாக அவர் தெரிவித்தார்:

 

1. வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல்:

 

இந்தியாவில் உள்ள முன்னணிக் கல்வி நிறுவனங்களில் தகுந்த கல்வி வாய்ப்புகளை வழங்கி அவர்களை இங்கேயே இருக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள்.

 

2. வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மாணவர்களின் கவலைகளை போக்குதல்:

 

தங்களது படிப்பை முடிக்க இந்த மாணவர்களுக்கு ஆதரவளித்தல்

 

அவர்களது தற்போதைய மற்றும் எதிர்காலக் கல்வித் தேவைகளைப் பற்றிய தெளிவான புரிதலும், சரியான நேரத்தில் சரியான இடையீடுகளுடன் அவர்களின் பணித் திட்டங்களைப் பூர்த்தி செய்தலும் இந்த விஷயங்களுக்குத் தேவைப்படுகிறது. மேற்கண்ட ஒவ்வொரு நிலைமையும் பல்வேறு வகையிலான வாய்ப்புகளையும், சவால்களையும் வழங்குகிறது என அவர் மேலும் கூறினார்.

 

சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் 2019-ஆம் ஆண்டில் தங்களது படிப்புகளைத் தொடர்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றதாக தெரிவித்த அமைச்சர், இதனால் மதிப்பு மிக்க அந்நியச் செலாவணியும், பிரகாசமான மாணவர்களும் இந்தியாவை விட்டு வெளியில் சென்றதாகக் கூறினார். பிரகாசமான மாணவர்கள் தங்களது படிப்புகளை இந்தியாவிலேயே தொடர்வதற்கு உதவ நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த அரசின் வாக்குறுதியின் படி, 2024-க்குள் அனைத்து முன்னணிக் கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களையும் நாம் 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் மற்றும் உயர் சிறப்புக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை 2024-க்குள் 50-ஆக அதிகரிக்க வேண்டும்.

 

நிகழ்ச்சியில் பேசிய திரு. சஞ்சய் தோத்ரே, மாணவர்கள் ஏன் வெளிநாடுகளுக்குப் போகிறார்கள் என்பதற்கான மூல காரணத்தை நாம் புரிந்துக் கொண்டு, அந்தப் பிரச்சினைகளைக் களைய முயல வேண்டும் என்றார். மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கி, தங்களது உயர் கல்வியைத் தொடர இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதுமான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.

 

பல்வேறு மூல காரணங்கள் உள்ளதாக தெரிவித்த உயர் கல்விச் செயலாளர் திரு அமித் காரே, இதில் உள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் களைய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நமது 'இந்தியாவில் படியுங்கள்' திட்டத்தின் கீழ் சர்வதேச மாணவர்களை இந்தியாவை நோக்கி இழுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

இன்னும் அதிக அளவில் கூட்டுத் திட்டங்கள், இரட்டைப் பட்டப் படிப்புகள் ஆகியவற்றை நாம் உருவாக்குவதோடு, இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் மாணவர்களுக்காக முறையான ஆய்வு வசதிகள் உருவாக்கப்படுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் திரு. டி.பி. சிங் கூறினார்.

 

ஒட்டுமொத்த நிலைமையையும் ஆராய்ந்த பிறகு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழு வெளியிடும் என்று அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழுத் தலைவர் திரு. அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்தார்.

 

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:

 

1. அதிக அளவிலான மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கி இங்கேயே படிப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களையும், நடவடிக்கைகளையும், நன்றாக செயல்படும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான செயல்முறையையும் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் தலைமையிலான குழு ஒன்று உருவாக்கும். மேலும், பல்துறை மற்றும் புதுமையான படிப்புகளைத் தொடங்குதல், இரட்டை மற்றும் கூட்டுப் பட்டப் படிப்புகள், நாடுகளுக்கிடையே மையங்களை உருவாக்குதல், வெளிநாடுகளில் உள்ள திறமை வாய்ந்த ஆசிரியர்களின் இணைய வழி விரிவுரைகளை ஏற்பாடு செய்தல், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைக்கிடையே தொடர்பு, கூட்டுப் பட்டப் படிப்பு முயற்சிகள் மற்றும் இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் இடையில் சேர்வதற்கு ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றுக்கான செயல்முறைகளும் ஆராயப்படும்.

 

2. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகளை அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழுத் தலைவர் கவனிப்பார்.

 

3. ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, சிஓஏ ஆகியவற்றின் இயக்குநர்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களைக் கொண்ட தனி துணைக் குழுக்கள் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் ஆகியோருக்கு உதவுவதற்காக அமைக்கப்படும்.

 

4. தேசியத் தேர்வு முகமை மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தலைவர்களின் கல்வித் துறை அனுபவத்தை கருத்தில் கொண்டு, ஆலோசனைகளை வழங்க அவர்கள் அழைக்கப்படலாம்.

 

5. இணை செயலாளர் (சர்வதேச கூட்டுறவு) மனிதவள மேம்பாடு அமைச்சகத்தில் இருந்து ஒருங்கிணைப்பார்.

 

6. இந்தக் குழு இரண்டு வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும்.

 

***



(Release ID: 1640970) Visitor Counter : 248