இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

சர்வதேச அமைச்சர்கள் கருத்தரங்கில் ஃபிட் இந்தியா இயக்கத்துக்கு காமன்வெல்த் தலைமை இயக்குனர் பாராட்டு; பெருந்தொற்று பரவல் காலத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இந்தியர்களுக்கு உடல்உறுதி விழிப்புணர்வு உதவியது என்கிறார் திரு கிரண் ரிஜிஜு

Posted On: 24 JUL 2020 12:58PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மெய்நிகழ் வழியாக நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று கோவிட்-19க்குப் பிறகான காலகட்டத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளை மீண்டும் நடத்துவது குறித்தும், பெருந்தொற்றுப் பரவல் காலகட்டத்திற்குப் பிறகு ஒருங்கிணைந்த விளையாட்டுக்கள் கொள்கையை உருவாக்குவதில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் பகிர்ந்துக் கொண்டார். அனைத்து காமன்வெல்த் நாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த சர்வதேச கூட்டத்தில் பேசிய திரு ரிஜிஜு, ”காமன்வெல்த் நாடுகளின் உறுப்பினர்களாக நாம் அனைத்துப் பிரச்சனைகளிலும் ஒற்றுமையாக இணைந்து இருப்பது கட்டாயம், அதிலும் குறிப்பாக இந்த நெருக்கடிக் காலத்தில் நம்மிடையே ஒற்றுமை இன்றியமையாதது ஆகும் என்று குறிப்பிட்டார்.  இந்தக் கூட்டத்தில் ஏனைய காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து எதிர்காலப் பயணத்தைத் திட்டமிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  பிற நாடுகளின் அமைச்சர்கள் எழுப்பிய பெரும்பான்மையான கருத்துக்கள் இந்தியாவின் கருத்துக்களையே ஒத்திருக்கின்றன.  எனினும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாங்கள் கற்றுக்கொண்ட மற்றும் சாதித்த குறிப்பிடத்தக்க சில விஷயங்களும் உள்ளன.  அவற்றையும் நான் உங்களிடையே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

பெருந்தொற்று காலத்தில் குடிமக்கள் உடல்உறுதியுடன் இருக்க வேண்டிய தேவையை சுட்டிக்காட்டிய விளையாட்டு அமைச்சர், ”கடந்த ஆண்டு எங்களது பிரதமர் தொடங்கிய ஃபிட் இந்தியா இயக்கம் என்பது மிக முக்கியமான செயல் திட்டம் என்பதை இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து அமைச்சர்களிடையேயும் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன்.  இந்த கோவிட் தொற்று நெருக்கடி காலத்தில் உடல் உறுதியையும், நோய்எதிர்ப்புச் சக்தியையும் வலுப்படுத்த வேண்டியுள்ளதால் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தத் திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.  ஃபிட்நெஸ் மற்றும் நலவாழ்வு குறித்து தொடர்ச்சியான, பிரத்யேகமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் மூலமாக உடல்உறுதியுடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை இந்தியா வெற்றிகரமாக ஏற்படுத்தி உள்ளது.  அதிலும் இந்த மாற்றங்கள் பெருந்தொற்றுக் காலத்தில் நிகழ்ந்து உள்ளன.  சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து நிபுணர்கள் பகிர்ந்து கொண்ட ஆலோசனைகளை அனைத்து வயதுப் பிரிவிலும் உள்ள மக்கள் அனைவரும் வெற்றிகரமாக கடைபிடித்தனர்” என்றார்.  காமன்வெல்த் தலைமைச் செயலாளர் திருமிகு பேட்ரிஷியா ஸ்காட்லாந்த் கியூ.சி பெருந்தொற்றுப் பரவலுக்கு எதிரான தனிப்பட்ட முன்னெடுப்பாக இந்தியாவின் இந்த நடவடிக்கையைப் பாராட்டினார்.

திரு ரிஜிஜு விளையாட்டைப் பரவலாக்கும் மாதிரிகளின் பன்முகத்தன்மை குறித்துப் பேசியதோடு அத்லெட்டுகளுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு திறன்மேம்பாட்டு வகுப்புகளை வெற்றிகரமாக இந்தியா எப்படி நடத்தியது என்பது குறித்தும் பேசினார்.  ”பல்வேறு நிலைகளில் உள்ள ஆயிரக்கணக்கான அத்லெட்டுகள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று இத்தகைய அறிவு அபிவிருத்தி திட்டங்கள் மூலம் பெருமளவில் பலன் பெற்றுள்ளனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஊரடங்கின் இரண்டாவது காலகட்டத்தில், மைதானத்தில் பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.  ”வழக்கமான தரநிலைக் கட்டுப்பாடுகளை கடுமையாகக் கடைபிடித்தும், குறிப்பிட்ட சில வரையறைகளை மேற்கொண்டும் சில விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வழிமுறைகளை, அனைத்து விளையாட்டு நிறுவனங்களும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். ஒலிம்பிக் சார்ந்த அத்லெட்டுகளுக்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு அமைச்சர்கள் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பினர்களுடன் நான் ஏற்கனவே பேசி சில விளையாட்டு நிகழ்ச்சிகளை படிப்படியாகத் தொடங்குமாறு தெரிவித்து உள்ளேன்.  மக்களின் நம்பிக்கையை நாங்கள் அதிகரித்தாக வேண்டும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இருந்து இந்தியா விளையாட்டு நிகழ்வுகளைத் தொடங்கும் என்று நான் நம்பிக்கையுடன் உள்ளேன்.  பல்வெறு விளையாட்டுப் பிரிவுகளில் உள்ள மிகப் பெரும் போட்டி அமைப்பாளர்கள் போட்டிகளைத் தொடங்கும் வகையில் தயாராகி வருகின்றனர் என்று விளையாட்டு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

காமன்வெல்த் நாடுகளின் ஒருங்கிணைந்த உந்துதலைப் பாராட்டிய திரு ரிஜிஜு, ”2022 காமன்வெல்த் விளையாட்டுகளில் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை ஆகியவற்றைச் சேர்க்க ஒத்துக்கொண்ட காமன்வெல்த் விளையாட்டு கமிட்டிக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த விளையாட்டுக்கள் பிரிட்டனில் நடைபெறாமல் இந்தியாவில்தான் நடைபெறும் என்றாலும் இந்தியாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக கமிட்டிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொண்டாக வேண்டும்.  இப்படியான வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்ளும் அணுகுமுறையானது காமன்வெல்த் நாடுகளின் நட்புறவை வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

*****


 



(Release ID: 1640904) Visitor Counter : 174