நிதி அமைச்சகம்

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (CPSE-கள்) CAPEX குறித்து மத்திய நிதியமைச்சர் 2ம் கட்டமாக கலந்தாய்வு

Posted On: 23 JUL 2020 5:23PM by PIB Chennai

பயணிகள் விமானப் போக்குவரத்து, எஃகுத் துறை அமைச்சகங்களின் செயலாளர்கள், ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் இந்த அமைச்சகங்களின் கீழ் செயல்படும் ஏழு மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குநர்களுடன் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காணொளி மூலம் கலந்தாய்வு நடத்தினார். நடப்பு நிதியாண்டில் மூலதனச் செலவுகள் பற்றி அவர் ஆய்வு நடத்தினார். கோவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், தொடர்புடைய துறையினருடன் நிதியமைச்சர் நடத்தும் இரண்டாவது கலந்தாய்வுக் கூட்டமாக இது அமைந்துள்ளது.

இந்த ஏழு மத்திய பொதுப் பணித் துறை நிறுவனங்களுக்கும் 2020-21ஆம் நிதியாண்டுக்கான மூலதனச் செலவு இலக்கு ரூ.24,663 கோடியாக உள்ளது. 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.30,420 கோடி என்ற மூலதனச் செலவு இலக்கு இருந்த நிலையில், ரூ.25,974 கோடி அளவுக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டது. அதாவது 85 சதவீத இலக்கு மட்டுமே எட்டப்பட்டது. 2019-20 ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் ரூ. 3, 878 கோடியாக (13%) இருந்தது. 2020-21 ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் இந்தச் செலவு ரூ.3,557 கோடியாக (14%) இருந்தது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல் தருவதில் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு பற்றிக் குறிப்பிட்ட நிதியமைச்சர், தங்களுக்கு அளிக்கப்பட்ட இலக்குகளை எட்ட இந்த நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 2020-21ஆம் நிதியாண்டுக்கு அனுமதிக்கப்பட்ட நிதியை உரிய காலத்தில் முறையாக செலவு செய்வதை உறுதி செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் நன்கு செயல்படுவதால், கோவிட்-19 தாக்கத்தில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதில் பெரும் பங்காற்ற முடியும் என்று திருமதி சீதாராமன் கூறினார்.

2020-21ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு இறுதிக்குள், 50 சதவீத மூலதன ஒதுக்கீட்டை செலவு செய்வதை உறுதி செய்வதற்கு, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, அதற்கேற்ப திட்டமிட  வேண்டும் என்று தொடர்புடைய செயலாளர்கள் மற்றும் ரயில்வே வாரியத் தலைவர் ஆகியோரை நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார். தீர்வுகாணப்படாத விஷயங்களை உடனடி நடவடிக்கைக்காக DEA/DPE/DIPAM -க்கு முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மூலதனச் செலவு செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாதமும் இதே போல ஆய்வுக் கூட்டங்கள் நடத்த உள்ளதா க நிதியமைச்சர் தெரிவித்தார்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து, குறிப்பாக கோவிட்-19 சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து, மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் கருத்துகளைத் தெரிவித்தன. அசாதாரணமான சூழ்நிலைகளில், அசாதாரணமான முயற்சிகள் தேவைப்படுவதாக நிதியமைச்சர் கூறினார். கூட்டாக முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் நாம் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி, இந்தியப் பொருளாதாரம் சிறந்த நிலைகளை எட்டுவதற்கு உதவிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

******



(Release ID: 1640820) Visitor Counter : 190