சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சிங்கப்பூரில் உள்ள தேமாசெக் ஃபவுண்டேஷன் அமைப்பிடமிருந்து முதல்கட்டமாக வரப்பெற்ற 4475 பிராணவாயு கான்சன்ட்ரேட்டர்களை, திரு. அஸ்வினி குமார் சௌபே இன்று பெற்றுக்கொண்டார்

Posted On: 22 JUL 2020 4:56PM by PIB Chennai

சிங்கப்பூரில் உள்ள தேமாசெக் ஃபவுண்டேஷன் அமைப்பிடமிருந்து முதல்கட்டமாக வரப்பெற்ற 4475 பிராணவாயு கான்சன்ட்ரேட்டர்களை மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே இன்று பெற்றுக்கொண்டார். இந்த அமைப்பு மொத்தம் 20,000 பிராணவாயு கான்சன்ட்ரேட்டர்களை இந்தியாவுக்கு நன்கொடையாக அளிக்க முன் வந்துள்ளது. மீதமுள்ள பிராணவாயு கான்சன்ட்ரேட்டர்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வந்து சேரும். கோவிட் 19 நோயால் மிதமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இவை பகிர்ந்தளிக்கப்படும்.

 

சிங்கப்பூர் தேமாசெக் அமைப்புக்கு அவர்களது உதவிக்காக நன்றி தெரிவித்த திரு.அஸ்வினி குமார் சௌபே, இந்த பிராண வாயு கான்சன்ட்ரேட்டர்கள், நாட்டில் நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு பெரிதும் உதவும் என்று கூறினார். உரிய நேரத்தில் அளிக்கப்பட்ட உதவி என்று இதை குறிப்பிட்ட அமைச்சர், மிக குறுகிய காலத்தில் இவற்றை இறக்குமதி செய்ய உதவிய இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு பாராட்டு தெரிவித்தார். இறக்குமதி செய்வதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் ஒருங்கிணைத்த டாட்டா அறக்கட்டளையின் முயற்சிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். “நாட்டில் கோவிட் நோய்க்கு எதிராகப் போராடுவதற்காக ரத்த தானம் செய்தல், பிளாஸ்மா தானம் செய்தல், வேறுவிதமான தானம் அளித்தல் என்று ஈடுபடும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

 

செயல்திறன் வாய்ந்த பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியா, மத்திய மாநில யூனியன் பிரதேச அரசுகளுடன் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு “அரசு முழுமையும்” என்ற அணுகுமுறை மூலமாக கோவிட் 19நோய்க்கு எதிராக போராடி வருகிறது என்று திரு சௌபே கூறினார்

 

கான்சன்ட்ரேட்டர்களின் பயன்கள் குறித்து குறிப்பிட்ட அவர், “குறைந்த அளவிலான பிராணவாயு உதவி தேவைப்படும் கோவிட் நோயால் மிதமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, இந்த பிராணவாயு கான்சன்ட்ரேட்டர்கள் உதவியாக இருக்கும். இந்தக் கருவிகள் வளிமண்டல காற்றை, சிகிச்சைக்கான பிராண வாயுவாக மாற்றுகிறது. இந்த பிராண வாயுவில் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை அடர்த்தி இருக்கும் என்றார். மிகக் கனமான பிராணவாயு சிலிண்டர்களை எடுத்துச்செல்வது, அவற்றை மீண்டும் நிரப்புவது போன்றவற்றைத் தவிர்க்கலாம். மிதமான நோய் தாக்குதல் உள்ள நோயாளிகள் இருக்கும் வார்டுகளில் இக்கருவிகளை   வைக்கலாம். தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தலாம்” என்று அவர் கூறினார். கோவிட் கேர் மையங்களிலும், கோவிட் தேர் மையங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளிலும் இவற்றை பயன்படுத்தலாம். பிராணவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து வழங்கப்படுவதில் போக்குவரத்து சிரமங்கள் உள்ள தொலைதூர பகுதிகளுக்கு இவை பெரிதும் உதவியாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

*****


 



(Release ID: 1640563) Visitor Counter : 199