குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இந்தியாவிலிருந்து ஊழலை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு, சமூக அமைப்பு மற்றும் மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 22 JUL 2020 12:15PM by PIB Chennai

நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும், இதனைக் களைய அரசு, சமூக அமைப்பு மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து  செயல்பட வேண்டும் என்றும், குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார். இன்று புது தில்லியில் உள்ள தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில், பாபாசாஹேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தபின் அவர் இதனை தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு .பி. ஜே . அப்துல் கலாமின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த திரு வெங்கய்ய நாயுடு, மாணவர்களின் திறனை  வளர்ப்பதிலும், சமுதாயத்தை  மேம்படுத்துவதிலும் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று கூறினார்.

டாக்டர் பி. ஆர். அம்பேத்கருக்கு புகழஞ்சலி சூட்டிய குடியரசு துணைத் தலைவர், டாக்டர். அம்பேத்கர்  தொலைநோக்குப் பார்வை, தத்துவ ஞானம், கூரிய அறிவு கொண்டவர்  என்ற பன்முக வித்தகர் என்றும், அவர் தலைசிறந்த நீதியாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும்  ஒப்புயர்வற்ற மனிதநேயமிக்கவர் என்றும் தெரிவித்தார்.

உலக நாடுகளில் இந்தியா சிறந்த அரசியல் அமைப்பு சட்டத்தை கொண்டுள்ளது என்றும், இதனை வடிவமைப்பதில் டாக்டர் அம்பேத்கரின் பங்கு போற்றத்தக்கது என்றும் புகழாரம் சூட்டிய திரு வெங்கய்ய நாயுடு, முக்கியமான தருணத்தில் இந்திய வரலாற்றை வழி நடத்திச்  சென்றவர்  அவர் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்  இன்று வரை ஒரு புனித நூலாகக் கருதப்பட்டு வருவதுடன்சிறந்த வழிகாட்டியாகவும் அது விளங்குவதாக குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார். அரசியல் அமைப்பு சட்டத்தின் புனிதத் தன்மையை  ஒவ்வொரு இந்தியக்  குடிமகனும், மதித்து நடந்திட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தவர்  என்று குறிப்பிட்ட குடியரசுத்  துணைத் தலைவர், அவர் தன் வாழ் நாள் முழுதும் ஆண், பெண் பாகுபாடு கூடாது என்று போராடியவர் என்றும், கல்வி மூலம் பெண்கள்  மேம்பாடு அடைய அயராது பாடுபட்டவர் என்றும், சாதிகளினால் ஏற்பட்ட ஏற்ற தாழ்வை அகற்றி, சமுதாய ஒற்றுமைக்கு வித்திட்டவர் என்றும் தெரிவித்தார்.

"எதிர்கால சமுதாயத்திற்கு, டாக்டர் அம்பேத்கரின் கோட்பாடுகள் எவை என்று தெரியப்படுத்தும் விதமாக இந்த உருவச் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது", என்று திரு வெங்கய்ய நாயுடு கூறினார்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் என்ற அமைப்பு இன்றும் நம்பகத்  தன்மையுடன் செயல் படுவதற்கு நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் குறிப்பாக, டாக்டர் அம்பேத்கர் போன்றோர் அதற்கு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்தது குறிப்பிடத்தக்கது; பொறுப்புத்தன்மை, வெளிப்படைத்தன்மை, சிறந்த மேலாண்மை ஆகியவை குடியரசிற்கு அத்தியாவசியமானவை என்றும்  திரு வெங்கய்ய நாயுடு  தெரிவித்தார்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் அறிக்கைகள் மற்றும் அதன் மீதான விவாதங்கள் இந்திய அரசாங்கத்தின் பொருளாதார சீரமைப்பிற்கும், அரசுத் துறைகளை மேம்படுத்தவும் பெரிதும் உதவியாக இருக்கின்றன என்று அவர் கூறினார்.

உலகக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பினால்  சிறந்த செயல்பாட்டிற்காக பாராட்டப்பட்ட இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு 2022-ஆம் ஆண்டுக்குள் காகிதப் பரிவர்த்தனையற்ற அலுவலகமாக செயல்படவிருப்பதையும் அவர் பாராட்டினார்.

முன்னதாகதலைமைக் கணக்குத் தணிக்கையாளர் திரு ராஜிவ் மெஹ்ரிஷி வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் திருமதி அனிதா பட்நாயக் நன்றியுரை வழங்கினார்.

*****(Release ID: 1640425) Visitor Counter : 221