நிதி ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் சொத்துவரி குறித்து 15வது நிதி ஆணையம், இன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துடன் பேச்சு நடத்தியது

Posted On: 17 JUL 2020 5:33PM by PIB Chennai

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் சொத்துவரி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங்பூரி மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் 15வது நிதிஆணையத்தினர் சந்தித்துப் பேசினர். நிதிஆணையம் 2020- 21ஆம் ஆண்டுக்கான பரிந்துரைகளை அளித்திருந்தது. இந்தப் பரிந்துரையின்படி, அனைத்து மாநிலங்களும் வரிகளின் விவரங்களை அறிவிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு மாநிலத்தின் மாநில ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சிக்கேற்ப சொத்து வரி வசூலிப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது

 

பயனுள்ள முறையில் சொத்து வரியை நிர்வகிப்பது, சொத்துக்களை குறைவாக மதிப்பீடு செய்வது, குறைந்த தகவல்கள் வைத்திருப்பது, சொத்து தொடர்பான பதிவேடுகளை முழுமையற்றதாக வைத்திருப்பது, போதுமான கொள்கை இல்லாதிருத்தல், பயனற்ற முறையிலான நிர்வாகம் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளுக்கு, மாநிலங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உதவுவதற்காகவும், அனைவருக்கும் சமமான, லகுவான, முன்னேற்றமான முறையிலான வரி மதிப்பீட்டு முறை கொண்ட நிதிஆவணங்களை தகுந்த முறையில் பராமரிப்பதற்கும்,15வது நிதிஆணையம் தீவிரமான விவாதம் நடத்தியது. இந்த விஷயம் நிதி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், தற்போதைய கோவிட் பெருந்தொற்று நோய் நிலைமைகளைக் கருத்தில் கொண்டும், விவாதங்கள் நடத்தப்பட்டன.

 

சொத்துவரி நிர்வாகத்தில் ஒரே விஷயத்தை மறுபதிவு செய்தல், பணிகளை சிதறுண்டு போகச் செய்தல், பல்வேறு வருடங்களுக்கான பணிகளை மறுபதிவு செய்தல் போன்ற விஷயங்களை நீக்கி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சொத்துவரி நிர்வாகியாக செயல்படுவதற்கான உகந்த சூழலை ஏற்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின் விவாதங்கள் மையம் கொண்டிருந்தன. தேவையான விவரங்களை சேகரித்தல், மதிப்பீடு செய்தல், வரிவிகிதங்களை நிர்ணயித்தல், வரி வசூலித்தல் ஆகியவை மட்டுமல்லாது, இவை அனைத்தின் மீதும் தேவையான கண்காணிப்பு செலுத்துதல், ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே பொறுப்பேற்க வேண்டும் என்பது குறித்து விவாதம் கவனம் செலுத்தியது.

 

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைச் செயலர் திரு.துர்கா சங்கர் மிஸ்ரா, பதினைந்தாவது நிதிஆணையத்திற்கு விரிவான விளக்கம் அளித்தார். இந்த ஆணையத்தின் 2020- 2021, 2025- 2026 ஆண்டுகளுக்கான அறிக்கைகளுக்கான, அமைச்சகத்தின் திருத்தப்பட்ட அறிக்கைக் குறிப்பாணை ஒன்றையும் செயலர் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். நிதி சார்ந்த மற்றும் நிதி சாரா பரிந்துரைகள் உட்பட பல்வேறு பரிந்துரைகளை அமைச்சகம் சமர்ப்பித்துள்ளது.

 

நிதிசாராத பரிந்துரைகளில் சில வருமாறு:

 

  • சொத்து வரியில் கட்டாயத் தன்மையில் மாற்றம்
  • காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக, காற்றுத் தர மானியம் நகரங்களுக்கு அளிக்கப்படவேண்டும்
  • திடக்கழிவு மேலாண்மை குடிநீர் வழங்குதல் உட்பட பல்வேறு பணிகளுக்கு தங்கள் தேவைகளுக்கும், முன்னுரிமைகளுக்கும் ஏற்றவகையில், நகரங்கள் பணிகளை மேற்கொள்வதற்கான மானியங்கள்
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரக் கட்டமைப்புக்கு தனிப்பட்ட மானியம் வழங்குதல் - மத்திய வரியில் 9.4 சதவிகிதம் ஆகியவை உட்பட கோவிட்-19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்தல்
  • திட்டமிட்ட முறையில் நகர்மயமாக்குதல் கட்டுப்பாட்டு வாரியங்கள் அமைத்தல், கணக்குகளைத் தணிக்கை செய்தல் போன்ற பல்வேறு நகர்ப்புற சீர்திருத்தங்களைத் தொடர்வது
  • நாட்டில் 3331 நகரங்கள் உட்பட 86 நகரத்தொகுப்புகளில் குடிமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது, முனிசிபல் சேவைகளைப் பகிர்ந்துகொள்வது, வருவாய் வசூல் அதிகரிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் உட்பட , நிதிநிலைமையை தொடர்வதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகளை மேற்கொள்வது

 

அமைச்சகம் ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ள நிதிசார் பரிந்துரைகள் வருமாறு:

  • நகராட்சிகளுக்கிடையே வளஆதாரங்கள் கிடைப்பதற்கான இடைவெளியைக் குறைத்தல். முனிசிபல் நிலையிலான மானியங்களை கணிசமான அளவு அதிகரித்தல். முனிசிபாலிட்டிகளுக்கான பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிகரித்தல்
  • கணக்குகளை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்காக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தில் திட்ட மேலாண்மை பிரிவு ஒன்றை 213 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்துதல்
  • அமைப்பு அளவிலான திறன்களை 450 கோடி ரூபாய் செலவில் கட்டமைத்தல்

 

அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளவற்றின் சுருக்கம் வருமாறு:

 

  • நகர்ப்புற முனிசிபல் அமைப்புகளுக்கு ஒதுக்கீட்டை 87 ஆயிரத்து 143 கோடி ரூபாயிலிருந்து 3 லட்சத்து 48 ஆயிரத்து 575 கோடி ரூபாயாக அதிகரித்தல்
  • முனிசிபல் கணக்குகளை, மாநில மத்திய கணக்குகளுடன் இயைந்ததாகவும், ஒருங்கிணைந்ததாகவும் அமைத்தல். இதற்கான நிதி தேவை 213 கோடி ரூபாய்
  • எண்பத்தாறு நகரத் தொகுப்புகளில் வருவாய் அதிகரிப்பு, முனிசிபல் கடன்கள், பகிர்ந்து கொள்ளக்கூடிய முனிசிபல் சேவைகள் - இதற்கான நிதி தேவை 450 கோடி ரூபாய்
  • மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்திற்கு, நகர்ப்புற பொது சுகாதாரக் கட்டமைப்பிற்கு தனிப்பட்ட மானியம்
  • 10 லட்சத்துக்கும் அதிகமான நகரங்களில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுற்றுச்சூழல் வனங்கள் அமைச்சகத்துக்கு தனிப்பட்ட மானியம்

குஜராத், ஒடிசா, தமிழ்நாடு, பஞ்சாப், திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் இருந்து மண்டலப் பிரதிநிதிகள் கொண்ட நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சகம் ஆணையத்திடம் தெரிவித்தது. இந்த ஆலோசனைக் குழுவிற்கு உதவியாக இருக்கும் வகையில், இந்த ஆறு மாநிலங்களின் நகர்ப்புற வளர்ச்சிக்கான முதன்மைச் செயலர்கள் கொண்ட வழிகாட்டுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சொத்து வரி குறித்து நில அளவு ஆய்வு மேற்கொள்வதற்காக ஜனாக்கிரஹா நியமிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் உள்ள சிறப்புகள், சிறப்பு வழிமுறைகள், சிறந்த செயல்பாடுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

 

ஆணையம் 2020- 2021, 2025-2026 ஆண்டுகளுக்கான அறிக்கையின் இறுதி பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் போது, அமைச்சகம் அளித்துள்ள அனைத்துப் பரிந்துரைகளையும், பிரச்சினைகளையும் ஆணையம் கருத்தில் கொள்ளும் என்று ஆணையம் உறுதி அளித்துள்ளது.

 

******

 



(Release ID: 1639439) Visitor Counter : 282