விவசாயத்துறை அமைச்சகம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை தனது 92வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது

Posted On: 16 JUL 2020 7:02PM by PIB Chennai

இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை தனது 92வது நிறுவன தினத்தை இன்று (16.7.20) கொண்டாடுகிறது. கடந்த 190 ஆண்டுகளில் நாட்டின் வேளாண் முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களிக்கும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை பணியாற்றுவதற்கு உதவிய நமது வேளாண் விஞ்ஞானிகளுக்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பாராட்டுத் தெரிவித்தார்.

விஞ்ஞானிகளின் பங்களிப்பு மற்றும் நமது விவசாயிகளின் கடின உழைப்பு காரணமாக உணவு தானிய உற்பத்தியில் இன்று நாடு தன்னிறைவு அடைந்துள்ளது என்று அவர் கூறினார். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக முழு அடைப்பு அமலில் இருத்தபோதும் நாடு சாதனை அளவிலான வேளாண் உற்பத்தி செய்ததற்கு விவசாய சமூகத்தினருக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலையைப் பெறுவதை உறுதிசெய்யவும் அவர்களுக்கு அதிகாரமளிக்கவும் பல சட்டத் திருத்தங்களையும் அவசரச் சட்டங்களையும் கொண்டு வந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அமைச்சர் திரு தோமர் நன்றி தெரிவித்துக்கொண்டார். ஒப்பந்த விவசாயத்தின் நன்மைகள், சிறு விவசாயிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை மற்றும் விவசாயிகள் விஞ்ஞான மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தனது 10வது பத்தாண்டில் தற்போதுள்ள புசா நிறுவனம் (இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்) தேசிய நிறுவனம் என்ற நிலையில் இருந்து சர்வதேச நிறுவனம் என்ற நிலையை அடைவதை விஞ்ஞானிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அமைச்சர், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலைமையைக் குறைக்க வேண்டும், ஆரோக்கிய உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று கூறினார். பனை எண்ணெய் உற்பத்தியை, ஆராய்ச்சி மற்றும் கூடுதல் பயிர் செய்தல் மூலம் அதிகரிக்க வேண்டும் என்றார். பயறு உற்பத்தியில் ஏறக்குறைய தன்னிறைவு நிலையை அடைந்துள்ள நாம் அதனை எண்ணெய் வித்து உற்பத்தியிலும் எட்டினால்தான், உணவு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கலாம் என்றார்.

நிகழ்ச்சியில் 8 புதிய உற்பத்திப் பொருட்களும், 10 பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர்கள் திரு பர்ஷோத்தம் ருபாலா, இந்திய வேளாண் ஆராய்ச்சி சபைத்தலைவர் திரு கைலாஷ் சௌதாரி, டாக்டர் த்ரிலோச்சன் மஹாபத்ரா மற்றும் திரளான இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை விஞ்ஞானிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


                                                                                                               *****
 



(Release ID: 1639288) Visitor Counter : 229