ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், கரி்ப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து 6 மாநில பிரதிநிதிகளுடன் ஆய்வு

Posted On: 14 JUL 2020 8:25PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், கரி்ப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, 6 மாநிலங்களின் ஊரக வளர்ச்சி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். 2020 ஜூன் 20 அன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி துவக்கி வைத்த கரிப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டம், பிகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 116 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் 125 நாட்களுக்கு அமல் செய்யப்படும். 11 பல்வேறு அமைச்சகங்களின் கீழ் 25 பணிகளை இத்திட்டத்தின் கீழ் செய்து முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்படும் பல்வேறு அலகுகளின் கீழ் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

மாநில அரசு பிரதிநிதிகளிடம் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களில் வேலைவாய்ப்பை அளிப்பதற்காக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இத்திட்டம் புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, உள்ளூர் கிராமப்புற மக்களுக்கும் வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, பொருளாதாரத்தை வலுப்படுத்தி பொது உள்கட்டமைப்பினை மேம்படுத்தி, வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்றார். சாலைகள், வீடுகள், அங்கன்வாடி மையங்கள், பஞ்சாயத்து கட்டிடங்கள், பல்வேறு வாழ்வாதாரம் சார்ந்த சொத்துகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகளின் முனைப்பான ஒத்துழைப்புடன் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக திருப்தி தெரிவித்த திரு.தோமர், தொடர்ந்து இதனை முனைப்புடன் செயல்படுத்தி அதிகமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குமாறு வலியுறுத்தினார்.  

 

****


(Release ID: 1638684) Visitor Counter : 167