சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக மக்கள் தொகை தினத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை மனித உரிமை விவகாரம் என வலியுறுத்தினார் டாக்டர். ஹர்ஷ் வர்த்தன்; கோவிட் அல்லாத அத்தியாவசிய சேவையாக இதனை சேர்த்ததற்குப் பாராட்டு.
Posted On:
11 JUL 2020 6:25PM by PIB Chennai
உலக மக்கள்தொகை தினத்தையொட்டி (ஜுலை 11), காணொளிக் கூட்டத்துக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் தலைமை வகித்தார். இதில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு.அஷ்வினி குமார் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் வரவேற்ற டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், “மக்கள் தொகையை நிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இது எதிர்கால மக்கள் மீதும், அவர்களது சுகாதாரத்திலும் முக்கியமான பங்கு வகிப்பதையும் வலியுறுத்தும் விதத்தில் உலக மக்கள் தொகை தினத்தைக் கொண்டாடுவது முக்கியமானது,” என்றார். மேலும் அவர், “கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக, இனப்பெருக்க சுகாதாரச் சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது தற்போது மிகவும் அவசியமானது,” என்றும் கூறினார்.
RMNCAH+N (இனவிருத்தி, மகப்பேறு, புதிதாகப் பிறந்த குழந்தைகள், வளர்ந்த குழந்தைகள் ஆகியோருக்கு வளர் இளம் பருவ சுகாதாரச் சேவைகளுடன் ஊட்டச்சத்து வழங்குவது) திட்டத்தின் வெற்றியைக் குறிப்பிட்ட டாக்டர். ஹர்ஷ் வர்த்தன், குடும்பக்கட்டுப்பாட்டை முக்கிய உத்தியாகப் பின்பற்றியதன் மூலம், குறிப்பிடத்தக்க பலன் கிடைத்துள்ளதாகக் கூறினார். “கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், Crude birth Rate (சராசரியாக ஆயிரம் பேரில் குழந்தை பிறப்பு விகிதம்), 21.8-லிருந்து (மக்கள்தொகைப் பதிவு 2011-இன்படி) 20-ஆக (மக்கள் தொகைப் பதிவு 2018-இன்படி) குறைந்துள்ளது. ஒட்டுமொத்த குழந்தைப்பேறு விகிதம் 2.4-லிருந்து (மக்கள் தொகைப்பதிவு அமைப்பு 2011-இன்படி) 2.2-ஆக (மக்கள் தொகைப் பதிவு அமைப்பு 2018இ-ன்படி) குறைந்துள்ளது. வளர் இளம் பருவத்தில் குழந்தைப்பேறு ஏற்படும் விகிதம் 16-லிருந்து (தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 3) 7.9-ஆக (தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 4) கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார். இந்த முயற்சிகள் மூலம், மக்கள்தொகைக்கு இணையான அளவுக்கு பெண்களுக்கு குழந்தைப்பேறு ஏற்படும் அளவு (replacement fertility level) 2.1 என்ற விகிதத்துக்கு அருகே இந்தியா சென்றுகொண்டிருக்கிறது என்றும், இதில், ஒட்டுமொத்தமாக உள்ள 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 25 மாநிலங்கள் ஏற்கனவே இந்த சாதனையை படைத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
உலகளாவிய குடும்பக்கட்டுப்பாடு 2020 இயக்கத்தின் அடிப்படை அங்கமாக இந்தியா இருப்பதாக டாக்டர். ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார். “குடும்ப கட்டுப்பாடு 2020 இலக்குகளை நிறைவேற்ற உள்நாட்டு செலவில் குறிப்பிடத்தக்க தொகையை இந்திய அரசு செலவிட்டு வருகிறது. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், மிகப்பெரும் முயற்சிகளாக, பரிவார் விகாஸ் இயக்கம், ஊசி மூலம் செலுத்தும் கருத்தடைக்கான MPA, குடும்ப கட்டுப்பாடு – தகவல் மேலாண்மைச் செயல்பாட்டு முறை (Logistics Management Information System - LMIS), குடும்பக் கட்டுப்பாடு தகவல் தொடர்புப் பிரச்சாரம் உள்ளிட்டவை விளங்குகின்றன. அன்டாரா (Antara) திட்டத்தின் கீழ், பொது சுகாதார அமைப்பில், ஊசி மூலம் கருத்தடை மருந்து செலுத்தும் முறையை தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியது. இது மிகவும் பலனளிக்கக் கூடியது மற்றும் தம்பதிகளின் தேவை மாற்றத்தை எதிர்கொள்ள உதவுவதுடன், பெண்களுக்கு தங்களது விருப்பப்படி கர்ப்பம் தரிக்க உதவும்,” என்று அவர் கூறினார். “இந்த முயற்சிகள் மூலம், டிராக் 20 குடும்ப கட்டுப்பாடு மதிப்பீட்டின்படி, 2019-இல் மட்டும், கருத்தடையைப் பயன்படுத்தியதால், சுமார் 5.5 கோடி விருப்பமில்லாத கர்ப்பம் தடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, 1.1 கோடி பிறப்புகள், பாதுகாப்பற்ற 18 லட்சம் கருக்கலைப்புகள், 30,000 மகப்பேறு இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன,” என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கியுள்ள ஆயுஷ்மான் பாரத் – சுகாதாரம் மற்றும் உடல்நல மையங்களின் (AB-HWC) மொபைல் செயலியை மத்திய அமைச்சர் வெளியிட்டார். ஆயுஷ்மான் பாரத் – சுகாதாரம் மற்றும் உடல்நல மையங்களில் தரவுகளைப் பதிவு செய்வதை ஒழுங்குபடுத்துவதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
****
(Release ID: 1638189)
Visitor Counter : 1202