குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கொரோனா கால வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்றுக்கொண்டீர்களா என மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் கேள்வி.

Posted On: 12 JUL 2020 11:02AM by PIB Chennai

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சூழலில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் கடந்த சில மாதங்களில் மக்கள் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், மக்கள் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார்களா, இது போன்ற நிலையற்ற சூழலைச் சமாளிக்க தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனரா என சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவக் காரணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தேடலில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு, “கொரோனா காலத்தில் வாழ்க்கை சிந்தனை’’ என்ற தமது முகநூல் பதிவில் திரு. நாயுடு, வலியுறுத்தியுள்ளார். உரையாடல் வடிவில் எழுதியுள்ள அந்தப் பதிவில் அவர் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக முடங்கியுள்ள வாழ்க்கையின் தேவைகள், ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், கற்பித்துள்ள பாடங்களை மதிப்பிட இந்தக் கேள்விகள் உதவும். இந்தப் பத்து அம்சக் கேள்விகள், இது போன்ற நெருக்கடிகளை எதிர்காலத்தில் தடுப்பதற்கு உதவக்கூடிய , தேவையான புரிந்துணர்வைப் பெறுவதுடன், அவற்றை சமாளிக்க மக்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரிந்து கொள்வதற்கு உதவும் என்று திரு. நாயுடு தெரிவித்துள்ளார்.

‘’வாழ்க்கையின் படிப்பினைகள்,   உயரிய வாழ்க்கைக்குத் தேவையான மொத்தச் சூழல் ஆகியவை குறித்து, அவை எத்தனை மடங்காக இருந்தாலும் நிலையான மதிப்பீடு அவசியமாகும். இப்போது நாம் கொரோனாவுடன் வாழ்ந்து கொண்டிருப்பதால், அத்தகைய வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம்’’, என்று குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார்.

நவீன வாழ்க்கையின் போக்கு, இயல்பு, வேகம் ஆகியவற்றை மறுபிரிசீலனை செய்வதுடன், நல்லிணக்கமானஅளவிடப்பட்ட வாழ்க்கையை முறையாக  வரையறுக்கும் நோக்கத்துடன் திரு.நாயுடு தமதுகொரோனா காலத்தில் வாழ்க்கைச் சிந்தனை’’ என்னும் பதிவில், வலியுறுத்தியுள்ளார்.

பதற்றமில்லாத வாழ்க்கையை மேற்கொள்ள திரு. நாயுடு கூறியுள்ள ஆலோசனைகள் வருமாறு; உணவை மருந்தாக எடுத்துக் கொள்வது போல சரியான சிந்தனை மற்றும் செயல்பாடு , ஆரோக்கியமான வாழ்க்கையை நிலைநிறுத்தும்; பொருள்கள் மீது நாட்டத்தைக் குறைக்க ஆன்மீகப் பரிமாணத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்சரி, தவறு ஆகியவற்றை விளங்கிக் கொண்டு, கொள்கைகளையும், நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்; மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், அவர்கள் நலன் விழைய வேண்டும்; சமூகப்  பிணைப்புகளை வளர்த்து, வாழ்க்கையின் நோக்கத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்.

அடிக்கடி நிகழும் பேரிடர்களுக்கான காரணங்களை விளக்கியுள்ள திரு. நாயுடு, “பூமிக் கோளத்துக்கு நாம் தேவையில்லை; ஆனால், நமக்கு இந்தக் கோளம் தேவை. இது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என இதற்கு நாம் மட்டுமே உரிமை கோருவது, இயற்கைச் சமன்பாட்டைக் குலைத்து, வேறுபட்ட தீமைகளுக்கு வழிவகுக்கும்’’ என்று கூறியுள்ளார்.

லார்வா என்னும் கூட்டுப்புழு எப்படி தன்னை முடக்கிக் கொண்டு அழகிய வண்ணத்துப்பூச்சியாக உருவெடுக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திரு.நாயுடுதற்போதைய கொரோனா தொற்றுச் சூழலில் ஏற்பட்டுள்ள அனுபவங்களை முறையாகப் பிரதிபலித்து, மக்கள் வண்ணத்துப் பூச்சிகளாக உருவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பான வருங்கால வாழ்க்கைக்கு அவற்றிடமிருந்து சரியான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


(Release ID: 1638131) Visitor Counter : 314