சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்தியப் புலிகள் கணக்கெடுப்பானது கேமரா மூலம் நடத்தப்படும் உலகின் வனஉயிரின கணக்கெடுப்பாக புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளது
Posted On:
11 JUL 2020 12:43PM by PIB Chennai
அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பு 2018இன் நான்காவது சுற்று முடிவுகள் கடந்த ஆண்டு சர்வதேசப் புலிகள் தினத்தில் பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடியால் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கணக்கெடுப்பு கேமரா மூலம் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய வன உயிரினக் கணக்கெடுப்பாக கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இந்தச் சாதனையை மிக அற்புதமான தருணம் என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டு பிரதம மந்திரியின் வார்த்தைகளில் கூறுவதென்றால் உறுதிப்பாட்டின் மூலம் சாதித்தல் என்ற சுயசார்பு இந்தியாவுக்கான ஒரு பிரகாசமான உதாரணமாக இது விளங்குகிறது என்று கூறியுள்ளார்.
புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிர்ணயிக்கப்பட்ட இலக்கு காலமான 2022க்கு முன்பே அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே (2018) பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா நிறைவேற்றியுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் குறிப்பிட்டார். அண்மைக்காலக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2967 புலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு பார்த்தோம் என்றால் உலகில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 75 சதவீத புலிகள் இந்தியாவில் தான் உள்ளன என்பது தெரியவரும். 2010ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானமானது அதன் இலக்கு ஆண்டான 2022க்கு முன்னரே நிறைவேற்றப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனை வலைத்தளத்தில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது – ”2018-19இல் நடத்தப்பட்ட நான்காவது சுற்றுக் கணக்கெடுப்பு மூலவளம் மற்றும் தகவல் தரவைப் பொறுத்து இன்றைய தேதியில் மிக விரிவான கணக்கெடுப்பாக இருந்தது. பல்வேறு விதமான 141 பகுதிகளில் 26,838 இடங்களில் கேமரா கருவிகள் (ஒரு விலங்கு கடந்து சென்றால் அதனை நகர்வு சென்சார்கள் மூலம் பதிவு செய்யத் தொடங்கும் வகையிலான வெளிப்புற புகைப்படக்கருவிகள்) பொருத்தப்பட்டன. இதன் மூலம் 121,337 சதுர கிலோமீட்டர் (46,848 சதுர மைல்கள்) பகுதியானது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. மொத்தத்தில் 34,858,623 வன உயிரினங்களின் புகைப்படங்கள் கேமராக்களால் பதிவு செய்யப்பட்டன (இவ்வாறு பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களில் 76,651 படங்கள் புலிகள் சம்பந்தமானவை; 51,777 சிறுத்தை தொடர்பானவை; மீதி உள்ள புகைப்படங்கள் இதர உள்ளூர் உயிரினங்கள் தொடர்பானவை). இந்தப் புகைப்படங்களில் இருந்து புலிகளின் தோலில் காணப்படும் உள்ள வரிக்கோட்டு அமைப்பு அங்கீகரிப்பு மென்பொருள் மூலம் 2,461 தனிப்பட்ட ஒவ்வொரு புலியும் அடையாளம் காணப்பட்டன.
முன்னோடி நடவடிக்கையாக கேமராவைப் பயன்படுத்தி 2018 ”இந்தியாவில் புலிகளின் நிலைமை” என்று மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு சர்வேயானது 522,996 கிலோ மீட்டர் (324,975 மைல்) தூரத்தில் காலடித் தடங்களையும் கணக்கெடுப்பு செய்தது. தாவரங்கள் மற்றும் உயிரின எச்சங்கள் குவிந்துள்ள 317,958 இருப்பிடங்கள் மாதிரியாக கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மொத்த வனப்பகுதியின் அளவு 381,200சதுர கிலோமீட்டர் (147,181 சதுர மைல்) என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று தரவு சேகரிப்பு மற்றும் மீளாய்வுக்கான கூட்டு மொத்த உழைப்பு சுமார் 620,795 வேலைநாட்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் அனைத்திந்திய புலிகள் கணக்கீட்டை இந்திய வன உயிரின நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்கிறது. இந்தக் கணக்கெடுப்பை மாநில வனத்துறைகள் மற்றும் இதரப் பங்குதாரர்கள் மேற்கொண்டு நிறைவேற்றுகின்றனர். 2018இன் அண்மைக்கால முடிவுகள் இந்தியாவில் 2967 புலிகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. புலிகளின் எண்ணிக்கையில் 83 சதவீதம் அதாவது 2461 தனிப்பட்ட புலிகள் கேமராவால் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இது கணக்கெடுப்பின் மிகவிரிவான முயற்சிகளை வெளிப்படுத்துகிறது.
புராஜெக்ட் டைகர் என்ற புலிகளைப் பாதுகாக்கும் திட்டம் போன்ற குறிப்பிட்ட வனஉயிரியை மையப்படுத்திய பாதுகாப்புத் திட்டங்கள் உலகிலேயே வேறு ஏதும் இல்லை. 9 புலிகள் பாதுகாப்பகங்களோடு தொடங்கப்பட்ட புராஜெக்ட் டைகர் என்பது இப்போது 50 புலிகள் பாதுகாப்பகங்களோடு செயல்படுகிறது. இந்தியா இப்போது புலிகள் பாதுகாப்பில் தனது தலைமைப் பங்கை உறுதியாக நிலைநாட்டியுள்ளது. இந்தியாவினுடைய நடைமுறைகள் இப்போது உலகின் தங்கதர மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது.
***
(Release ID: 1638000)
Visitor Counter : 388
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam