வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

மாற்ற்றங்களையும், சவால்களையும் எதிர்கொள்ள சைக்கிள் ஓட்டுவோம்: பொலிவுறு நகர இயக்கத்துக்குப் பதிவு தொடக்கம்.

Posted On: 10 JUL 2020 8:53PM by PIB Chennai

இந்தியாவில் மாற்றம் காணவும் சவால்களை எதிர்கொள்ளவும் சைக்கிள் ஓட்டுவோம்என்ற இயக்கத்தில் பங்கேற்பதற்கான பதிவு வெள்ளிக்கிழமை (2020, ஜூலை 10) தொடங்கியது. இந்த இயக்கத் திட்டத்தைபொலிவுறு நகர இயக்கத்தின்” (Smart Cities Mission) ஓர் அம்சமாக நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி கடந்த ஜூன் 25ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தியா எதிர்கொள்ளும் சவால் குறித்து விவரிப்பதற்கான அந்த நிகழ்ச்சியின் போது, பொலிவுறு நகர உருவாக்கத்தில் பங்கேற்போர் பதிவிடுவதற்கு உதவும் வகையில் இணையமும் தொடங்கி வைக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் பல்வேறு பொலிவுறு நகரங்களின் முதன்மைச் செயல் அலுவலர்கள், உள்ளாட்சி ஆணையர்கள், நகர அமைப்புகளின் அலுவலர்கள், பல்வேறு நகர அமைப்புகள், வல்லுநர்கள், குடிமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

நகரங்களில் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் சீரான அணுகுமுறையை உருவாக்குவதற்காக குடிமக்கள், வல்லுநர்கள் ஆகியோருடன் நகரங்கள் இயங்குவதற்கு துணை புரிவதற்காக இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமூக அமைப்புகள் (CSOs), வல்லுநர்கள், தன்னார்வலர்கள் தங்களது திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் நகர அமைப்புகள் இணைந்து செயல்பட வழியமைக்கப்படும். நகரங்கள் முன் வைக்கும் திட்டங்களை மதிப்பிடுவதற்கு நகரக் குடிமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமாகும். இது தொடர்பாக நகரங்களுக்கு உதவ இதற்கான இணையத்தில் சமூக அமைப்புகள் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பாளர்கள், திட்டவல்லுநர்கள், மாணவர்கள், இதில் பங்கேற்க விரும்புவோர் ஆகியோருக்கான உரிய பதிவுக்கான படிவம் இடம்பெற்றுள்ளது.

நகரங்கள் எதிர்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விவரங்களையும், “மாற்றம் காணவும் சவால்களை எதிர்கொள்ளவும் சைக்கிள் ஓட்டுவோம்”  என்ற இந்தத்திட்டத்தில் பங்கேற்பதற்கான படிவத்தையும் https://smartnet.niua.org/indiacyclechallenge/ என்ற இணையத்தில் பெறலாம். குடிமக்கள், வல்லுநர்கள், சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

படிவம்

இந்த சவால் பணியில் பொலிவுறு நகர இயக்கத்தின் (Smart Cities Mission) கீழ் வரும் அனைத்து நகரங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகர்கள், குறிப்பாக 5 லட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களும் பங்கேற்கலாம். இந்தப் பணிச் சவால் இரு கட்டங்களைக் கொண்டவையாகும். தகுதியான நகரங்கள் தங்களது விண்ணப்பங்களை ஜூலை 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் நிரப்பி பதிவு செய்துகொள்ளலாம்.

இரு கட்டங்களாக நடைபெறும் இந்த சவால் பணியில் முதல் கட்டம் அக்டோபர் வரை நடைபெறும். அதில் நகரங்களில் சைக்கிள் ஓட்டுவதற்கு ஊக்கமளிக்கப்படும். அதற்கான உத்தியும் வகுக்குப்படும். 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  11 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றுக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும். அதையடுத்து அடுத்த ஆண்டு 2021 மே மாதம் வரையில் நடைபெறும் இரண்டாம் கட்டத்துக்கான முன் முயற்சியாக தேசிய, சர்வதேச வல்லுநர்களின் வழிகாட்டுதல்கள் பெறப்படும்.

மாற்றம் காணவும் சவால்களை எதிர்கொள்ளவும் சைக்கிள் ஓட்டுவோம்

கோவிட் - 19 தொற்று காலமான தற்போது தனிநபர் வாகன இயக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமுடக்கக் காலத்தில் சைக்கிள் ஓட்டுவது 50 சதவீதம் முதல் 65 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என்று போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Institute for Transportation and Development) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகில் உள்ள பல நகரங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சைக்கிள் ஓட்டுவதையும் பொது சைக்கிள் பயன்பாட்டையும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு சைக்கிள் ஓட்டுவது அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படும் என்று போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு நிறுவன (ITD) ஆய்வு தெரிவிக்கிறது. அதையடுத்து, சைக்கிள் தயாரிப்பில் முதலீடு செய்வதும் அதிகரிக்கும். இது 5.5 மடங்கு லாபத்தை அதிகரிக்கும். குறுகிய தூரத்திற்கு சைக்கிள் பயன்பாடு அதிகரிப்பதால், இந்தியப் பொருளாதாரத்தில் ஆண்டு லாபம் ரூ. 180 கோடி வரையில் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நகரங்களில் சைக்கிள் ஓட்டுவது

கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட சூழலை அடுத்து இந்தியாவின் நகரங்களில் சைக்கிள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் சாலையில் சைக்கிளுக்கு எனத் தனி நிறுத்துமிடம், பாதை வசதிகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சாலை ஆய்வுப்பணிகள் நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்படும். அதையடுத்து அடுத்த ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

அசாம் தலைநகர் குவாஹாட்டியில் பசுமை வழி அறக்கட்டளை (The Green lane Foundation) என்ற நிறுவனம் குவாஹாட்டி நகர மேயர் துணையோடு ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி நகரங்களில் சைக்கிளுக்கு உகந்த சிறந்த வழித்தடங்கள் குறித்து மக்கள் தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் அது நடைமுறைக்கு வரும்.



(Release ID: 1637985) Visitor Counter : 227