பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
கோல் திட்டம் பற்றி தனித்தொகுதி எம்பிக்களுக்கு உணர்த்தும் வகையில் முகநூல் இந்தியாவுடன் சேர்ந்து பழங்குடியின நல அமைச்சகம் நடத்திய வலைதளக் கருத்தரங்கு
Posted On:
10 JUL 2020 4:51PM by PIB Chennai
பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டத் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு '' கோயிங் ஆன்லைன் அஸ்லீடர்ஸ் திட்டம்’’ (கோல்) குறித்து உணர்த்துவதற்கான இணையதளம் மூலமான கருத்தரங்கை முகநூல் இந்தியாவுடன் சேர்ந்து மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.அர்ஜூன் முண்டா, அத்துறைக்கான இணையமைச்சர் திருமதி.ரேணுகாசிங் சவுதா, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மைகவ் மற்றும் முகநூல் இந்தியா பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய திரு.அர்ஜூன் முண்டா, கோல் என்பது டிஜிட்டல் திறன் மற்றும் வழிகாட்டல் முன்முயற்சியாகும் என்று கூறினார். வர்த்தகம், கல்வி, சுகாதாரம், அரசியல், கலை, தொழில்முனைவோர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் பிரபலமான பிரமுகர்களை ஈடுபடுத்தி, இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியின இளைஞர்களுக்கு டிஜிட்டல் பொறிமுறை மூலம் வழிகாட்ட இது பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார். இந்தத் திட்டம் பழங்குடியின இளைஞர்கள் நாளை மாற்றத்தை உருவாக்குபவர்களாக அதிகாரம் பெற உதவும்.
பழங்குடியின இளைஞர்கள் தங்கள் கைபேசிகளை வாழ்க்கையில் தங்கள் இலட்சியங்களை எட்டுவதற்கான கருவியாகப் பயன்படுத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை எட்ட முகநூல் போன்ற சமூகஊடகங்களுடன் அவர்கள் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கோல் என்பது அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று கூறிய அவர், இது வழிகாட்டுபவர், வழிதேடுபவர் இடையே பாலமாகச் செயல்படும் என்றார். இன்றைய உலகில், டிஜிட்டல் ஊடகம் நம் வாழ்க்கையின் அங்கமாகி விட்டது.
பழங்குடியினர் படைப்பாற்றல் பெற்றிருந்தாலும், நம்நாட்டில் அவர்களை ஒதுக்குவது வழக்கமாகிவிட்டது என்று கூறிய திருமதி.ரேணுகாசிங் சவுதா தமது உரையில், தற்போது நிலைமை மாறி, தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் தளமாக கோல் போன்ற டிஜிட்டல் ஊடகங்கள் உள்ளன என்றும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பழங்குடியின மக்கள் டிஜிட்டல் தளங்களுக்கு வருவது அவசியம் என அவர் கூறினார். கோல் பழங்குடியினப் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடியது என்பதால், அவர்கள் அதனுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வழிகாட்டுபவர், வழிதேடுவோர் விகிதம் 1;2 என்ற அளவு இலக்கை இது கொண்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் 9 மாதங்கள் அல்லது 36 வாரங்களைக் கொண்டிருக்கும்;
முதல் மாதத்தில் இருந்து 7-வது மாதம் வரை( 28வாரங்கள்)- பழங்குடியின வழிதேடுபவர்கள் , வழிகாட்டிகளுடன் இணைக்கப்படுவர்.
8-வது மாதம் மற்றும் 9-வது மாதம் (8 வாரங்கள்)-தேர்வு செய்யப்பட்ட வழிதேடுவோர் பிரபலமான நிறுவனங்களில் உள்ளாக்க பயிற்சி வாய்ப்புகளைப் பெறுவர்.
வழிதேடுபவர் மற்றும் வழிகாட்டிகள் தங்களைப் பற்றிய தகவல்களுடன் goal.tribal.gov.in தளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். வழிகாட்டிகளுக்கோ, வழிதேடுபவருக்கோ எந்தவித நிதி உதவியும் வழங்கப்படமாட்டாது. ஆர்வமுள்ள பழங்குடியின இளைஞர்கள் facebook-goal@tribal.gov.in என்ற தளத்திற்கு எழுதலாம். அல்லது அவர்களுக்கு கோல் நிகழ்ச்சி தொடர்பாக ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், அதன் வலைதளத்தில் ‘எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்’ பிரிவுமூலம் தொடர்பு கொள்ளலாம்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த 18-35 வயது பிரிவு இளைஞர்கள் வழிதேடுபவராக விண்ணப்பிக்கலாம். பழங்குடியின இளைஞர்கள் கல்வி நிறுவனத்தில் பங்கேற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும், ஏதாவது தொழில், பயிற்சியில் ஈடுபட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பழங்குடியின இளைஞர்கள் கிராமம் சார்ந்த தங்கள் சமுதாய டிஜிட்டல் இளம்தலைவர்களாக உருவெடுக்க அவர்களை ஊக்குவித்து, வழிகாட்ட விரும்பும், வர்த்தகம், தொழில், கல்வி, சுகாதாரம்,அரசியல்,கலை , தொழில்முனைவோர் ஆகிய துறைகளில் நிபுணர்கள் , வழிகாட்டுபவர்களாக தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியின் முழுநேரமும் வழிகாட்டுபவரின் ஈடுபாடு அவசியமாகும். வழிகாட்டுபவர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக அல்லது அதன் பின்புலம் கொண்டவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------
(Release ID: 1637883)
Visitor Counter : 259