திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் மிக்கத் தொழிலாளர் தேவை மற்றும் விநியோகத்தில் உள்ள இடைவெளியை நிரப்ப செயற்கை நுண்ணறிவு சார்ந்த அசீம் டிஜிட்டல் தளத்தை மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தொடங்கியுள்ளது.

Posted On: 10 JUL 2020 4:36PM by PIB Chennai

திறன்மிக்கத் தொழிலாளர் தேவைக்கும், விநியோகத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்பும் வகையிலும், தகவல் பரவலை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக, மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் இன்று சுயசார்புத் திறன்மிக்க ஊழியர்கள், உரிமையாளர் மேப்பிங்’ (அசீம்) வலைதளத்தைத் தொடங்கியுள்ளதுதிறன்மிக்க ஊழியர்கள் தங்களது நீடித்த வாழ்வாதாரத்தைக் கண்டறிய இது உதவும். வர்த்தகத்தில் போட்டி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன்மிக்க தொழிலாளர்களைப் பணியமர்த்துவதுடன், செயற்கைநுண்ணறிவு சார்ந்த தளம், அவர்களது வாழ்க்கைத் தொழிலை வழங்கி கைதூக்கி விடுவதை நோக்கமாகக் கொண்டதாகும். இதன் மூலம், தொழில் சார்ந்த உரிய திறமைகளை அடைவதுடன், குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ஆராயமுடியும்.

 

 

தொற்றுக்குப் பிந்தைய காலத்தில், புதிய இயல்பாக மாறும் சூழலுக்கு ஏற்ப திறமைகளை மாற்றியமைத்துக்கொள்வது தொழிலகப்பணியாளர்களுக்கு மிகவும் முக்கியமாகும். இது அபரிமிதமாக மாறி வரும் பணி இயல்புக்கு ஏற்ற வகையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து அமையும். துறைகளில் முக்கிய திறன்களை அடையாளம் காணுவதுடன், உலகத்தில் நடைமுறையில் உள்ள சிறந்த முறைகளை வழங்கும் வகையில்நிறுவன உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான திறன்மிக்க ஊழியர்களைத் தேர்வு செய்யும் வழிமுறைகளை வகுப்பதற்கு அசீம் பயன்படும். தொழிலாளர் சந்தை குறித்த ஆய்வு, தரவுகள், போக்குகள் ஆகியவற்றை அசீம் வழங்கும். இதன் மூலம் திறன்மிக்கத் தொழிலாளர்கள் தேவைக்கும், உண்மை நிலைக்கும் உள்ள இடைவெளியை நிரப்பமுடியும். உரியதிறன் தேவை மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாடு ஆகியவற்றைக் கண்டறியவும் இது பெரிதும் உதவும்.

அசீம் தொடங்கப்பட்டதை அறிவித்த மத்தியதிறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் டாக்டர்.மகேந்திரநாத் பாண்டே, ‘’இந்தியா சர்வதேச வாரம் 2020 உச்சி மாநாட்டில், ‘’இந்தியா திறமைகளின் பிறப்பிடம்’’ என்று பிரகடனப்படுத்திய பிரதமர் திரு.நரேந்திரமோடியின் சுயசார்பு இந்தியா தொலை நோக்கின் பயனாக, அசீம் வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. துறைகளில் காணப்படும் திறன்மிக்கத் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கும் நமது இடையறாத முயற்சிக்கு, இது மிகப் பெரிய ஊக்கத்தை அளிக்கும். மேலும், நாட்டின் இளைஞர்களுக்கு அளவில்லாத வேலைவாய்ப்புகளை இது அளிக்கும். குறிப்பாக கோவிட்டுக்குப் பிந்தைய காலத்தில், திறன்மிக்கத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கக் கூடிய வகையில் இந்தியாவின் மீட்புப் பயணத்தை வலுப்படுத்துவதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தேவையைப் பூர்த்தி செய்வதுடன், பலன் சார்ந்த திறன்மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான சிறந்த உபகரணங்களையும், நடைமுறைகளையும், கொண்டு வருவதில் உதவும் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு மேலாண்மையைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்த வகையில் இத்தளம் திறன்சூழலில் செயல்படுத்தக் கூடிய பல்வேறு திட்டங்களில் நெருங்கிய ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவதை உறுதிசெய்யும். தரவுகள் இரட்டிப்பு இருந்தால் அதனைக் கண்காணிக்கவும், நாட்டில் தொழில் பயிற்சி வடிவமைப்பை மாற்றியமைக்கவும், திறன், மேம்பட்டத் திறன், மறுதிறன் ஆகியவற்றை கூடுதல் அமைப்பு உருவாக்கத்தின் மூலம் உறுதி செய்யவும் இது உதவும்’’ என்று கூறினார்.

புளூகாலர் ஊழியர் மேலாண்மையில் பிரசித்தி பெற்ற பெங்களூரைச் சேர்ந்த பெட்டர்பிளேஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, தேசியத்திறன் மேம்பாட்டுக் கழகம் வடிவமைத்துப் பராமரிக்கும் செயலி வடிவிலும், அசீம் https://smis.nsdcindia.org/ கிடைக்கும். திட்ட நோக்கத்துக்கான முறை உருவாக்கும் ஆய்வுகள் மற்றும் போக்குகள் மூலம் கொள்கை வகுப்பு மற்றும் முடிவுகளை ஆதரிப்பதை அசீம்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறைத் தேவை, திறன் இடைவெளி ஆய்வு, மாவட்டம்/மாநிலம்/தொகுப்பு அளவில் தேவை, முக்கிய தொழிலாளர் விநியோகஸ்தர்கள், முக்கிய நுகர்வோர், புலம் பெயர்ப்பு முறை, பன்னோக்கு ஆற்றல் வாய்ப்புகள் உள்பட தேவைகள் பற்றிய ஆய்வுமுறைகளைக் கொண்ட சரியான தரவுகளை உடனுக்குடன் தேசியத் திறன்மேம்பாட்டுக் கழகத்துக்கு அசீம் வழங்கும். தளத்தில் உள்ள மூன்று ஐடி சார்ந்த உள்ளடக்கங்கள்-

•          உரிமையாளர்கள் தளம்- உரிமையாளர் ஆன்போர்டிங், தேவைத் திரட்டு, விண்ணப்பதாரர் தேர்வு

•          டேஷ்போர்டு- அறிக்கைகள், போக்குகள், ஆய்வுகள், இடைவெளி சிறப்புக்கூறு

•          பணிக்கு விண்ணப்பம்- உருவாக்குதல், விண்ணப்பதாரர் பற்றிய தகவலை ஆய்வு செய்தல், வேலைவாய்ப்பு ஆலோசனையைப் பகிர்ந்து கொள்ளுதல்

இருக்கும் வேலைவாய்ப்புக்கு ஏற்ப திறன்மிக்க தொழிலாளர்களை நிரப்பும் வகையிலான உபகரணமாக அசீம் பயன்படுத்தப்படும். தொழிலாளர்களின் பணிப்பங்களிப்பு, துறைகள், புவியியல் ஆகிய தகவல்களைப் பதிவுசெய்வதற்கு தளத்திலும், செயலியிலும் வசதி உள்ளது. தொழிலாளர்கள் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதுடன், அருகாமையில் உள்ள வேலைவாய்ப்புகளைத் தேடவும் முடியும். அசீம் மூலம், வேலை தருவோர், முகமைகள், பணி திரட்டுபவர்கள் தாங்கள் தேடும் குறிப்பிட்ட பிரிவுக்கான திறன்மிக்க தொழிலாளர்களின் தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க முடியும். பல்வேறு துறைகள் குறித்த உறவுநிலைப் பார்வையை ஏற்படுத்த கொள்கை வகுப்பாளர்களுக்கு இது உதவும்.

 **************


(Release ID: 1637865) Visitor Counter : 355