மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
2020-21 கல்வி ஆண்டுக்கான IX-XII வகுப்பு பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ திருத்தியமைத்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அறிவிப்பு
Posted On:
07 JUL 2020 6:21PM by PIB Chennai
நாட்டிலும், உலகிலும் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடச்சுமையைக் குறைக்கும் வகையில் பாடத்திட்டத்தை திருத்துமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ கூறியுள்ளார். அதன்படி, 2020-21-ஆம் கல்வி ஆண்டில், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ திருத்தியமைத்துள்ளது.
பாடத்திட்டத்தைக் குறைப்பது பற்றி ஆலோசனைகளை வழங்குமாறு அனைத்துக் கல்வியாளர்களையும், # மாணவர்களுக்கான பாடத்திட்டம் 2020 என்பதைப் பயன்படுத்தி, சமூக ஊடகத்தில் சில வாரங்களுக்கு முன்பு அவர் தெரிவித்திருந்தார். அந்த வேண்டுகோளுக்கு இணங்க 1500 ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும், கருத்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் திரு. நிஷாங்க் தெரிவித்தார்.
பாடத்திட்ட சிபிஎஸ்இ-யின் பாடத்திட்டக்குழு மற்றும் நிர்வாக அமைப்பின் ஒப்புதலுடன், சம்பந்தப்பட்ட படிப்புக்குழுக்கள் பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவற்றை இறுதி செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கற்றல் அளவை எட்டுவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முக்கிய அம்சங்களைக் கை வைக்காமல், கூடிய மட்டும் 30 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட தலைப்புகளையும் மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளுடன் இணைக்கும் அளவுக்கு விளக்கி கூறுமாறு, பள்ளிகளின் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களை வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உள்மதிப்பீடு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுக்கான தலைப்புகளாக இருக்காது. மாற்றுக் கல்வி அட்டவணை மற்றும் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி கல்வித்திட்டத்தை வகுப்பது குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பிடமிருந்து பெறப்பட்டவை, இணைப்பு பள்ளிகளில் கற்பித்தல் முறையாக இருக்கும்.
தொடக்க வகுப்புகளுக்கு (I-VIII), பள்ளிகள் மாற்றுக் கல்வி அட்டவணை மற்றும் என்சிஇஆர்டி வரையறுத்த கற்றல் வெளிப்பாடுகளைப் பின்பற்றலாம். திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் www.cbseacademic.nic.in என்னும் சிபிஎஸ்இ கல்வி வலைதளத்தில் கிடைக்கும்.
--------------
(Release ID: 1637073)
Visitor Counter : 394