சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ராஜஸ்தானில் ஆஷாக்கள்; கோவிட்-19க்கு எதிரான நீண்ட போராட்டத்தில் மக்களுக்குத் தன்னலமற்ற அர்ப்பணிப்பு

Posted On: 05 JUL 2020 2:38PM by PIB Chennai

ராஜஸ்தானில் அறுவடை காலமான இச்சமயத்தில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது. ஆஷா எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமுதாய சுகாதார ஆர்வலர்கள், இந்த அறுவடை காலத்தில் அந்தப் பணிகளில் உதவ வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர் கோவிட் -19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், குடும்பப் பணிகளில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இதனால், தங்கள் குடும்பத்தினரின் மனக்கசப்பு மற்றும் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோகி தேவிக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் ஆஷா பணியை விடாப்பிடியாகத் தொடர முடிவு செய்தார். இதன் மூலம், சுகாதார வசதிகளை சமுதாயத்தினருக்கு கொண்டு சேர்க்கும் இணைப்பு சேவகராகத் திகழ்கிறார்.

கோவிட் தொடர்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அவரது இடையறாத முயற்சிகளுக்கு கிராமப் பஞ்சாயத்து தலைவரின் பாராட்டு வெகுமதியாக கிடைத்தது. அவரது சேவையை வெளிப்படையாக அவர் புகழ்ந்து பாராட்டினார். இந்தப் பாராட்டு, அவரது பணி குறித்த அவரது குடும்பத்தினரின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரது பணியை அவர்களும் வரவேற்றுள்ளனர். கோகி தேவிக்கு, அவரது சமுதாயம் அங்கீகாரத்தை வழங்கியிருப்பது, அவரது பணியை அயராது தொடரும் வகையில் பெரும் ஊக்கத்தை அளித்திருக்கிறது.

ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் முதல் கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்ட பின்னர், ஆஷாக்கள், கோவிட்-19 மீட்பில் ஒருங்கிணைந்த தூண்களாக பணியாற்றத் தொடங்கிவிட்டனர். மார்ச் 8-ஆம் தேதி, ராஜஸ்தானின் அனைத்து 9876 கிராமப் பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில், கோவிட்-19 எப்படி பரவும், அதைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன, என்பது பற்றி ஆஷாக்கள் விளக்கினர். இந்தப் பொது நடவடிக்கைக்கான பயிற்சிகளை அவர்கள் அனைவரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் துணைச் செவிலியர்களுடன் சேர்ந்து, ஆஷாக்கள் எட்டு கோடி வீடுகளில் சுமார் 39 கோடி மக்களைச் சந்தித்து , தொற்று பற்றிய தகவல்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும், கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடிந்துள்ளது. இவற்றுக்கிடையே, தொற்று அறிகுறி உள்ளவர்களைக் கண்காணிப்பதுடன், ஆஷாக்கள், கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்ற குழந்தைகள் ஆகியோர் மீதும் கவனம் செலுத்தி, சுகாதாரச் சேவைகளை வழங்கி வருகின்றனர். ஆம்புலன்சுகள் கிடைக்காத சமயங்களில், தேவைப்படுவோர் மருத்துவ நிலையங்களைச் சென்றடைய வாகனங்களை அமர்த்திக் கொடுக்கும் பணியையும் அவர்கள் செய்கின்றனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------



(Release ID: 1636662) Visitor Counter : 238