சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மேகாலயா ஆஷாக்கள்: கோவிட்-19க்கு எதிரான சமுதாய முயற்சிகளில் ஒருங்கிணைந்துள்ளனர்.


கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை வலுப்படுத்த 6700 ஆஷாக்கள்

Posted On: 04 JUL 2020 3:39PM by PIB Chennai

மேகாலயாவில் முதன் முதலாக நோய்த்தொற்று அறிவிக்கப்பட்டவுடனேயே அடையாளப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் நோய்த்தொற்று உள்ளவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் குழுவின் ஒருங்கிணைந்த அங்கத்தினராக செயல்படுவதற்கான பயிற்சி ஆஷாக்களுக்கும், ஆஷா ஊக்குநர்களுக்கும் அளிக்கப்பட்டது.  மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 70 வீடுகளுக்கும் அதிகமாக உள்ள மௌதாரியா பொம்லக்கரை கிராமத்தில் நோய்த்தொற்று ஒருவருக்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.    உடனடியாக அந்தக் கிராமத்தின் ஆஷா பணியாளரான எஸ்.குர்க்லாங் தேவி என்பவரை முக்கிய உறுப்பினராகக் கொண்டு சமுதாய கோவிட் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவரோடு முதன்மைத் தொடர்பில் இருந்து 35 நபர்களை கண்டறிவதில் அவர் முக்கியமான பங்காற்றினார்.  ஏனைய கிராம மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் கோவிட் குழு ஆலோசனை கூறியது.  வீட்டிலேயே தனிமைப்டுத்திக் கொண்டு இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நிலையான நெறிமுறைகளை குர்க்லாங் தேவி அவர்களுக்கு எடுத்துரைத்ததோடு, அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர தேவைகளையும் கவனித்துக் கொண்டார். 

கிராமத் தன்னார்வலர்களுடன் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட கிராம மக்களுக்கு வீடுவீடாகச் சென்று ரேஷன் பொருள்கள் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.  குழந்தை பிறந்த வீடுகள், கர்ப்பிணிகள், வயதானோர் மற்றும் காசநோய், உயர்இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை உள்ள நோயாளிகள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் தொடர் கண்காணிப்பும் சுகாதாரச் சேவைகளையும் வழங்கினார்.  கர்ப்பிணிகள் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை பெற்றுக் கொள்ள உதவியதோடு, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உரிய காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் அவர் உதவினார்.  தனது கிராம மக்களின் உதவியோடு அவர் தனது வழக்கமான பணிகளைச் செய்ததோடு நின்று விடாமல் கூடுதலாக கோவிட்-19 தொடர்பான பணிகளையும் செய்தார்.  இதனால் கோவிட் அல்லாத அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளும் அந்தக் கிராமத்தில் தடையின்றி கிடைத்தன. 

சமுதாயத்தினர் மற்றும் ஆஷா பணியாளரின் கூட்டு முயற்சியினால் இன்று பொம்லக்கரை கிராமம் கோவிட்-19 இல்லாத கிராமமாக மாறியுள்ளது. 

மேகாலயாவின் முன்னணிப் பணியாளர்கள் இந்த நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி உள்ளனர்.  கோவிட்-19க்கு எதிரான மாநில அரசின் போராட்டத்தில் கிராம அளவில் எடுக்கும் முயற்சிகளில் ஆஷா பணியாளர்கள் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.  அனைத்து நிலைகளிலும் 6700 ஆஷா பணியாளர்கள் கோவிட் கிராம சுகாதார விழிப்புணர்வு மற்றும் தொற்றுள்ளோரைக் கண்டறியும் குழுவின் ஒரு அங்கமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்தக் குழுக்கள் கைகழுவுதல், முகக்கவசம் / முகத்திரைகள் அணிதல் தனி நபர் இடைவெளியைப் பராமரித்தல் போன்ற கோவிட்-19 நோய்த்தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  நோய்த்தொற்று உள்ளவர்களை அடையாளம் காணும் முயற்சியின் வழியாக சரியான நேரத்தில் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்க உதவ முடிகிறது. 

******



(Release ID: 1636447) Visitor Counter : 182