வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
‘பிரேரக் தவுர் சம்மான்’ என்ற புதிய விருது அறிமுகம்
Posted On:
03 JUL 2020 4:01PM by PIB Chennai
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் நடத்தப்படும் நகர்ப்புற இந்தியாவின் வருடாந்திரத் தூய்மைப் பணிக் கணக்கெடுப்பான ஸ்வச் சர்வேக்சன் 2021-க்கான ஆறாவது கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு.ஹர்தீப்சிங் பூரி, இந்த வருடாந்திரக் கணக்கெடுப்புப் பணி, பழக்க வழக்க மாற்றங்களுக்கு தாக்குப் பிடிக்கச் செய்யும் வகையில், கணக்கெடுப்பு மேலும் வலுவானதாக அமைவதை உறுதி செய்யும் விதமாக, ஆண்டுதோறும் புதுமையான முறையில் மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது என்றார். துப்புரவு மதிப்புச் சங்கிலியின் நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென்ற இத்துறையின் முயற்சிகளை மனதிற்கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே, வருடாந்திர தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-க்கான குறிகாட்டிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு என்ற அளவுகோலைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலாளர் திரு.துர்கா சங்கர் மிஸ்ரா, வருடாந்திர தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-க்கான நடைமுறைகள் மற்றும் பல்வேறு அளவுகோல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
வருடாந்திரத் தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-ஐ ஒட்டி, ஊக்கமளிக்கும் மரியாதை என்ற பொருள்படும் ‘பிரேரக் தவுர் சம்மான்‘ (Prerak Dauur Samman) எனப்படும் புதிய விருது ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார். பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் ஆர்வத்துடன் பணியாற்றுவோர் என்ற 5 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று நகரங்கள் அங்கீகரிக்கப்படும். மக்கள் தொகை அடிப்டையில் நகரங்களை மதிப்பீடு செய்யும் தற்போதைய நடைமுறை கைவிடப்பட்டு, கீழ்காணும் ஆறு குறிகாட்டிச் செயல்பாடுகள் அடிப்படையில் நகரங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன:
• கழிவுகளை ஈரப்பதம், உலர்ந்த மற்றும் நச்சு என மூன்று வகைகளாகப் பிரித்தல்
• ஈரப்பதமுள்ள கழிவுகளின் அளவுக்கேற்ற சுத்திகரிப்புத் திறன்
• சுத்திகரிப்பு மற்றும் ஈரப்பதமுள்ள மற்றும் உலர் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்
• கட்டுமானக் கழிவுப் பொருள்களை சுத்திகரித்தல்
• நிலத்தில் கலக்கும் கழிவின் சதவீதம்
• நகரங்களின் சுகாதார நிலை
இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அமைச்சர், வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பு என்பது, உண்மையான ‘மக்கள் இயக்கம்‘ என்ற உணர்வுடன் குடிமக்கள் பங்கேற்பதற்கான ஒரு சாதனமாக மாறியுள்ளது என்றார். ”குடிமக்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல், புதிதாகத் தொடங்கப்படும் தொழில்கள், தொழில்முனைவோர் மற்றும் தூய்மைப்பணி முன்னோடிகள் போன்ற பல்வேறு குறிகாட்டிகளை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், மக்கள் பங்கேற்புக்கு கவனம் செலுத்தப்படுவது இந்த ஆண்டு உச்சத்திற்கு சென்றுள்ளது. “ இந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைக்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புற கணினிவழித் தகவல் இணையதளமும் தொடங்கிவைக்கப்பட்டது.
(Release ID: 1636209)
Visitor Counter : 244