அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மருந்து கண்டுபிடிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் தேசிய அளவிலான முதலாவது முன்முயற்சியாக, மருந்து கண்டுபிடிப்பு ஹேக்கத்தான்2020( DDH2020) போட்டிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது

Posted On: 02 JUL 2020 5:29PM by PIB Chennai

மருந்து கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் போட்டிகளை,  மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்  ஆகியோர் முன்னிலையில், மத்திய அரசு  புதுதில்லியில் இன்று(ஜுலை 02,2020) தொடங்கியது.  மருந்து கண்டுபிடிப்புக்கான இந்த ஹேக்கத்தான், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் புதுமை கண்டுபிடிப்புப் பிரிவு மற்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கூட்டு முயற்சியாக,  நவீன கணிப்பு மேம்பாட்டு மையம், மைகவ் மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. 

மருந்து கண்டுபிடிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் முயற்சியாக தேசிய அளவில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் இந்த  ஹேக்கத்தானில்,  கணினி அறிவியல், வேதியியல், மருந்தியல், மருத்துவ அறிவியல், அடிப்படை அறிவியல் மற்றும் உயிரிதொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள்,  பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.  

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில்,   பேசுகையில்,  “ நம் நாட்டில் கணிப்பு மருந்து கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.  இந்த முன்முயற்சியில், ஹேக்கத்தான் வாயிலாக, சக்திவாய்ந்த மருந்து மூலக்கூறுகளை அடையாளம் காண்பதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதுமைக் கண்டுபிடிப்புப் பிரிவு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகிய அமைப்புகள் தீவிர கவனம் செலுத்தும் வேளையில்,  அடையாளம் காணப்பட்ட மூலக்கூறுகளை முன்னெடுத்துச் சென்று, பகுப்பாய்வு மற்றும் ஆய்வுக்கூட சோதனை அடிப்படையில், செயல்திறன், நச்சுத்தன்மை, உணர்திறன்  மற்றும் தனித்தன்மைகள் குறித்து அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில்  ஆய்வு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.“   புதிய மருந்து கண்டுபிடிப்பு என்பது, சிக்கலான, செலவுமிகுந்த, கடினமான மற்றும் நீண்ட கால அவகாசம் தேவைப்படும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.   “ கோவிட்-19ஐக் கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில மருந்துகளை, மிக விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக, அவற்றை  மருத்துவமனைகளில் பரிசோதித்து வரும் வேளையில்,  பொருத்தமான, மறுபயன்பாடு செய்யத்தக்க வேறு  சில மருந்துகளையும் நாம் கண்டுபிடிப்பதுடன்,  கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான குறிப்பிட்ட மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டியதும் அவசியம்.“  என டாக்டர் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தினார்.   “இயந்திரவழி கற்றல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய அளவிலான புள்ளிவிவரம் போன்ற கணிப்பு முறைகளைப் பயன்படுத்தக்கூடிய  கணினிவழி மருந்து கண்டுபிடிப்பு, இந்தப் பணிகளை விரைவுபடுத்த உதவும்“ என்றும் அவர் குறிப்பிட்டார்.  

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பேசுகையில், “இதுபோன்ற ஹேக்கத்தான் போட்டிகளை நடத்துவதில்,  மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் போன்றவை மிகுந்த அனுபவம் பெற்றிருந்தாலும்,  மாபெரும் அறிவியல் சவாலை எதிர்கொள்ள, ஹேக்கத்தானைப் பயன்படுத்துவது இதுவே முதல்முறை என்றார்.   அனைத்திற்கும் மேலாக,  இந்த முன்முயற்சியில்,  உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள்/ பேராசிரியர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவதுடன், நமது முயற்சிகளுக்கு உறுதுணையாக, சர்வதேச அளவில் கிடைக்கும் திறமைவாய்ந்தவர்கள் நம்முடன் இணைந்து, ஒத்துழைக்கச் செய்வதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தப்படும்“ என்றும் அவர் தெரிவித்தார்.  

                                                                 *****



(Release ID: 1636126) Visitor Counter : 141